

அஜீரணக் கோளாறுகளைத் தவிர்ப்பது எப்படி, கடந்த வாரப் பதிலின் தொடர்ச்சி...
ஆயுர்வேத உணவு முறை
ஜீரணம் சீராக நடைபெறக் கனமான பொருட்களை அரை வயிறு அளவுக்கும், லகுவான பொருட்களைச் சற்று அதிகமாகவும் சாப்பிடலாம் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அளவுக்கு மீறிய உணவு எல்லா தோஷங்களையும் பிரச்சினைக்கு உள்ளாக்குகிறது. இதனால் பல விதமான வயிற்று நோய்கள் உருவாகின்றன.
அஜீரண நோய் உள்ளவர்கள், கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டால் மருந்து சாப்பிடாமல் பட்டினி இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. அஜீரணத்தால் மலம், மூத்திரத் தடை, குடல் வாட்டம், அபான வாயு தடை, வயிற்றுப் பொருமல் போன்றவை ஏற்படலாம்.
மாறுபட்ட உணவு முறைகள் என்னென்ன?
கோபம், மனத்துயரம் போன்றவற்றாலும் செரிக்கும் தன்மை பாதிக்கப்படுகிறது. பத்தியமான உணவுடன் அபத்தியமான உணவைச் சேர்த்துச் சாப்பிடுவது சமாசனம் என்றும், உணவைச் சாப்பிட்ட உடன் மறுபடியும் சாப்பிடுவது அத்யசனம் என்றும், அகாலத்தில் அதிக அளவு அல்லது குறைந்த அளவு சாப்பிடுவது விஷமாசனம் என்றும் இந்த மூன்று வகைகளும் கொடியவை என்றும், நோயை உருவாக்கக்கூடியவை என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது.
தொடர்ந்து சாப்பிடக்கூடியவை
சம்பா அரிசி, கோதுமை, ரவை, அறுபதாம் குருவை, ஆட்டு இறைச்சி, அரைக் கீரை, இளம் முள்ளங்கி, நெல்லிக்காய், திராட்சை, புடலங்காய், வெல்லம், சிறுபயறு, சுத்தமான நீர், பால், நெய், மாதுளம்பழம், இந்துப்பு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
வாழைப்பழம், பலாப்பழம், மோதகம் முதலியவற்றை முதலில் சாப்பிட வேண்டும். புளிப்பானவற்றை நடுவில் சாப்பிட வேண்டும். கசப்பாக உள்ளவற்றைக் கடைசியில் சாப்பிட வேண்டும். இரைப்பையின் பாதி அளவு திட உணவும் கால் பாகம் திரவ உணவும் எடுத்துக்கொள்ள வேண்டும். எஞ்சிய கால் பாகத்தை வாயுவுக்கும், அதன் அசைவுக்கும் விட்டுவிட வேண்டும்.
அனுபானம்
அனுபானம் என்பது உணவை நன்றாகச் செரிக்கச் செய்து ஊட்டச்சத்தை உடல் கிரகிக்கச் செய்கிறது. கோதுமை உணவுக்குக் குளிர்ந்த நீர் அனுபானம், தயிர் சாதத்துக்குக் குளிர்ந்த நீர் அனுபானம், பயறு முதலியவற்றுக்குத் தயிர்த் தெளிவு, மோர் முதலியவை அனுபானம். நீருடன் தேன் சேர்த்துப் பருக உடல் இளைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல மிகவும் சோர்வு அடைந்தவர்களுக்குப் பால் சிறந்த அனுபானம்.
கழுத்துக்கு மேற்பட்ட நோய்கள், சுவாச நோய்கள், உரக்ஷதம், பீனஸ நோய்கள், குரல் கம்முதல் போன்ற நிலைகளிலும் பாடுவது-பேசுவதைத் தொழிலாகக் கொண்டவர்களும் அனுபானத்தைத் தவிர்க்க வேண்டும்.
மேக நோய்கள், கண் நோய்கள், தொண்டை நோய்கள், நாட்பட்ட புண் உள்ளவர்கள் அதிகமாகப் பானம் அருந்துவதில்லை. சாப்பிட்டபின் வெயிலில் இருப்பது, வண்டியில் பயணம் செய்வது, வேகமாக வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது
சிறு தானியங்கள் முழு தானியங்கள்
ஆரோக்கியமான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்பதும், அது உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதும், எல்லாக் கலாச்சாரத்திலும், எல்லா நாட்டிலும் பொதுவாகக் காணப்படும் கொள்கை. உணவானது மனதுக்கு நிறைவையும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் தரும்படி இருக்க வேண்டும்.
