

இந்த வாரக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் டாக்டருமான சு. முத்துச் செல்லக்குமார்:
நான் ‘ஹெபடைட்டிஸ் பி’ நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் . ஆண் உறுப்பில் எரிச்சல் அதிகமாக உள்ளது, வெள்ளைப்படுகிறது. என்ன சிகிச்சை எடுத்தால் எனக்குக் குணம் கிடைக்கும்?
- அசோக், மின்னஞ்சல்
இந்த நோய் ரத்தத்தின் மூலமாகவும் பரவலாம் என்றாலும், பொதுவாக உடலுறவால் பரவக்கூடிய நோய். இதேபோல உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆண் உறுப்பு எரிச்சலுக்கு பால்வினை நோய் (Gonorrhea) காரணமாக இருக்கலாம். இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கப் பால்வினை நோய் சிறப்பு மருத்துவரைப் பார்க்க வேண்டும். முறையாகப் பரிசோதனை செய்தால் நோயைக் கண்டறிந்து சிகிச்சை எடுக்கலாம்.
‘ஹெபடைட்டிஸ் பி' வைரஸ் தொற்றால் கல்லீரலும் பாதிக்கப்படும். முதலில் இந்தத் தொற்று சமீபத்தில் ஏற்பட்டதா (Acute hepatitis B) அல்லது நீண்ட காலத் தொற்றா (Chronic hepatitis B) என்பதை ரத்தப் பரிசோதனைகள் மூலம் அறிந்துகொள்ள வேண்டும். இது இழைநார் வளர்ச்சி நோயாகவோ (cirrhosis), கல்லீரல் புற்றுநோயாகவோ (Hepatocellular carcinoma - HCC) மாறும் சாத்தியமும் உள்ளது. இந்த நோய்க்குச் சிகிச்சை அளிக்கப் பல்வேறு மருந்துகள் உள்ளன.
உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும். அப்படி நோய் தொற்றவில்லை என்றால், ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தடுப்பூசியை அவர் போட்டுக்கொள்ளலாம்.
உங்களுக்கு மது, புகைப்பழக்கம் இருந்தால் உடனே நிறுத்த வேண்டும். இரைப்பை குடலியல் நிபுணர் (Gastroenterologist) அல்லது சிறப்பு கல்லீரல் நோய் நிபுணர் (Hepatologist) ஆலோசனையைப் பெற்று உடனே சிகிச்சையைத் தொடங்குவது நல்லது.
எனது தந்தைக்குக் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளது. இது தொடர்பான பரிசோதனை விவரங்களை இணைத்துள்ளேன். இதற்கான சரியான சிகிச்சை முறையைப் பரிந்துரைக்க முடியுமா?
- பாலகணேஷ், சென்னை
உங்கள் தந்தையின் கல்லீரல் பெரிதாகியிருக்கிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். அவருக்கு மதுப்பழக்கம் இருக்கிறதா என்பதைப் பற்றி நீங்கள் கூறவில்லை. ஒரு வேளை இருந்தால், அதை நிறுத்துவதற்கான முயற்சியில் கவனம் தேவை.
இரண்டாவது, அவருடைய பித்தப்பையில் கற்கள் (Gall stones) இருப்பதுடன், பித்தப்பை பெரிதாகி உட்சுவரும் தடிமனாகியிருப்பது, பித்தப்பையில் அழற்சி (Cholecystitis) ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது. பித்தப்பை கற்களுடன் பித்தப்பை அழற்சியும் இருப்பதால், அறுவை சிகிச்சை மூலம் பித்தப் பையை அகற்ற வேண்டியிருக்கும்.
மூன்றாவது, அவருடைய வலது அட்ரினல் சுரப்பியில் ஒரு கட்டி ஏற்பட்டுள்ளது. இது கொழுப்பு, ரத்த அணுக்கள் கொண்ட ஒரு வகை சாதாரணக் கட்டிதான். சிலருக்கு அபூர்வமாக இப்படி ஏற்படலாம். இது புற்றுநோய் அல்ல. எனவே, பயப்படத் தேவையில்லை.
இது மிகப் பெரிதாகிப் பக்கத்திலுள்ள உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டியிருக்கும். பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையின்போது, இதையும் சேர்த்து எடுத்துவிடலாம். கடைசியாக, சிறுநீரகங்களிலும் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிகிறது. இது பெரும்பாலும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு வரக்கூடும்.
நீங்கள் அனுப்பிய விவரங்களின் அடிப்படையில் இவை தெரியவருகின்றன. அதேநேரம் நோயாளியின் முழு விவரங்கள், எடுத்து வரும் சிகிச்சைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அறிவதுடன், அவரை மருத்துவ நிபுணர் ஒருவர் முழுமையாகப் பரிசோதித்தால்தான் உரிய சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.
-
சு. முத்துச் செல்லக்குமார்:
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002