

அநேகமாக, நம்மில் அநேகம் பேர் மறந்து போய்விட்ட வாக்கியம் ‘நலம், நலமறிய ஆவல்'. அதிகபட்சமாகச் சினிமா பாடலாக வேண்டுமானால் ஞாபகம் இருக்கும்.
தொலைபேசியும் இணையமும் உலகை விரல் நுனிக்குள் கொண்டுவந்துவிட்டதால் சுருங்கிப் போய்விட்ட உலகில் இப்போதெல்லாம் தபால் கார்டோ கவரோ வாங்கிவந்து, இந்தச் சொற்றொடரில் துவங்கி, பிடித்தமான பேனாவில், மனதை மையாக்கி எழுதி, ஏக்கமும் எதிர்பார்ப்புமாய் எச்சிலைத் தடவி ஒட்டி, சிவப்பு நிறத் தபால்பெட்டியில் போட்டு, சிறிது கணம் அங்கேயே நின்றுவிட்டுவரும் கணங்கள் தொலைந்து போய் வருடங்கள் சில ஆகிவிட்டன.
நடுத்தரவயதினருக்கு இந்தச் சொற்றொடரை எங்குப் படித்தாலும் அது நேசமாய்த் தரும் உச்சி முகர்ந்த முத்தங்கள் மாதிரிச் சிலிர்ப்பு தரும். ஒட்டுமொத்தமாய், நலம் குறித்த விசாரிப்புகள் மருத்துவமனைகளிலும் மருத்துவரிடமும் மட்டுமே சாத்தியப்படுவதாய்ப் போய் விட்ட அதிவேக உலகம் இது.
ஆனால் அங்கேயும்கூட ‘‘நலம் விசாரிப்புக்கு நேரமில்லை; அவசியமில்லை; சரியில்லை;'' எனப் பல காரணங்களைச் சொல்லிக்கொண்டு மருத்துவர்- நோயர் உறவு என்பது கடவுள்-பக்தன் உறவாகவோ அல்லது வணிகர் - வாடிக்கையாளர் உறவாகவோ மட்டுமே புரிந்துகொள்ளப்படுகிறது.
‘‘இதை டாக்டரிடம் எப்படிக் கேட்பது, கோவிச்சுப்பாரோ?'', ‘‘என்ன டயட் எடுத்துக்கணும்னு சொல்லலையே, பதட்டத்தில் நாமளும் கேட்க மறந்துட்டோமே''; ‘‘இவரு ஹார்ட்டுக்கு மருந்து கொடுக்கிறார்; மூட்டுவலிக்குச் சித்த வைத்தியம் எடுத்துக்கொண்டிருக்கிறோமே- ரெண்டும் சரியா வருமா? ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுமா?'' ‘‘ எதை முதல்ல சாப்பிடணும்; சேர்த்துச் சாப்பிடலாமா? கூடாதா?''. ‘‘ஓடிட்டு யோகா பண்ணனுமா? அல்லது யோகா செஞ்சுட்டு அப்புறமா ஓடணுமா?''. ‘‘எவ்ளோ நாளைக்கு இந்த மருந்தைச் சாப்பிடறது?''... இப்படி எத்தனை எத்தனை கேள்விகள், மருத்துவரைப் பார்ப்பதற்கு முன்னும் பின்னும் காத்திருக்கின்றன.
‘‘நலம், நலமறிய ஆவல் பகுதி'' இந்தக் கேள்விகளுக்குக் காய்ப்பு உவப்பில்லாத பதில் தர முனைந்திடும். அதேசமயம் இது பிரிஸ்கிரிப்ஷன் தரும் பக்கமல்ல. இரண்டாம் அறிவுரை (செகண்ட் ஒப்பீனியன்) தரும் விற்பன்னர் பகுதியும் அல்ல. ‘‘இதோ! அங்க போனால் உடனடி நிவாரணம்'' என வழிகாட்டும் பக்கமும் அல்ல.
