

நாடு முழுவதும் நிலவுகிற தட்டுப்பாடுகளின் வரிசையில் மருந்துகளின் பெயர்களும் சேர்வது ஆபத்தானது. ஆனால், அப்படியொரு ஆபத்தில்தான் சிக்கியிருக்கிறது இந்தியச் சுகாதாரத் துறை. அதுவும் நாட்டிலேயே மிக மோசமான நிலையில் உள்ள எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தரப்படும் மருந்து தற்போது கிடைப்பதில்லை.
குழந்தைகளின் கோரிக்கை
லோபினவிர் (Lopinavir) எனப்படும் இந்த உயிர் காக்கும் மருந்துக்குத் தற்போது கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்த மருந்து எந்த மாநிலத்திலும் இருப்பு இல்லை என்கிற நிலையில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர உதவி கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். மூன்று வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட 637 குழந்தைகள் இதில் கையெழுத்து இட்டிருக்கிறார்கள்.
“வாங்கிய மருந்துகளுக்கான தொகையைத் தராமல் மத்திய அரசு பல ஆண்டுகளாகப் பண நிலுவை வைத்திருப்பதால் மேற்கண்ட மருந்தைத் தயாரிக்கும் சிப்லா நிறுவனம், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிர் காக்கும் மருந்துத் தயாரிப்பை நிறுத்திவைத்திருக்கிறது. குறிப்பிட்ட இந்த மருந்து பெரிய லாபத்தைத் தராத நிலையில், அரசு அமைப்பு காலம் தாழ்த்திப் பணத்தைக் கொடுப்பது சிக்கலை அதிகரித்திருக்கிறது. போதுமான மருந்துகள் இல்லாததால் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு பெரும் சிக்கலைச் சந்தித்துவருகிறது” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் மெத்தனம்
இந்திய அளவில் எச்.ஐ.வி. தொடர்பான மருந்துகளைத் தயாரிப்பதில் சிப்லா நிறுவனம் முதன்மையானது. அந்த நிறுவனத்துக்குத் தர வேண்டிய பணத்தை மத்தியச் சுகாதாரத் துறை தராததைத் தொடர்ந்து, அரசு நடத்தும் மருந்து ஏலத்தில் அந்த நிறுவனம் கலந்துகொள்வதில்லை. இதனால் எழுந்திருக்கும் மருந்துத் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்கு, உள்ளூர் சந்தையில் மருந்துகளைக் கொள்முதல் செய்துகொள்ளும்படி மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
ஆனால், சிப்லா நிறுவனம் மட்டும்தான் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான உயிர் காக்கும் மருந்தைத் தயாரிக்கிறது. வேறு எந்த நிறுவனமும் அந்த மருந்தைத் தயாரிப்பதில்லை. பிறகு எப்படி உள்ளூர் நிறுவனங்களிடம் இருந்து மருந்து வாங்க முடியும் என்று எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கேள்வி எழுப்புகிறார்கள்.
நம்பிக்கை நிறைவேறுமா?
“இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட வர்களின் நலன் சார்ந்துதான் எங்கள் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இதேபோன்ற அணுகுமுறையைப் பணத்தைத் தருவதில் அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார் சிப்லா நிறுவனத்தில் தலைமை செயல் அலுவலர் உமங் வோரா. அரசிடம் இருந்து பணம் கிடைக்கும் என்ற உத்தரவாதமோ, வேறு உலக நிதியோ கிடைக்காதவரை மருந்தை விநியோகிக்கத் தொடங்கப் போவதில்லை என்பதில் அந்த நிறுவனம் உறுதியாக இருக்கிறது.
“எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் காக்க வேண்டிய கடமையிலிருந்து அரசு தவறிவிட்டது. உலகம் முழுவதும் எச்.ஐ.வி.க்கான மருந்துகளை விநியோகிக்கும் சிப்லா நிறுவனம், தன் பொறுப்பில் இருந்து விலகுவதும் ஏற்புடையதல்ல,” என்கிறார் வழக்கறிஞர்கள் குழுவின் எச்.ஐ.வி. பிரிவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர்.
பிரதமர், நிதி அமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோரிடம் உதவி கேட்டு எழுதியிருக்கும் கடிதம்தான் தங்களது கடைசி நம்பிக்கை என்று காத்திருக்கிறார்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்.
தி இந்து (ஆங்கிலம்) | தமிழில்: ப்ரதிமா