

இதயத்தில் புற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் ராமசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் தர்கராஜ். இவரது மகன் சிவ விக்னேஷ். ஏழு வயதான இவனுக்கு இதய துடிப்பு வழக்கத்திற்கு மாறான வேகத்தில் இருந்ததால் சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். மருத்துவர்கள் சோதித்ததில், சிறுவனின் இதயத்தில் 5 செ.மீ அளவுக்கு கட்டி இருப்பது தெரியவந்தது. அந்தக்கட்டியை அகற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்ட போது அவனுக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. மாற்று இதயம் பொருத்தினால் மட்டுமே சிறுவனை காப்பாற்ற முடியும் என்ற இக்கட்டான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் மூளைச் சாவு அடைந்த நிலையில் இருந்த 15 வயது சிறுவனின் இதயத்தை சிவ விக்னேஷுக்கு பொருத்த முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, சிறுவனுக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையை மேற்கொண்ட சென்னை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவக்குமார், நாட்டிலேயே முதல் முறையாக இத்தகைய ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கிறது. சிவ விக்னேஷ் இப்போது நலமுடன் இருக்கிறான்” என்று கூறினார்.
சிவவிக்னேஷின் பெற்றோர் நம்மிடம், ’’உடல் உறுப்புதானம் எவ்வளவு முக்கியம்னு இப்பத்தான் எங்களுக்கு புரியுது. செத்ததுக்கு அப்புறம் மண்ணு திங்கற ஒடம்புல இருக்கிற உறுப்புகள் இப்புடி நாலு பேருக்கு பயன்படுறாப்புல தானம் குடுக்க எல்லாருக்கும் மனசு வரணும். அந்த கொழந்தை யோட இதயத்தால இப்ப எங்க புள்ள உசிறு பொழைச்சிருக்கான்” என்று கூறினார்கள்.