

“நான் பாடினா நல்லாத்தான் இருக்கும். என் குரல் அப்படி. ஆனால், ஒரு நாள் தொண்டையில் திடீர் கரகரப்பு. அப்போதே பதறிப் போய்ச் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்த கஷாயம் போட்டுப் பாடகர் ரேஞ்சுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம் எடுத்துக்கொண்டேன்" என்றார் அலுவலக நண்பர். இவர் பெரிதாகப் பயப்படாவிட்டாலும், தொண்டையில் நோய்த்தொற்று ஏற்பட்டால், கொஞ்சம் கவலைப்படுவது நல்லது. ஏன்? தொண்டை நோய்த்தொற்றுக்கும் இதயத்துக்கும் தொடர்பு இருக்கிறதே.
தொண்டை தொற்று ஏற்பட்டவுடன் தண்ணீரில் உப்பைக் கலந்து வாய் கொப்பளித்தல், குளிர்பானங்களைத் தவிர்த்தல் போதும் என்றெல்லாம் இருப்பது வழக்கம். தொண்டை கரகரப்பு, காய்ச்சல் எல்லாம் தானே ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்ற அலட்சியப் போக்கு இயல்பாகவே நம் அனைவரிடமும் உண்டு. ஆனால் தொண்டை நோய்த்தொற்று இதயச் செயல்பாட்டைப் பாதிக்கும் என்ற அதிர்ச்சிகரமான செய்தி, பலரைப் போலவே என் அலுவலக நண்பருக்கும் அப்போது தெரியாது.
மரிக்கா என்ற இளம்பெண்ணுக்குப் பிறவியில் இதயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஓடியாடி விளையாடிக்கொண்டும், பள்ளிக்குச் சென்றுகொண்டும் இருந்தாள். திடீரென்று ஒரு நாள் மயக்கமடைந்து விழுந்தாள். சாதாரண மயக்கத்துக்காகச் சிகிச்சை பெற மருத்துவமனை வந்தவளின் இதயம் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
இதயப் பாதிப்பினால் ரத்த ஓட்டம் சீர்குலைந்து மூளைக்கு ரத்தம் சரியாகச் செல்லாததாலேயே மயங்கி விழுந்திருக்கிறாள் மரிக்கா. இதய வால்வில் ஒரே வழியாகச் சென்று வர வேண்டிய ரத்தமானது, இரு வழியாகச் சென்று வரத் தொடங்கியது. மேலும் உள்ளே சென்ற ரத்தமானது முழுமையாக வெளியேறாமல், பாதி மட்டுமே வெளியேற, மீதி ரத்தம் ஒவ்வொரு முறையும் அவளின் இதயத்திலேயே தங்கிவிட்டது.
இந்த அதிகப்படியான ரத்தத்தைத் தாங்குவதற்காக இதயம் பெருக்கத் தொடங்கியது. இதற்காக மருத்துவச் சிகிச்சை பெற ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள மருத்துவமனையை மரிக்கா அணுகியபோது சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் ஃபிஜியைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க டாக்டர் கே.எம். செரியன் தலைமையிலான மருத்துவர் குழு தயாரானது. முன்னாட்களில் தொண்டையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாகவே இதயம் ருமாட்டிஸத்தால் தாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் வீங்கிப் போய்விட்ட இதயத்தை அறுவைசிகிச்சை மூலமே சீரமைக்க முடியும் என மருத்துவக் குழு தீர்மானித்தது. சிகிச்சைக்குப் பின் நலமடைந்தாள் மரிக்கா.
ஒரு தொண்டை நோய்த்தொற்று இதயத்தை இப்படியும் பாதிக்குமா? ஆம், பதினைந்து நாட்களுக்கு மேல் தொண்டை நோய்த்தொற்றும் தொடர்ந்து காய்ச்சலும் இருந்தால் அலட்சியம் செய்துவிடாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவ மாணவிகளிடம் இந்நோய்த்தொற்று விரைவாகப் பரவும். இந்நோய் ராணுவ வீரர்களையும் தாக்கியுள்ளது. எந்த வயதிலும் இந்த நோய்த்தொற்று ஏற்படலாம். உடனடியாக மருத்துவரை அணுகுவதே சாலச் சிறந்தது.