

உலகக் கை கழுவும் நாள்: அக். 15
சுகாதாரமற்ற குடிநீர், சுகாதாரச் சீர்கேடு, தூய்மையின்மை போன்றவைதான் நோய்களுக்கு அடிப்படை. இவற்றின் மூலமே பலவிதமான தொற்றுநோய்கள் பரவுகின்றன, குறிப்பாகக் குழந்தைகளுக்கு.
உலகம் முழுவதும் தினமும் வாந்திபேதி நோய்க்கு ஆளாகி ஐந்து வயதுக்கு உட்பட்ட 1,400 குழந்தைகள் உயிரிழப்பதாக யுனிசெஃப் கூறுகிறது. ஆண்டில் 170 கோடி பேரைப் பாதிக்கும் இந்த நோய்க்கு, 6 லட்சம் குழந்தைகள் பலியாகிவிடுகிறார்கள்.
நோய்த் தொற்று
தூய்மையின்மை காரணமாகவும், கை தூய்மை இல்லாமல் இருப்பதும் நோய்த் தொற்று ஏற்பட வசதியாக உள்ளது. அதனால் தூய்மையை கடைபிடித்தாலே வாந்தி, பேதியை ஏற்படுத்தும் நோய்த் தொற்றுகளில் இருந்து தப்பித்துவிடலாம். அதற்கு மிகவும் எளிய வழி வெளியில் சென்று வந்த பிறகு, கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு, தூய்மையற்ற நிலையில் கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவுவதுதான்.
பல குழந்தைகள் நோய்த் தொற்றுக்கு ஆளாக மருத்துவமனைகளும் காரணமாக உள்ளன. மருத்துவமனையில் உள்ள குழந்தைகளையும் நோயாளிகளையும் கூட்டம் கூட்டமாகப் பார்க்கச் செல்லும் உறவினர்களும் இதற்கு ஒரு காரணம். மேலும் கழிவறை, குளியல் அறை, பொது இடங்களைப் பயன்படுத்தும் போதும் குழந்தைகள் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.
எப்படித் தடுப்பது?
அதனால் இந்த இடங்களுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, கண்டிப்பாகக் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கை கழுவுவதன் அவசியத்தை சிறு வயதிலேயே குழந்தைகளுக்குப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் விளக்க வேண்டும்.
குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாகக் கர்ப்பிணிகள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கை கழுவ வேண்டும். குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போதும், பால் புகட்டும்போதும், உணவு ஊட்டும்போதும், குழந்தைகளின் துணி, உடைகள், சிறுநீர், மலம் பட்ட துணிகளைக் கையாளும்போது கைகளைக் கண்டிப்பாகக் கழுவ வேண்டும். அப்படிச் செய்தால் நோய் பாதிப்பின்றி, ஆரோக்கியமாக வாழலாம்.
கை கழுவும் நாள்
கை கழுவுவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் உலகக் கை கழுவும் நாள் 2008-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், பள்ளிக்கூடங்களில் படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்காக இந்த நாள் ஏற்படுத்தப்பட்டது. ‘தூய்மையான கைகள்; பாதுகாப்பான வாழ்க்கை’ என்பதே இந்த நாள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம்.