ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர் - சென்னை அப்போலோ மருத்துவமனை சாதனை

ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர் - சென்னை அப்போலோ மருத்துவமனை சாதனை
Updated on
1 min read

தான்சானியா நாட்டை சேர்ந்த ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகள் அறுவைச் சிகிச்சை மூலம் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. சென்னை அப்போலோ மருத்துவமனையில் இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

தான்சானிய நாட்டை சேர்ந்த தம்பதிக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, இடுப்புக்கு கீழே ஒட்டியபடி இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. 9 மாதமான எரிகானா – எல்யூடி என்ற பெயர் கொண்ட இரண்டு குழந்தைகளை பிரிக்கும் அறுவைச் சிகிச்சை வானகரத்தில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த அறுவைச் சிகிச்சையில் சிறுநீரகவியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கட் பதி, பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரோஷினி கோபிநாத் உட்பட பல சிறப்பு துறைகளை சேர்ந்த 20 டாக்டர்கள் ஈடுபட்டனர்.

குழந்தைகளின் முதுகு தண்டின் கீழ் பகுதியில் ஒன்றோடு ஒன்று ஒட்டியுள்ள பகுதிகள் பாதுகாப்பாக முதலில் பிரிக்கப்பட்டன. அதன்பின், சிறுநீர் பைகளில் சிறுநீர் குழாய்கள் எண்டோஸ்கோப்பி மூலம் பொருத்தப்பட்டன. அதன்பின், மலக்குடல், மலத்தூவாரம் மற்றும் ஆண் உறுப்பை பிரிக்கும் சவாலான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்காக வெட்டிய இடங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. இரவு 9 மணி அளவில் குழந்தைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன.

அதன்பின், பிரிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்களில் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணி வரை நடைபெற்றது. இந்த 16 மணி நேர அறுவைச் சிகிச்சைக்கு பிறகு குழந்தைகளின் உடல் வெப்பம், இதய துடிப்பு, ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம் சரியாக இயங்கி வருகிறது. தற்போது குழந்தைகளை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in