

இந்த வாரக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் அபிஷேக் லுல்லா:
என் அம்மா கடந்த 10 ஆண்டுகளாக முடக்குவாதத்தால் (Rheumatoid Arthritis) அவதிப்பட்டு வருகிறார். பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பெரிதாகப் பயனில்லை. ஆயுர்வேதத்தில் இதற்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்குமா?
- சந்தானலட்சுமி வாசுதேவன், மின்னஞ்சல்
முடக்குவாதம் என்பது உடலைத் தாங்கக்கூடிய திறனில் ஏற்படும் குறைபாட்டால் வருவது. இந்தக் குறைபாட்டால், நமது உடலில் உள்ள எதிர்ப்புசக்தி அணுக்கள், நமது உடல் உறுப்புகளையே நோய் உண்டாக்கும் பொருட்கள் எனத் தவறாகப் புரிந்துகொண்டு, அவற்றைத் தாக்க முயற்சிக்கின்றன. இந்தத் தாக்குதலால் மூட்டுகளில் வீக்கமும் வலியும் ஏற்படுகிறது.
இதற்கான சிகிச்சை வீக்கத்தையும் வலியையும் குறைப்பதாக இருக்க வேண்டும். இப்படிச் செய்தால், மூட்டு உருவக் குறைபாடு ஏற்படாமல் தவிர்க்கலாம். ஆயுர்வேத மருத்துவத்தில் மூட்டு வலிக்கான முக்கியக் காரணமாக, வாதத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. அதனால், வாதத்தை அதிகரிக்கும் உணவை நீங்கள் தவிர்க்க வேண்டும். ஆயுர்வேதத்தில் முடக்குவாதத்தின் பெயர் ஆம வாதம். இதற்கான சிகிச்சை முறை சோதனம் எனப்படுகிறது.
உடல் உறுப்புகளையும் ரத்தக் குழாய்களையும் சுத்தப்படுத்துவதற்கு, எனிமா (உடல் கழிவை வெளியேற்றுதல்) கொடுக்கப்படும். மேலும், விளக்கெண்ணெயைப் பயன்படுத்தித் தீவிர உடல் நச்சை வெளியேற்றும் சிகிச்சையும் வழங்கப்படும். மஞ்சள், குக்குலம், அஸ்வகந்தா போன்ற மூலிகைகள் மூலம் சிறந்த சிகிச்சை அளிக்கலாம்.
கடந்த ஆறு மாதங்களாக நான் கவட்டைக் குடலிறக்கத்தால் (inguinal hernia) அவதிப்படுகிறேன். இதை அறுவைசிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு வேறு ஏதும் தீர்வு உண்டா?
- ஸ்டாலின் தெய்வேந்திரன், மின்னஞ்சல்
கவட்டைக் குடலிறக்கம் என்பது, வயிற்றுத் தசைகளில் ஏதோ ஒரு பலவீனமான பாகத்தில் குடல் நீட்டிக்கொண்டிருப்பதுதான். இதனால் இடுப்புப் பகுதியில் வீக்கம் இருக்கும். மேலும் இருமும் போதும், எழுந்து நிற்கும்போதும் வலியின் அளவு அதிகரிக்கும். ஆண்களிடையே ஏற்படும் குடலிறக்கத்தை ஆரம்பத்திலேயே குணப்படுத்தவில்லை என்றால், அது ஆணுறுப்புவரை பரவி வலியை அதிகரிக்கும்.
பல்வேறு காரணங்களால் குடலிறக்கம் உருவாகலாம் என்பதால், மலச்சிக்கல் இல்லாமலும் தொடர்ந்து இருமல் இல்லாமலும் பார்த்துக்கொள்ளவும்.
ஆயுர்வேத முறையில், குடலிறக்கத்தால் ஏற்படும் வலி மற்றும் சில அறிகுறிகளை மட்டுப்படுத்த முடியும். ஆனால், நிரந்தரத் தீர்வுக்கு அறுவைசிகிச்சைதான் சிறந்த வழி. அறுவைசிகிச்சை குறித்த கேள்வி உங்களுக்குத் தீவிரமாக இருக்கும் பட்சத்தில், வேறொரு மருத்துவரிடம் நேரில் காண்பித்துக் கருத்து கேட்டால் சந்தேகத்துக்கு விடை கிடைக்கும்.
- ஆயுர்வேத மருத்துவர் அபிஷேக் லுல்லா
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002 |