

எனது கணவருக்குக் கடந்த 4 ஆண்டுகளாகச் சைனஸ் பிரச்சினை இருக்கிறது. இதற்காக இரண்டு முறை அறுவைசிகிச்சை செய்திருக்கிறோம். ஆனால், பாலிப் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படவில்லை. அவர் பெரிதும் அவதிப்படுவதால், நன்றாகத் தூங்கவோ, சாப்பிடவோ, சாப்பாட்டின் ருசியை அறியவோ முடியவில்லை. அடுத்த மாதம் மீண்டும் அறுவைசிகிச்சை செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். அறுவைசிகிச்சை இல்லாமல், இதற்கு வேறு தீர்வு இருக்கிறதா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
- ரதிப்பிரியா, உடுமலைப்பேட்டை
சைனுசைடிஸ் நோய் ஒவ்வாமையாலும், உடலின் இயல்பான பித்தம் (சூடு) அளவுக்கு அதிகமாவதாலும் ஏற்படுகிறது. காற்றை நாம் மாசுபடுத்தியதன் விளைவாலும், அவசர வாழ்வில் தினசரித் தலைக்குக் குளிப்பது, வாரம் ஒரு முறையேனும் எண்ணெய் குளியல் செய்வது போன்ற நல்வாழ்வுப் பழக்கங்களைத் தொலைத்ததாலும் தான், இந்தச் சைனுசைடிஸ் நோய் வருகிறது.
குளித்தல் என்றாலே தலைக்கு நீருற்றிக் குளிப்பதுதான் சரியானது. “முடி கொட்டிரும். முகம் வீங்கும். சளி பிடிக்கும். தும்மல் வரும். நேரமே இல்லை” எனப் பல காரணங்களை முன்னிறுத்தி இன்று நம்மில் பலர் கழுத்துக்கும் இடுப்புக்கும் குளிப்பதைக் கலாசாரமாக்கிக் கொண்டிருக்கிறோம். குளிப்பது என்பது அழுக்கு நீக்க மட்டுமல்ல. இரவில் உடலில் இயல்பாய் ஏறும் பித்தத்தை (சூட்டை) தணிக்கவே காலையில் நாம் குளிக்கிறோம். வெறும் அழுக்குப் போக என்றால், இரவில் மட்டும்தானே குளித்துப் பழகியிருப்போம். எனவே, இந்த நோயை அறவே போக்க, தினசரிக் குளியல் முதலில் மிக அவசியம்.
நோய் நீங்கும் காலம் மட்டும், மருத்துவர் ஆலோசனையுடன் சுக்குத் தைலம், சிரோபார நிவாரணத் தைலம், பீனிசத் தைலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். சித்த மருத்துவ மூலிகையான சீந்தில், சைனுசைடிஸ் நோய்க்கான மிகச் சிறந்த தாவரம். இதன் தண்டை வைத்துத் தயாரிக்கும் மருந்துகள் நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கி (Immune Modulation) மூக்கடைப்பைச் சரியாக்கும் எனப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. பெருவாரியான நேரங்களில், சைனுசைடிஸ்க்கு அறுவை சிகிச்சை நிரந்தரத் தீர்வு அல்ல. ஏனென்றால், பாலிப்பையும் நாசித்தண்டு வளைவையும் சீர்படுத்துவதைத் தாண்டி, நோய் எதிர்ப்பாற்றலில் உள்ள hypersensitivityயைச் சீராக்காமல், இதை முழுமையாகக் குணப்படுத்துவது கடினம். அதனால், சில காலம் சித்த மருந்துகளுடன், மூச்சுப் பயிற்சி செய்துவாருங்கள்.
யோகாசனக் கிரியா பயிற்சியிலும், பிராணாயாமப் பயிற்சியிலும் மூக்கடைப்பைத் தடுக்க முடியும். நொச்சித் தழையில் ஆவி பிடிப்பதை வாரம் இரு முறையாவது செய்வது நாசித்தண்டு வளைவில் சேரும் கபத்தை இளக்கி, வெளியேற்றிச் சுவாசத்தைச் சீராக்கப் பெரிதும் உதவும்.
உணவில் காரச் சுவை தேவைப்படும் இடத்தில் எல்லாம் மிளகைச் சேர்த்துவருவது மிக முக்கியம். மிளகில் உள்ள piperine, piperidine சத்துகள் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்திச் சைனுசைடிஸைக் கட்டுப்படுத்தும் அற்புத உணவு. இனிப்பு, பால், நீர்க் காய்கறிகளைச் சில காலம் மட்டும் அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் அவசியம்.
நான் HBs Ag பாசிட்டிவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இதை நெகட்டிவாக மாற்ற முடியாதா? இதற்காக நான் அலோபதி மருந்து எடுத்துவருகிறேன். இதன் மூலம் கல்லீரல் புற்றுநோயிலிருந்து நான் பாதுகாப்பாக இருக்கலாம் என்கிறார் என் டாக்டர். ஆனால், HBs Agயை நெகட்டிவாக மாற்ற முடியாது என்கிறார். இந்தப் பிரச்சினையை முற்றிலும் தீர்க்கவும் முடியாது என்கிறார். நான் என்ன செய்ய வேண்டும்?
