

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்களில் ஊடு பயிராக, பழ மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. குன்னூர், கரும்பாலம், கிளிஞ்சடா, சட்டன், தூதூர்மட்டம், கொலக்கொம்பை, மஞ்சக்கொம்பை, கோத்தகிரி ஆகிய பகுதியில் பேரிக்காய், ஆரஞ்சு பழங்களும், பர்லியாறு பகுதிகளில் பப்ளிமாஸ், எடப்பள்ளி, கட்டபெட்டு ஆகிய பகுதிகளில் பப்பினோ, பேசன் ப்ரூட் ஆகிய பழங்கள் சாகுபடி செய்யப்பட்டுகின்றன.
இந்த பழங்களில் மருத்துவ குணங்கள் அதிகம். பப்பினோ பழம் உடலில் குளர்ச்சியை ஏற்படுத்தி, பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
பப்பினோ பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி, பி காம்பிளக்ஸ் மற்றும் கே சத்துகள் உள்ளன. பலவீனமான இதயம் கொண்டவர்களின் இதயத்தை பலப்படுத்தும் குணம் இந்த பழத்துக்கு உண்டு. கேன்சர் நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. பழத்தில் குறிப்பிட்ட அளவு பொட்டாசியம் உள்ளதால், குறைந்த ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை உண்டு.
ஆரஞ்சு மற்றும் பேரிக்காய் பழங்கள் உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், வைட்டமின் சி சத்து மற்றும் நீர் சத்துக்கள் நிறைந்தன.
நீலகிரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்கள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளை இணைக்கும் முக்கிய மலைத் தொடராகும். இந்த மலைத் தொடரில், ஆயிரக்கணக்கான அரிய வகை தாவரங்கள் உள்ளன.
இந்நிலையில் குன்னூரில் புதிய ரக அத்தி பழ வகை கண்டறியப்பட்டுள்ளது. கோவை, பொட்டானிக்கல் சர்வே ஆப் இந்தியா ஆராய்ச்சியாளர்கள் சுதாகர், கள உதவியாளர் மெய் அழகன் ஆகியோர், குன்னூர் லேம்ஸ் ராக் பகுதியில் மேற்கொண்ட ஆய்வில், நீலகிரிக்கு உரித்தான மற்றும் அரிய வகையான அத்திப் பழ வகையை கண்டறிந்துள்ளனர்.
‘பிஸ்கஸ் மெக்ரோகார்பா’ என்ற இந்த அத்தி ரகம், தமிழகத்தில் நீலகிரி, பழனி மலைகள், கேரளாவில் திருவாங்கூர் மலைகளில் மட்டுமே காணப்படுகின்றன.
இந்த தாவரம் 1000 மீட்டர் முதல் 2500 மீட்டர் உயரமான இடங்களில் மட்டுமே வளரக் கூடியவை. இந்த அத்திப் பழ தாவரம் லேம்ஸ் ராக், அவலாஞ்சி, நடுவட்டம் ஆகிய பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது என சுதாகர், மெய் அழகன் தெரிவிக்கின்றனர்.
நீலகிரியில் வளரும் பழங்கள் சுவையுடன் மருத்துவ குணங்களும் கொண்டதால், இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.