

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை இல்லாமல், நவீன சிகிச்சையின் மூலம் சிறுவன் உள்பட 4 பேரின் இதயத்தில் இருந்த ஓட்டைகள் அடைக்கப்பட்டன.
சென்னை வியாசர்பாடி அண்ணா தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி. இவரது மகன் விக்னேஷ் (7), மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். மூன்று மாதங்களுக்கு முன்பு விக்னேஷுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து, சிறுவனை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், சிறுவனின் இதயத்தில் ஓட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அறுவைச் சிகிச்சை செய்யாமல் ‘இதய உட்புகுத்து’ என்ற நவீன சிகிச்சை மூலம் சிறுவனின் இதயத்தில் இருந்த ஓட்டையை அடைக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி, இதய சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் கே.கண்ணன், பேராசிரியர் ஜெஸ்டின் பால் உள்ளிட்ட டாக்டர்கள் குழுவினர் கடந்த 14-ம் தேதி சிறுவனுக்கு சிகிச்சை அளித்தனர். அவனது வலது தொடை ரத்தக்குழாய் வழியாக சிறிய ஊசியை செலுத்தினர். அத்துடன் சிறிய அளவிலான கருவியை கொண்டு சென்று, இதயத்தின் உள்ளே இருந்த ஓட்டையை அடைத்தனர். இந்த சிகிச்சைக்கு பிறகு, தற்போது சிறுவன் நலமாக இருக்கிறான்.
அன்றைய தினமே கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த வஜ்ஜிரவேலு – அன்பரசி தம்பதியரின் மகள் சந்தியா (19), வியாசர்பாடி கன்னிகாபுரத்தைச் சேர்ந்த ராமதாஸ் மனைவி எழிலரசி (29) மற்றும் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் துரை மனைவி அமுதா (50) ஆகியோருக்கும் இதே முறையில் இதயத்தில் இருந்த ஓட்டை அடைக்கப்பட்டது.
மாணவிக்கு சிகிச்சை
சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காசிநாதன் மகள் வினோதா (10), அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த மாதம் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும்போது, திடீரென மயங்கி விழுந்துவிட்டாள். அவளுக்கு இதய கோளாறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
ஒன்றாக இணைந்த ரத்தக் குழாய்
இதையடுத்து சிறுமியை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அவளது இதயத்தில் வெளியே உள்ள இரண்டு ரத்தக் குழாய்கள் தனித்தனியாக இருப்பதற்கு பதிலாக, ஒன்றாக இணைந்து இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 14-ம் தேதி இதய உட்புகுத்து நவீன சிகிச்சை மூலம் ஒன்றாக இணைந்து இருந்த ரத்தக் குழாயகளை பிரித்து சிறுமியின் உயிரை டாக்டர்கள் காப்பாற்றினர். இதுதொடர்பாக டாக்டர் கே.கண்ணன் கூறுகையில்,
‘‘ஒரே நாளில் அறுவைச் சிகிச்சை இல்லாமல் இதய உட்புத்து என்ற நவீன சிகிச்சையினால் 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.