மனதுக்கு இல்லை வயது: பொஸஸிவ் மனப்பான்மை
அந்தப் பெண் என்னிடம் மிகவும் வருத்தத்துடன் சொன்னார், ‘‘என் மகன் நான் சொல்வதைக் கேட்கவே மாட்டேன் என்கிறான். இப்பவே இப்படி என்றால் நாளை கல்யாணம் ஆனதும் என்னை மதிக்கவே மாட்டானே?’’ என்றார். ‘‘உங்களைப் பார்த்தால் கல்யாண வயதில் மகன் இருப்பதுபோலத் தெரியவில்லையே’’ என்றேன். அவர் சொன்னார்.. ‘‘என் மகனுக்கு ஏழு வயசுதான் ஆகுது’’.
இளம் வயதிலேயே இப்படி என்றால் வயதான பெற்றோரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
வயதானால் ஏற்படும் அதிர்ச்சிகளில் முதன்மையானது அவர்களது பிள்ளைகள் பெற்றோரின் உதவியை எதிர்பார்க்காமலேயே தாங்களே பல விஷயங்களை முடிவு செய்யத் தொடங்குவதுதான். பலரும் நமது பிள்ளைகளை நமது உடமைகளில் ஒன்றாகக் கருதுகிறோம். கார், செல்போன், ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற உடமைகளை எல்லோரிடமும் காட்டிப் பெருமிதம் அடைவதுபோல, நம் பிள்ளைகளையும் எல்லோரும் வியக்கும் வண்ணம் காட்டிப் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம்.
இந்தப் பொஸஸிவ் (Possessive) மனப்பான்மையே பின்னால் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆன பிறகு பல பிரச்சினைகளை உருவாக்குகிறது. நம் உடமை ஒன்றை வேறு யாரோ எடுத்துக்கொண்டதாகக் கருதுவதே இதற்கு மூலகாரணம்.
அது மட்டுமின்றி, பிள்ளைகளை நம் உடல் உறுப்புகளில் ஒன்றுபோலவே கருதுகிறோம். உடல் உறுப்புகள் நாம் நினைத்தபடி செயல்படும். தூக்கவேண்டும் என்றால் நம் கை தூக்கும்.. ஓட வேண்டும் என்று நினைத்தால் கால்கள் ஓடத் தொடங்கும். பிள்ளைகளும் அப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் அப்படி செயல்படுவார்களா? மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் நம்முடைய ஒரு பகுதி அல்ல. அவர்கள் தனித்துவம் மிக்கவர்கள். அவர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் உண்டு.
இன்னும் சிலரால் தங்களது பிள்ளைகளால் சுயமாக தங்களைக் கவனித்துக்கொள்ள முடியும் என்பதையே நம்ப முடியாது. அவர்களுக்கான உணவு, உடை முதல் வாழ்க்கைக்குத் தேவையான முடிவுகளை எடுப்பதுவரை எல்லா முடிவுகளையும் பெற்றோரே எடுப்பார்கள். தங்களது குழந்தைகள் எந்த ரிஸ்க் எடுப்பதற்கும் அனுமதிக்க மாட்டார்கள். இதுபோல அதிகமாகப் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டவர்கள் சுயமாக முடிவெடுக்கவே பயப்படத் தொடங்குவார்கள்.
‘‘குழந்தைகள் நம் சொத்துக்கள் அல்ல. நம் மூலமாக உலகுக்கு வந்தவர்கள். அவ்வளவுதான்’’ - இது கலீல் கிப்ரானின் வாக்கு. நான் செய்த தவறுகளை என் மகன், மகள் செய்யக் கூடாது என்று எண்ணிப் பாதுகாத்தால் நீங்கள் பெற்ற அனுபவ அறிவு அவனுக்கு, அவளுக்குக் கிடைக்காமல் போய்விடும். கையிலேயே ஏந்திக்கொண்டிருந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது.
பல கோடி ரூபாய் செலவில் செய்த ஏவுகணையாக இருந்தாலும் அந்தந்த நேரத்தில் குறிப்பிட்ட பாகங் களைக் கழற்றிவிட்டால்தான் வானில் பறக்க முடியும்.