முன்பு ஒவ்வொரு பாட்டியிடமும் அவர்களுடைய அஞ்சறைப் பெட்டியிடமும் இருந்த நமது தொல்லறிவையும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் இப்போது அசாத்தியமாய் விஞ்சி நிற்கும் நவீன மருத்துவ அறிவியல் தரவுகளையும் கோடிட்டுக் காட்டும் பக்கமாகவே இது இருக்கும்.
அகண்ட சீனாவில் சாத்தியமான ஒருங்கிணைந்த மருத்துவத்தை, வளர்ந்த கனடாவிலும் இங்கிலாந்திலும் தும்மல் மூக்கடைப்பிலிருந்து வாழ்வின் விளிம்பில் நிற்கும் நோய்க் கூட்டம் வரை அத்தனைக்கும் வாசல் நுனியில் தரப்படும் உயர்ந்த மருத்துவச் சிகிச்சையையும், துளியூண்டு கியூபாவில் விருட்சமாய் வளரும் சுயசார்பான மருத்துவக் கொள்கையையும் நம் நாட்டில் ஏன் சாத்தியப்படுத்த முடியாது? என்ற இலக்குடன் இந்தப் பகுதியின் விவாதமும், கேள்வி பதில்களும் அமையும்.
என் நோய்க்கு யாரிடம் சென்றால் விரைவாக, பொருட்செலவு குறைவாக, பக்க விளைவில்லாமல், பூரணமாகக் குணம் கிடைக்கும் என்ற கேள்வி இல்லாத நோயர் இன்று யாருமே இல்லை. அலோபதியில் இருந்து வெங்கடாசலபதி வரை எல்லாப் பிரகாரங்களையும் சுற்றிக் களைத்து நிற்கும் நோயர், நம்மிடையே ஏராளம்.
தீவிர நோய் நிலைக்கு நவீனம், இது மீண்டும் வராது பூரணமாய்க் கட்டுப்படப் பாரம்பரியச் சித்தமும் ஆயுர்வேதமும், மீண்டும் வராது தடுக்க யோகம், இயற்கை மருத்துவம் என உலகில் உள்ள அனைத்து மருத்துவப் புரிதலும் ஒருங்கே இணைந்து அளிக்கும் சிகிச்சைதான் ஒருங்கிணைந்த சிகிச்சை. ஒவ்வொரு மருத்துவ அறிவியலுக்கும் புரிதலுக்கும், வலுவும் உண்டு நலிவும் உண்டு. ஒன்றைப் பிறிது செம்மைப்படுத்தி ஒருங்கிணைவதே நம்முடைய நல்வாழ்வுக்கு நல்வழி.
‘‘தடுக்க மட்டும்தான் நாங்களா? தீவிர நிலையில் எங்கள் மருத்துவம் ஏன் பயன் தராது? நவீனத்தில் பூரணமாய்க் குணமாகாது என்று யார் சொன்னது?'' என்ற விவாதங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நோயாளியை மையப்படுத்தி (patient centric) எந்தத் துறை எப்படி இணைந்து நோயரின் நலனை முழுமையாய்ப் பாதுகாக்க வேண்டும் என்ற அறச்சிந்தனையை மட்டும் முன்னிறுத்தி இப்பகுதியில் விவாதம் தொடரும். மொத்தத்தில், ஒரே சமூகத்தில் பிறந்து, ஒன்றாய் வளர்ந்து வேறுவேறு தளங்களில் இன்று பணியாற்றிக் கொண்டிருக்கும் இரண்டு நண்பர்களிடையே நடக்கும் நலம் குறித்த விவாதமும், சம்பாஷணைகளும் மட்டுமே நலம்! நலமறிய ஆவல்.
உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தீர்வு
பிரபல மருத்துவரும், எழுத்தாளருமான கு.சிவராமன், அடுத்த வாரம் முதல் உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் அளிக்கப்படும்.
மின்னஞ்சல்:
nalamvaazha@kslmedia.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002
கேளுங்கள், கலந்து உரையாடுவோம்
- கு.சிவராமன், எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர்,
தொடர்புக்கு: herbsiddha@gmail.com