

உலகின் மிகப் பெரிய குண்டுப் பெண்ணான எகிப்து நாட்டைச் சேர்ந்த எமான் அகமது பற்றித்தான் மருத்துவ உலகம் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருக்கிறது. சுமார் 500 கிலோ எடை கொண்ட இவருடைய உடல் அளவை குறைக்க உதவுமாறு, மருத்துவத்தில் வளர்ந்த பல நாடுகளுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்த நாடும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. உடல் பருமன் அறுவைசிகிச்சையில் முன்னணியில் உள்ள வளர்ந்த நாடுகளே கண்டுகொள்ளாத எமான் அகமதுவின் கோரிக்கைக்கு இந்தியா செவிசாய்த்துள்ளது.
எமானுக்கு உடல் பருமனைக் குறைக்க மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனை முன்வந்துள்ளது. எமானின் உடல் பருமனுக்கு என்ன காரணம்? 500 கிலோ உடல் எடையை எப்படிக் குறைப்பார்கள்? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
முடக்கிய நோய்கள்
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவைச் சேர்ந்தவர் எமான் அகமது. தற்போது அவருக்கு 36 வயதாகிறது. அவர் சிறுமியாக இருந்தபோது 11 வயதில் பக்கவாத நோய் ஏற்பட்டது. இதனால் சரிவர நடக்க முடியாமல் படுத்த படுக்கையானார். அத்துடன் யானைக் கால் நோயும் சேர்ந்து தாக்கவே, எமான் நிலைகுலைந்து போனார். நோயின் தீவிரம் காரணமாக உடலில் ஹார்மோன் இயல்பாகச் சுரப்பதிலும் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது.
இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கிய உடல் எடை, 500 கிலோவரை எகிறியது. நோய்கள் காரணமாகவும், உடல் பருமன் காரணமாகவும் படுத்த படுக்கையான எமான், வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கிப்போனார்.
ஏற்கப்படாத கோரிக்கை
படுத்த படுக்கையாகவே சுமார் 25 ஆண்டுகளைக் கழித்துவிட்டார் எமான். நோய்கள் ஒருபுறம் அவதிப்படுத்த, உடல் பருமனால் உடலை அசைக்கக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட எமான், ‘உலகிலேயே குண்டான பெண்’ என்றும் அழைக்கப்பட ஆரம்பித்தார். உடல் பருமன் காரணமாகக் கடுமையாக அவதிப்பட்டுவரும் எமான், எடை குறைக்கும் சிகிச்சைக்கு முயன்றார்.
எகிப்தில் சில சிகிச்சைகளை மேற்கொண்டார். ஆனால், பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து உடல் எடைக் குறைப்பு அறுவைசிகிச்சையில் சிறந்து விளங்கும் பல நாடுகளின் மருத்துவமனைகளின் கதவுகளைத் தட்டினார். ஆனால், எங்கும் உதவி கிடைக்கவில்லை.
கைகொடுத்த மும்பை
எமான் சோர்ந்துபோயிருந்த வேளையில், எமானின் உடல் எடையைக் குறைக்க மும்பையைச் சேர்ந்த சைஃபி மருத்துவமனை முன்வந்தது. உடல் பருமனைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சையைச் செய்ய மருத்துவர் முஃப்பஸல் முன்வந்தார்.
எமான் இந்தியா வருவதற்கான விசா கிடைக்காமல் சிக்கல் ஏற்பட்டது. வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்குத் தனிப்பட்ட முறையில் வைக்கப்பட்ட கோரிக்கையால் எமானுக்கு மருத்துவ விசா கிடைத்தது. இதையடுத்து 500 கிலோ எடை கொண்ட எமானை மும்பைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் தொடங்கின.
சிறப்பு ஏற்பாடுகள்
பெரும் முயற்சிக்குப் பிறகு வீட்டிலிருந்து அலெக்சாண்டிரியா விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட எமானுக்கு, விமானத்தில் சிறப்புப் படுக்கை தயாரிக்கப்பட்டது. அவர் பயணம் செய்யவிருந்த விமானத்தின் வாசல் உள்ளிட்ட பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டன. முன்னெச்சரிக்கையாக அவசரகால மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்களும் விமானத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த வாரத் தொடக்கத்தில் மும்பை வந்த எமான், லாரியில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். லாரியிலிருந்து கிரேன் மூலம் மருத்துவமனைக்குள் கொண்டு வரப்பட்ட எமான், அவருக்காக அமைக்கப்பட்ட பிரத்யேக அறையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை ஆரம்பம்
மும்பை மருத்துவமனையில் எமானுக்கு மூன்று மாதங்களுக்கு உடல் எடைக் குறைப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு முதல் சிகிச்சையாக உணவுக் கட்டுப்பாடு மூலம் எடையைக் குறைக்கும் முயற்சி எமானுக்குத் தொடங்கியது.
எமானுக்கு அளிக்கப்பட உள்ள சிகிச்சை குறித்து மும்பை சைஃபி மருத்துவமனை நிர்வாகம் இவ்வாறு கூறியுள்ளது: ‘அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்கு முன்பு எமானின் உணவு முறையில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, அவருக்குத் திட உணவுப் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. தினமும் 6 முதல் 7 முறை திரவ உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் மூலம், தினமும் இரண்டு கிலோ எடை குறைய வாய்ப்பு ஏற்படும். அடுத்த 25 நாட்களில் சுமார் 50 கிலோ எடைவரை குறைக்க முடியும். அதற்குப் பின்னரே அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ள முடியும்’.
சாதனை சாத்தியமா?
திடீரெனத் திட உணவுகளை நிறுத்தினால், உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுவிடும். அப்படிப் பாதிப்பு ஏற்படாமல் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் அடங்கிய திரவ உணவே தற்போது வழங்கப்படுகிறது. எடைக் குறைப்பு மட்டுமல்லாமல் இதயம், நுரையீரல், சிறுநீரகம், நரம்பியல் துறை நிபுணர்களும் எமானைக் கண்காணித்துவருகிறார்கள்.
எமானின் உடல் எடையில் 50 கிலோ குறைந்த பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான பணிகள் தொடங்கும். உடல் எடைக் குறைப்பு அறுவை சிகிச்சையில் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளே முன்னணியில் உள்ளன. எமானுக்குச் செய்யப்பட உள்ள அறுவை சிகிச்சை வெற்றி பெறும்பட்சத்தில், இந்திய மருத்துவத் துறையில் அது ஒரு மைல்கல்லாக இருக்கும்!
படுத்த படுக்கையாகவே சுமார் 25 ஆண்டுகளைக் கழித்துவிட்டார் எமான். நோய்கள் ஒருபுறம் அவதிப்படுத்த, உடல் பருமனால் உடலை அசைக்கக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட எமான், ‘உலகிலேயே குண்டான பெண்’ என்றும் அழைக்கப்பட ஆரம்பித்தார்.