Published : 05 Feb 2014 12:00 AM
Last Updated : 05 Feb 2014 12:00 AM

புற்றுநோயாளிகளுக்கு ‘விக்’ வழங்குவதற்காக மொட்டையடித்துக் கொண்ட கல்லூரி மாணவிகள்

புற்றுநோயாளிகளுக்கு ‘விக்’ வழங்குவற்கான தலைமுடி தானஇயக்கம், சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதற்காக மொட்டையடித்துக் கொண்ட கல்லூரி மாணவியை பார்வையாளர்கள் வெகுவாக பாராட்டினர்.

புற்றுநோய் சிகிச்சையின்போது ஏற்படும் மிக கடுமையான பக்க விளைவுகளில் ஒன்று தலைமுடி இழப்பு. புற்றுநோய் சிகிச்சையில் வலியை விடவும், தலைமுடி இழப்பு என்பது மோசமானதாக உள்ளது. இது, புற்றுநோயாளிகளிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது.

எனவே, புற்றுநோயாளிகளுக்கு ‘விக்’குகளை தயாரித்து வழங்குவதற்காக ‘டேங்கில்ட்’ என்ற விழிப்புணர்வு மற்றும் தலைமுடி தான இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப் மற்றும் கிரீன் டிரெண்ட்ஸ் யுனிசெக்ஸ் ஹேர் அண்ட் ஸ்டைல் சலூன் இணைந்து இந்த இயக்கத்தை நடத்துகின்றன. இதன் தொடக்க நிகழ்ச்சி, உலக புற்றுநோய் தினமான செவ்வாய்க்கிழமை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி கலையரங்கில் நடந்தது.

வரும் 14-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கவுள்ள இந்த இயக்கத்தை அடையாறு புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன தலைவர் டாக்டர் சாந்தா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி முதல்வர் ரிட்லிங் மார்கரெட் வாலர், டிரெண்ட்ஸ் இன் வோக் நிறுவன வர்த்தக பிரிவு தலைவர் கோபாலகிருஷ்ணன், நடிகர்கள் பார்த்திபன், சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முடி தான இயக்கத்தில் 50-க்கும் அதிகமான மாணவிகள் பங்கேற்று தங்கள் தலை முடியை தானமாக அளித்தனர். இதில் உச்சபட்சமாக கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப் தலைவரான மாணவி ரென்னி சாரதா, புற்றுநோயாளிகளுக்காக தலையை மொட்டையடித்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மற்றொரு மாணவியும் மொட்டை யடித்துக் கொண்டார். தமிழகம் முழுவதும் தலைமுடி தான இயக்கம் நடத்தப்படுகிறது. முடியை தானமாக வழங்க விரும்புபவர்கள் 1800 4202020 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர்கள் தெரிவித்தனர்.

100 விக் தருவேன்

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன், “நான் நடத்தும் மனிதநேய மன்றம் மூலம் 100 ‘விக்’குகளை அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி மூலம் விரைவில் வழங்குவேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x