

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் துளைவழி அறுவை சிகிச்சைக்கு தனிப் பிரிவு மற்றும் ஆராய்ச்சி பட்டமேற்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சை துறை சார்பில் துளைவழி அறுவை சிகிச்சை பிரிவு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடந்தது. சென்னை மருத்துவக் கல்லூரியில் நடந்த விழாவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) மற்றும் மருத்துவமனை டீன் வி.கனகசபை தலைமை தாங்கினார். பொது அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் எஸ்.தெய்வநாயகம், துளைவழி அறுவை சிகிச்சை பிரிவு இணை பேராசிரியர் டாக்டர் பு.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துளைவழி அறுவை சிகிச்சை பிரிவையும் ஆராய்ச்சி பட்டமேற்படிப்பையும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:
மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடுத்தபடியாக நாட்டிலேயே முதல்முறையாக இந்த மருத்துவமனையில்தான் துளைவழி அறுவை சிகிச்சைக்கு தனிப் பிரிவும் எம்.எஸ். படித்தவர்களுக்கு ஆராய்ச்சி பட்டமேற்படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவர்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 5 லட்சத்து 45 ஆயிரத்து 240 பேர் பயனடைந்துள்ளனர். ரூ.1,176 கோடியை காப்பீட்டுக்காக அரசு கொடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் மட்டும் 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதன் மூலம் அரசு மருத்துவனைகளுக்கு ரூ.418 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ரூ.67.43 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் ரூ.55 கோடியில் மருத்துவமனை உள்கட்டமைப்பு மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
துளைவழி அறுவை சிகிச்சை பிரிவு இணை பேராசிரியர் டாக்டர் பு.பாலாஜி கூறுகையில், ‘‘புதிதாக தொடங்கப்பட்டுள்ள துளைவழி அறுவை சிகிச்சை பிரிவு, டவர்-2 கட்டிடத்தில் 20 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. குடல் இறக்கம், குடல் வால், சினை உறுப்பு போன்றவற்றில் துளைவழி அறுவை சிகிச்சை செய்யப்படும். இங்கு மாதம் சுமார் 50 துளைவழி அறுவை சிகிச்சை செய்யலாம்’’ என்றார்.
டீன் கனகசபை கூறுகையில், ‘‘சிறிய துளை போட்டு லேப்ராஸ்கோப்பி மூலம் ஆபரேஷன் செய்வது, துளைவழி அறுவை சிகிச்சையாகும். இந்த சிகிச்சையால் ரத்தம் அதிகம் வெளியேறாது. நோயாளிகள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பலாம்’’ என்றார்.