பண்டைக் காலத்தில் வெள்ளை சோளம், சிவப்புச் சோளம், கருஞ்சோளம், அரிசி, கம்பு, கருந்திணை, செந்திணை, பைந்திணை, பெருந்திணை, சிறுதிணை, கேப்பை, வரகு, குதிரைவாலி, பெருஞ்சாமை, செஞ்சாமை, சாமை போன்ற தானியங்கள் இருந்ததாகப் புறநானூறு குறிப்பிடுகிறது. இவை புன்செய் தானியங்கள்.
நெல், வாழை, கரும்பு எல்லாம் நன்செய். பழைய காலத்தில் புன்செய் உணவுகளாகிய கம்பு உருண்டை, உளுந்தங்களி, கேப்பங் களியை அதிகம் உண்டனர். இவை ஆரோக்கியமான உணவு வகைகள்.
நவீன மருத்துவர்கள் கலோரி என்ற கண்ணோட்டத்தில் உணவைப் பிரித்துப் பேசுகிறார்கள். ஆயுர்வேதம் அறுசுவை என்ற தத்துவத்தின் கீழ் உணவைப் பற்றி பேசுகிறது.
இதய நோய், புற்று நோய்கள், மதுமேக நோய் போன்றவை தவறான உணவுப் பழக்கத்தால் உண்டாகி அதிகரிக்கின்றன என்பது ஆராய்ச்சி முடிவு. கீழ்க்கண்ட தத்துவங்களின் மூலம் தவறான உணவுப் பழக்கங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
சேர்க்க வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்
ஒரு மனிதனுக்கு, ஒரு நாளைக்குச் சராசரியாக 2000 கலோரி அளவு தேவைப்படுகிறது. கலோரி என்பது உடலுக்குத் தேவையான சக்திதான். இதைப் பெறுவதற்குப் பல விதமான உணவு வகைகளை, தானியங்களை, பழங்களைக் கலந்து சாப்பிட வேண்டும். ஹோட்டல்களில் அதிகமாகச் சாப்பிடக் கூடாது. பழங்களையும், பருப்பு வகைகளையும், நார்ச்சத்துள்ள உணவு வகைகளையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர்வரை தண்ணீர் அருந்த வேண்டும்.
எவ்வளவு முடியுமோ அவ்வளவு உப்பைக் குறைத்துச் சாப்பிட வேண்டும். உப்பு ஈரப்பதம் கொண்டது, பண்டைய காஷ்மீரில் உப்பு அதிகம் உட்கொண்டு இளநரை போன்ற நோய்களைப் பெற்றார்கள் என்றும், உப்பானது வீக்கம் போன்ற நோய்களை ஏற்படுத்தும் என்றும் சரகர் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 2.5 கிராம் முதல் 3 கிராம் உப்பு போதுமானது.
உணவைச் சாப்பிட்டால் மட்டும் போதாது, உடம்புக்கு அசைவு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். உடலுக்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியம். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது மனப் பரபரப்பைத் தவிர்க்க வேண்டும். சிறிய அளவு உணவை, பல தடவைகளாகச் சாப்பிடுவது இப்போது முக்கியத்துவம் பெற்றுவருகிறது. வெள்ளை தானியங்கள், வெள்ளை மைதா, வெள்ளை அரிசி, சீனி போன்றவை மோசமான மாவுப் பொருட்களாகக் கருதப்படுகின்றன.
இவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென்று கூட்டி, நீரிழிவு நோயை உண்டாக்குகின்றன. வெள்ளைச் சீனியை அறவே தவிர்ப்பது நல்லது. Complex carbohydrate என்று சொல்லக்கூடிய மாவுப் பொருட்கள் உடலுக்கு நன்மையைச் செய்கின்றன. தானியங்கள், பீன்ஸ், பழ வகைகள், காய்கறிகளில் சேனை, கைக்குத்தல் அரிசி போன்றவை Complex carbohydrate எனலாம். பதப்படுத்தப்பட்ட உப்பு சேர்த்த, வறண்ட உணவாகிய பிஸ்கட் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
தானியங்களை உடைத்துத் தவிடு நீக்காமல், முழு தானியங்களைப் பயன்படுத்துவது சிறந்தது. நார்ச்சத்து உள்ள உணவு வகைகளைத் தாராளமாக உட்கொள்ள வேண்டும். பீன்ஸ், பழங்கள், ஓட்ஸ் போன்றவை நார்ச்சத்துள்ள உணவு வகைகள்.
ஒரு நாளைக்கு 30 கிராம் நார்ச்சத்துள்ள உணவை எடுத்துக்கொள்வது சிறந்தது. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின், தாதுப் பொருட்கள் போன்றவை இருப்பதால், அவற்றை அதிகம் பயன்படுத்த வேண்டும். உரம் போடாத காய்கறிகள் கிடைத்தால் ரொம்ப நல்லது. கொட்டைகளில் பாதாம் பருப்பு தினசரி 2 அல்லது 3 சாப்பிடலாம்.
