கொஞ்சம் பெரிய ‘பிரிஸ்கிரிப்ஷன்’!

கொஞ்சம் பெரிய ‘பிரிஸ்கிரிப்ஷன்’!
Updated on
3 min read

தேசிய மருத்துவர் நாள்: ஜூலை 1

மருத்துவர்கள் எழுதும் கையெழுத்து மருந்துக் கடைக்காரர்களுக்கு மட்டுமே புரியும்' என்பது அந்தக் கால நகைச்சுவை. ஆனால் சில மருத்துவர்களின் எழுத்துகள் பலரையும் ரசிக்க, சிந்திக்க, மேம்பட வைத்திருக்கின்றன, தெரியுமா? ஆம், அப்படிப்பட்ட சில மருத்துவர்கள் உடல்நலனைக் காக்கும் ‘பிரிஸ்கிரிப்ஷனை' மட்டும் எழுதவில்லை. உள்ளத்தை நல்ல முறையில் வைத்திருக்கத் தேவையான இலக்கியங்களையும் படைத்திருக்கிறார்கள். அதற்கு ஆகச் சிறந்த உதாரணம், ஆண்டன் செக்காவின் புகழ்பெற்ற படைப்பான 'ஆறாவது வார்டு'.

அப்படிக் கடந்த இருபது வருடங்களில் உலக அளவில் முக்கியமான மருத்துவர்களாக மட்டுமல்லாமல், சிறந்த எழுத்தாளர்களாகவும் இயங்கி வரும் படைப்பாளிகள் இவர்கள்:

ஆலிவர் சாக்ஸ்

பிரிட்டனில் பிறந்த நரம்பியல் நிபுணரான இவர், தன் மருத்துவ வாழ்வின் பெரும்பகுதியை அமெரிக்காவில் கழித்தார். ‘இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் புரிந்துகொள்ளப்பட முடியாத ஒரு விஷயம், மனித மூளை' என்று சொன்ன இவர், மூளை மனிதர்களை ஆட்டுவிக்கும் விதம் குறித்துப் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

தொடக்ககால மருத்துவப் பணியில் தான் சந்தித்த நோயாளிகள் குறித்தும், அவர்களுடனான அனுபவங்கள் குறித்தும் ‘அவேக்கனிங்ஸ்' என்ற புத்தகத்தை எழுதினார். பின்னாளில் இந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து, அதே பெயரில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஹாலிவுட் படம் ஒன்றும் எடுக்கப்பட்டது. 14 புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். அதில் மிகவும் முக்கியமானது ‘ஹாலுசினேஷன்ஸ்' எனும் புத்தகம்.

தங்கள் கண் எதிரே வினோத உருவங்கள் தோன்றுவதாகவும், தங்கள் காதுகளுக்குள் குரல்கள் ஒலிப்பதாகவும் பல்வேறு சிக்கல்களுடன் தன்னிடம் வந்த நோயாளிகளின் நிலையைப் புரிந்துகொள்ள, இவரும் பல போதைப் பொருட்களை உட்கொண்டு தன்னையே சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த அனுபவங்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். இவர் கடந்த ஆண்டு காலமானார்.

ஆபிரஹாம் வர்கீஸ்

இவருடைய பூர்வீகம் கேரளா. இவருடைய பெற்றோர் 40-களில் ஆசிரியப் பணிக்காக எத்தியோப்பியாவுக்குப் புலம்பெயர்ந்தனர். எத்தியோப்பியாவில் பிறந்து வளர்ந்த ஆபிரஹாம் வர்கீஸ், சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தார். பின்னர்த் தொற்றுநோய் துறையில் மேற்படிப்பு படித்து, அதில் நிபுணத்துவமும் பெற்றார்.

80-களில் ‘எய்ட்ஸ்' நோய் அறிமுகமாகியிருந்தது. அப்போது அதற்குச் சிகிச்சையளித்த, அது குறித்து ஆய்வு செய்த மருத்துவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் இவரும் ஒருவர். எய்ட்ஸ் நோயின் ஆரம்பக் காலத்தில் தன்னிடம் வந்த நோயாளிகளிடம் எந்தப் புறக்கணிப்பையும் அவமான உணர்வையும் வெளிப்படுத்தாமல் மருத்துவச் சேவையாற்றியவர் இவர். எய்ட்ஸ் நோய்க்கு ஆட்பட்ட ‘தன்பால் உறவாளர்கள்' மற்றும் அவர்கள் குடும்பத்தினருடனான தன் அனுபவங்களை ‘மை ஓன் கன்ட்ரி' எனும் தலைப்பில் புத்தகமாக எழுதினார். இது இவருடைய முதல் புத்தகம். இதுவரை மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார்.

