

ஆசியாவில் பிறந்து, உலகெங்கும் அதிக அளவில் பயிரிடப்படும், உண்ணப்படும் மொச்சைப் பயறு வகை சோயா. புரதம் நிறைந்துள்ள சோயா, விலங்குப் புரதத்துக்கும் பாலுக்கும் சிறந்த மாற்றாகப் பரிந்துரைக்கப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது.
தாவரப் புரதங்களில் மிக அதிகப் புரதச் சதவீதத்தைக் கொண்டது சோயா. வேறெந்த பயறு வகைத் தாவரமும் சோயா அளவுக்கு அதிகபட்சப் புரதத்தைக் கொண்டிருக்கவில்லை. சமச்சீரான உணவில் புரதத் தேவையை நிறைவு செய்வதற்குச் சோயாவை எடுத்துக்கொள்ளலாம்.
சீனாவின் கண்டுபிடிப்பு
சோயா மொச்சை சீனாவைத் தாயகமாகக் கொண்டது. 13,000 ஆண்டுகளுக்கு முன்பே பயிரிடப்பட்டதாகக் கருதப்படும் இது, சீனர்களின் அத்தியாவசிய உணவாக இருந்தது. சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஆசிய நாடுகளில் சோயா அறிமுகமானது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கம்வரை மேற்கத்திய நாடுகளில் கால்நடைத் தீவனமாக மட்டுமே சோயா கருதப்பட்டுவந்தது. 1970-களில் இருந்து சோயா உணவை உட்கொள்வதும், இறைச்சி பால் பொருட்களுக்கு மாற்றாகச் சோயா பால், சோயா வெண்ணெய், சோயா தயிர் போன்றவற்றைப் பயன்படுத்துவதும் அதிகரித்தது. இன்றைக்கு, உலகிலேயே மிக அதிகமாக விளைவிக்கப்படும், பயன்படுத்தப்படும் மொச்சைப் பயறு சோயாதான்.
பயன்பாடு
பொதுவாகப் பச்சையாக இருந்தாலும், மஞ்சள், பழுப்பு, கறுப்பு நிறங்களிலும் சோயா கிடைக்கிறது. பச்சையாகவும் சமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. சோயா பால், டோஃபு, சோயா புரதம், சோயா மாவு, சோயா சாஸ் போன்ற இதன் மதிப்புக்கூட்டு பொருட்களும் பிரபலம்.
சோயாவை சமைக்கவும், எளிதாகச் செரிமானம் ஆகவும் ஊற வைப்பது நல்லது. இதை வேகவைத்துச் சாப்பிடுவதே சிறந்தது. அந்த நடைமுறையில் தேவையற்ற சில வேதிப்பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.
தைராய்டு பிரச்சினை இருப்பவர்கள், சிறுநீரகக் கல் இருப்பவர்கள், ஒவ்வாமைப் பிரச்சினை இருப்பவர்கள், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்கள் சோயாவைத் தவிர்ப்பது நல்லது.
ஊட்டச்சத்து
100 கிராம் சோயாவில் 17 கிராம் புரதம், 10 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.
புரதச் சத்தைத் தவிர, வைட்டமின்கள், கனிமச்சத்துகள், நீரில் கரையாத நார்ச்சத்து நிறைந்தது. அதனால், மலக்கட்டு வராமல் தடுக்கும்.
சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு, சோயா சிறந்த பலனை அளிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
சோயாவில் உடலுக்குத் தேவையான எட்டு அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருக்கின்றன.
விலங்குப் புரதம் உடலில் கொழுப்பு அளவை அதிகரிக்கும் அதேநேரம், சோயா புரதம் உடலில் கொழுப்பு அளவை குறைக்கிறது.
சோயாவில் உள்ள பைட்டோஸ்டீரால்ஸ் - கொழுப்பு, ஸ்டீராய்டு ஹார்மோன்களின் வடிவத்தை ஒத்தவை. உடலில் கொழுப்பு படிவதை இவை தடுக்கின்றன.
மலச்சிக்கல், நீரிழிவு நோய், அதிகக் கொழுப்பால் அவதிப்படுபவர்கள் இதைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
பொதுவாகத் தாவரங்களில் காணப்படும் வேதிப்பொருட்களான ஃபைட்டோஈஸ்ட்ரோஜென்ஸ் சோயாவில் அதிகம். அதிலும் குறிப்பாக இதில் உள்ள ஐசோஃபிளேவோன்ஸ் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும் என்று ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.