- ராஜ்வந்த், மின்னஞ்சல் மூலம்
HBs Ag பாசிட்டிவ் என்பது ஹெபாடைட்டிஸ்- பி வைரஸின் தொற்று இருப்பதைக் குறிக்கிறது. அந்த வைரஸ் பெருக்கத்தைக் கீழாநெல்லி முதலான சித்த மூலிகைகள் சில கட்டுப்படுத்துவதை நவீன ஆய்வுகளும்கூட உறுதிப்படுத்தியிருக்கின்றன. வைரஸ் பெருகாமல் கட்டுப்படுத்தினால் மட்டுமே ஈரல் சுருக்க நோய்(cirrhosis)/ புற்று (hepato cellular carcinoma) வருவதைத் தடுக்க முடியும். எல்லா நேரமும் இந்த மருந்துகளால், முழுமையாக நெகட்டிவ் ஆக்க முடிவதில்லை. சிலருக்கு வைரஸின் எண்ணிக்கை கணக்கிட முடியாத அளவுக்குக் குறைந்து போய் நெகட்டிவ் முடிவு கிடைக்கிறது. ஆனால், ஒருவேளை சோதனை முடிவு பாசிட்டிவாக இருந்தாலும்கூட, வைரஸின் எண்ணிக்கை குறைவுபட்டு, ஈரலின் பணி சிறப்பாக நடைபெறவும், பின்னாளில் அந்த வைரஸ் நோய் வராது காக்கவும் கீழாநெல்லி பயன்தருவது உறுதி. அதேநேரம், மது குடிப்பதும், மருத்துவர் ஆலோசனையின்றி மருந்துகள் எடுப்பதும் ஈரலைச் சிதைக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து அசிடிட்டி, பித்தத்தால் நான் அவதிப்பட்டுவருகிறேன். இதனால் வாந்தி, தலைவலி, அயர்ச்சி உள்ளிட்டவை ஏற்படுகின்றன. இதற்காக அலோபதி மருந்துகள் எடுத்துக்கொண்டேன். அவற்றைச் சாப்பிடும்போது பிரச்சினையில்லை. ஆனால், நிறுத்திவிட்டால் பழைய தொல்லைகள் வந்துவிடுகின்றன. இதற்கு வேறு தீர்வுகள் உண்டா?
- வி.சீனிவாசன், கொல்கத்தா
பித்தம் மற்றும் குடற்புண்களை வெறும் மருந்துகளால் மட்டும் குணப்படுத்துவது இயலாத ஒன்று. உணவு, உள்ளம் இரண்டையும் சீராக்க வேண்டும். காரமான உணவு, எண்ணெயில் பொரித்த உணவு, கிழங்கு உணவு, நேரம் தவறி எடுக்கும் உணவு, மது, புகை எல்லாமே பித்தத்தைக் கூட்டிக் குடற்புண்ணை உருவாக்கும். இவற்றை எல்லாம் தவிர்ப்பது மிகவும் அவசியம்.
அடுத்து பரபரப்பான மனம், பாதுகாப்பில்லாத உணர்வு, தூக்கமற்ற இரவுறக்கம் என மனச் சஞ்சலத்துடனும் ஆர்ப்பரிப்புடனும் வாழ்வை நகர்த்துவதும்கூடக் குடற்புண்ணுக்கு இரைப்பையில் நிரந்தரக் குடியுரிமை வழங்கிவிடும். நீங்கள் தினசரி காலையில் மோர், மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். சாப்பிட்டதும் சீரகத் தண்ணீர் குடியுங்கள். உங்கள் அருகிலுள்ள சித்த மருத்துவரை ஆலோசித்துக் குடற்புண் நீக்கிக் குன்மம் போக்கும் சித்த மருந்துகளைச் சில காலம் எடுத்துவாருங்கள்.
சரியான மருந்தும் வாழ்க்கை முறை மாற்றமும் மட்டுமே இந்த நோயிலிருந்து முழுமையான விடுதலையைத் தரும்.
மிக நாட்பட்ட வயிற்று வலியை வெறும் குடற்புண்ணாக எடுத்துக் கொள்வதும் தவறு. இரைப்பை கணையப் புற்றுக்கட்டிகள்கூட வயிற்று வலி போன்றே தெரியும். அல்ட்ரா சவுண்ட், தேவைப்பட்டால் எண்டாஸ்கோபி முதலான சோதனைகளும் Tumor Markers சோதனைகளையும் குடும்ப மருத்துவரை ஆலோசித்துச் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். பயம் கொள்ள வேண்டாம். அதே சமயம் அக்கறை கொள்வதை அலட்சியப்படுத்தவும் வேண்டாம்.
உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தீர்வு
பிரபல மருத்துவரும் எழுத்தாளருமான கு. சிவராமன், உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட அனைத்து கேள்விகளையும் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைக்கும்.
மின்னஞ்சல்: nalamvaazha@kslmedia.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002