

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஒரே மாதத்தில் 202 பிரசவங்களைப் பார்த்து சாதனை படைத்துள்ளது. தமிழக அளவில் இதுவரை எந்த ஆரம்ப சுகாதார நிலையமும் இந்த சாதனையை எட்டியதில்லை.
தமிழகத்தில் சுகாதாரத் துறையின்கீழ் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் கர்ப்பிணிகளை பதிவு செய்து, அவர்களுக்கான பிரசவம் மற்றும் தடுப்பூசி பணிகள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம், சைதாபேட்டை சுகாதார மாவட்டத்தில் 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் மேடவாக்கம், நந்தி வரம், இடைக்கழிநாடு ஆகியவை மேம் படுத்தப்பட்ட 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன. இதில் இயற்கையாக பிரசவிக்க முடியாத கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது.
இங்கு கடந்த நவம்பர் மாதம் மட்டும் 202 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளன. இது தமிழ கத்தை பொறுத்தவரை எந்த ஆரம்ப சுகாதார நிலையமும் எட்டாத இலக்காகும். இது குறித்து சைதாப்பேட்டை துணை இயக்குநர் சு.ராஜசேகரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்கும்விதமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் பிரசவம் பார்ப்பதற்காக 3 செவிலியர்கள், 5 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மருத்துவர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள் மற்றும் செவிலியர்களுடன் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியதன் விளைவாகவும், ஊழியர்களின் பணி அர்ப்பணிப்பு காரணமாகவும், ஆட்சியர் கா.பாஸ்கரன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் கே.குழந்தைசாமி ஆகியோரின் ஊக்குவிப்பு மற்றும் நிர்வாக ரீதியாக அளிக்கும் ஒத்துழைப்பு காரணமாகவும், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் 202 பிரசவங்கள் பார்க்கப்பட்டு, தமிழக அளவில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. குழந்தை பெற்ற தாய்மார்கள் காத்திருப்பதற்கான குடில், பசுமை நிறைந்த சூழலின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. இது அங்கு குழந்தைப் பெற்றுக்கொள்ள வரும் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சுகாதார நிலையத்தில் உள்ள அறைகள் அனைத்தும், தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக தூய்மை உறுதி செய்யப்படுகிறது.
இதற்கு முன்பு சைதாப்பேட்டை சுகாதார மாவட்டத்துக்கு உள்பட்ட மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 196 பிரசவங்களே தமிழக அளவில் சாதனையாக இருந்தது. இதே மாவட்டத்துக்கு உள்பட்ட நந்திவரம் தற்போது இந்த சாதனையை முறியடித்துள்ளது. மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடப்பு நிதியாண்டில் நவம்பர் மாதம் வரை 887 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளன. இதில் 386 சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் அடங்கும். இதில் 603 குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.