புற்றுநோய், இதய நோய், எலும்பு வலுவிழப்பு நோய் உள்ளிட்டவற்றையும் ஐசோஃபிளேவோன்ஸ் மட்டுப்படுத்தும்.
அதேபோல, பெண்களின் உடலில் அதிகமாக ஈஸ்ட்ரோஜென் சுரந்தாலோ ஹார்மோன் சமநிலையின்மை இருந்தாலோ, அதைச் சீரமைப்பதற்குச் சோயா உதவும். பி.எம்.எஸ்., எண்டோமெட்ரியோசிஸ் போன்ற நோய்களை மட்டுப்படுத்தவும் சோயா உதவும்.
மெனோபாஸ் காலத்தில் பெண்கள் சோயா சாப்பிடுவது சிறந்தது. ஏனென்றால் மெனோபாஸின்போது, ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைகிறது. சோயாவில் உள்ள ஈஸ்ட்ரோஜென் அதை ஈடு செய்யும்.
சோயாவில் இரும்புச்சத்து அதிகம். அதேநேரம் உடல் அதை கிரகித்துக்கொள்வதைப் பைடேட், சோயா புரதம் போன்றவை தடுக்கின்றன. சோயாவை முளைகட்டிச் சாப்பிட்டால் இரும்புச்சத்து அதிகம் கிரகிக்கப்படும்.
மற்றப் பருப்புகளைவிட சோயாவில் சுண்ணாம்புச்சத்து அதிகம், வைட்டமின் 'டி'யும் இருக்கிறது. மாட்டுப் பாலைவிட, சோயா பாலில் உள்ள சுண்ணாம்புச்சத்து உடலில் அதிகமாகக் கிரகித்துக்கொள்ளப்படும்.
சோயாவில் வைட்டமின் பி (நியாசின், பைரிடாக்சின், ஃபோலாசின்), வைட்டமின் பி 12 போன்றவை அதிகம்.
மக்னீசியம், செலெனியம் போன்ற கனிமச்சத்துகளும் உள்ளன.
மற்றப் பயறு வகைகளைவிட சோயாவில் கொழுப்புச்சத்து அதிகம். அதேநேரம் அதில் பெருமளவு நிறைவுறா - அன்சாச்சுரேடட் கொழுப்பு, அதாவது நல்ல கொழுப்பு இருக்கிறது. சோயாவில் கெட்ட கொழுப்பு இருந்தாலும், அதன் அளவு மிகவும் குறைவு.
உடலுக்கு நன்மை பயக்கும் நிறைவுறா கொழுப்பில் ஒன்றான ‘ஒமேகா 3 கொழுப்பு அமிலம்’ சோயாவில் இருக்கிறது. இந்த அமிலம் இருக்கும் ஒரு சில தாவரப்பொருட்களில் சோயாவும் ஒன்று. இந்த அமிலம் இதய நோய்களையும் புற்றுநோயையும் தடுக்கிறது.
பால் பொருட்கள் ஒவ்வாமை (Lactose intolerance) இருப்பவர்களும் ‘Hereditary Lactose deficiency’ நோய் இருப்பவர்களும் பால் பொருட்களுக்கு மாற்றாகச் சோயாவைப் பயன்படுத்தலாம்.
மருந்தாக...
அறுவைசிகிச்சை மூலம் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை நீக்கப்பட்ட பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் பற்றாக்குறையால் திடீரென உடலின் ஒரு பாகம் சூடாகும் (Hot flash). அத்துடன் அடிக்கடி அதிகக் கோபமடைதல், பெண் பிறப்புறுப்பில் திரவ வறட்சியால் பாலுறவின்போது அடிக்கடி நீர்க்கடுப்பு, முதுகுவலி போன்றவையும் ஏற்படலாம். இதைத் தீர்க்கும் சிறந்த உணவு சோயாதான்.
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கும், முடி உதிர்தல் பிரச்சினை உள்ளவர்களுக்கும் சோயா சிறந்த உணவு. தோல் சுருக்கத்தைக் குறைக்கும் பண்பும் சோயாவுக்கு உண்டு.
புரஸ்த கோளம் வராமல் தடுக்கும் தன்மை சோயாவுக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.