அதுல் கவாண்டே

இவருடைய பூர்வீகம் இந்தியா. இவருடைய தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா சென்று, மருத்துவப் பணிகளை மேற்கொண்டார். அவரது பாதையில் அதுல் கவாண்டேவும் மருத்துவரானார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் உள்ள பிர்ஹாம் மற்றும் மகளிர் மருத்துவமனையில் தற்போது இவர் பணிபுரிந்துவருகிறார்.

மிகவும் தீவிரமான, குணப்படுத்தவே முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைச் சிகிச்சை என்ற பெயரில் மேலும் மேலும் துன்பத்துக்கு உட்படுத்தாமல், மரணத்தை எதிர்கொள்ள அவர்களைத் தயார்படுத்தும் நோய் தணிப்பு பேணல் (palliative care) உலகம் முழுவதும் பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் மருத்துவர்களில் இவர் முக்கியமானவர்.

இந்த முறை குறித்து அமெரிக்காவிலேயே மிகச் சமீபத்தில்தான் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது எனும் வேளையில், இந்தியாவின் நிலை குறித்துச் சொல்லத் தேவையில்லை. இதுவரை நான்கு புத்தகங்களை இவர் எழுதியிருக்கிறார். இவருடைய நான்காவது புத்தகம் ‘பீயிங் மார்ட்டல்'. நோய் தணிப்பு பேணல் மூலம் தன் தந்தையை மரணத்துக்குத் தயார்படுத்தியது, இந்த முறை எவ்வாறு தோன்றியது என்பது உள்ளிட்ட பல விஷயங்களை இந்தப் புத்தகத்தில் இவர் பேசியிருக்கிறார்.

காலித் ஹுஸைனி

ஆப்கானிஸ்தான்காரர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து, அவருடைய குடும்பம் அமெரிக்காவுக்குப் புலம்பெயர வேண்டியிருந்தது. தன் ஆப்கன் நினைவுகளையும் அனுபவங்களையும் தன் படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்துவருகிறார்.

மூன்று நாவல்கள் எழுதியிருக்கும் இவரின் முதல் புத்தகம் ‘தி கைட் ரன்னர்'. ஆப்கனில் பிறந்து வளரும் இரண்டு சிறுவர்களுக்கு இடையேயான உறவுதான், இந்த நாவலின் பேசுபொருள். பட்டம் விடுவதில் சிறுவர்களுக்கு உள்ள கொண்டாட்டம், ஆப்கனில் ஏற்பட்ட நெருக்கடி, அதிலிருந்து மக்கள் தப்பித்த விதம், அகதிகளாக மற்ற நாடுகளுக்குச் செல்பவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் எனப் பல விஷயங்களை நாவலில் சொல்லி, வாசகர்களையும் அந்த அனுபவங்களுக்கு உட்படுத்திவிடுகிறார்.

சித்தார்த்த முகர்ஜி

இந்தியாவில் பிறந்த இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் மருத்துவராகவும் பணியாற்றிவருகிறார்.

ரத்தவியல் மற்றும் புற்றுநோய் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், 2010-ம் ஆண்டு புற்றுநோய் குறித்து 'தி எம்பரர் ஆஃப் ஆல் மலாடீஸ்' என்ற புத்தகத்தை எழுதினார். புற்றுநோய் பற்றிய இந்தப் புத்தகம், எழுத்தாற்றலுக்காகப் புகழ்பெற்றது.

உலகம் முழுவதும் மருத்துவர்கள் மட்டுமல்லாமல், சாதாரண வாசகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தப் புத்தகத்துக்கு 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான புலிட்சர் பரிசு கிடைத்தது. மரபணுக்கள் குறித்துப் பேசும் இவரின் இரண்டாவது புத்தகமான 'தி ஜீன்', சமீபத்தில் வெளியானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in