உறைகிற எண்ணெய்களாகிய தேங்காய் எண்ணெய், நெய் போன்றவற்றை அளவுடன் பயன்படுத்த வேண்டும். நல்லெண்ணெயே, உடலுக்கு நல்ல எண்ணெய். பழச்சாறுகளைக் குடிக்கும்போது சீனி சேர்க்காமல் குடிக்க வேண்டும். பொதுவாக காலை 11 முதல் மதியம் ஒரு மணிக்குள் தினமும் 10 நிமிடமாவது வெயிலில் நிற்பது, வெயில் படுவதுபோல் இருப்பது நல்லது.
உண்ணும் முறை
# வழக்கமான உணவையே உண்ண வேண்டும்.
# சுத்தமான உணவை உண்ண வேண்டும்.
# உரிய காலத்தில் உண்ண வேண்டும்.
# எளிதில் செரிக்கக்கூடிய நெய்ப்பு, உஷ்ணம், இனிப்பு ஆகியவற்றைக் கொண்ட உணவை உண்ண வேண்டும்.
# அறுசுவை உணவை உண்ண வேண்டும்.
# நன்றாக மென்று சாப்பிட வேண்டும், அப்படியே விழுங்கக் கூடாது.
# குளித்துவிட்டுச் சாப்பிட வேண்டும்.
# உணவு உட்கொள்ளும்போது பேசக் கூடாது, கோபப்படக் கூடாது, இடையில் எழுந்திருக்கக் கூடாது.
உணவை வழங்குபவர்கள் சுத்தமானவர்களாக இருக்க வேண்டும்.
உணவு சற்றுத் திரவமாக இருக்க வேண்டும்.
இது போன்ற விதிமுறைகள் அஷ்டாங்க ஹிருதயத்தில் கூறப்பட்டுள்ளன.
கூடாத உணவுகள்: உடலுக்குத் தீய உணவு, கெட்டுப்போன உணவு, அதிகமான உப்பு சேர்த்த உணவு வகைகளை உட்கொள்ளக் கூடாது. இரவில் தயிர், சமைக்காத முள்ளங்கி, பன்றி, செம்மறி ஆடு, பசு இறைச்சி போன்ற வற்றைச் சாப்பிடக் கூடாது. உளுந்து, மொச்சை, சிறுகடலை போன்றவற்றை அளவுடன் பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்பும் காணக் கிடைக்கிறது.
வேதனைக்கு விடை கொடுக்கும் ரெஃப்லெக்ஸாலஜி
எண் சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம் என்பார்கள். ஆனால் சிரசின் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் தளர்ச்சிகளால் உண்டாகும் பதற்றம், கோபம் போன்ற பிரச்சினைகளை பாதத்தில் கொடுக்கப்படும் சிகிச்சைகளால் குணப்படுத்துவதே ரெஃப்லெக்ஸாலஜி சிகிச்சை.
இந்த மரபுவழி அனிச்சைச் செயலினால் அளவில்லாத பயன்கள் மனித உடலுக்குக் கிடைக்கின்றன. மத்திய நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக்குவது, உறக்கம், ஹார்மோன்களின் பெருக்கத்தைச் சமச்சீராக்குவது, உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுவது என பல நன்மைகள் ரெஃப்லெக்ஸாலஜி சிகிச்சையின் மூலம் சாத்தியமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
மூட்டு வலி, முதுகு வலி, மாதவிலக்கு நின்ற பெண்களின் ஆரோக்கியத்தைப் பேணுவது, அறுவைசிகிச்சைக்குப் பின் உடல் திறனைத் திரும்பப்பெறுவதில் துரித முன்னேற்றம் அடைவதற்கு ரெஃப்லெக்ஸாலஜி உதவுகிறது என்கின்றனர்.
மூளை, சிறுநீரகம், பாதங்கள் மற்றும் சிறுகுடல் ஆகிய பகுதிகளின் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இப்படி உடலில் ரத்த ஓட்டம் சீராகும்போது, தேவையற்ற கழிவுகள் வெளியேறி உடலின் ஆரோக்கியத்துக்கு வழி ஏற்படுகிறது.
இந்த சிகிச்சை தொடர்பாக மேலும் அறிய
ஃபுட் ஹெவன் இந்தியா, 2041, 15-வது மெயின் ரோடு,
அண்ணா நகர் மேற்கு, சென்னை - 40.
தொலைபேசி 044-42697766 / 42697722
உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை
பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ,
தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002