Last Updated : 08 Sep, 2018 11:29 AM

Published : 08 Sep 2018 11:29 AM
Last Updated : 08 Sep 2018 11:29 AM

இனிப்பு தேசம் 21: சர்க்கரைக்கு ‘குடும்ப’ மருத்துவம்!

இனிப்பு நோய்க்கான மருந்துகளில், இன்சுலின், மெட்ஃபார்மின், அக்குபிரசர், ஆயுர்வேதம், ஆவாரைக் கஷாயம் இவற்றை எல்லாம் தாண்டி இன்னொரு பெரிய மருந்து உள்ளது. அது குடும்ப அரவணைப்பு. அநேகமாக எல்லா நோய்க்குமே, குடும்பம் அதில் பங்கேற்பது என்பது சிகிச்சையின் ஒரு பங்கு. சர்க்கரை நோயில் அது மிக மிக அதிகம்.

பெரும்பாலும் 40-களில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும்தான் இந்த இனிப்புப் பிரச்சினை தலைதூக்குகிறது. அப்படி, சர்க்கரை நோயின் தொடக்கத்தில் எவரொருவர் தடாலடியாய்  உடற்பயிற்சி, உணவுப் பழக்கத்தை நல்ல கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாரோ, அவரிடம் இனிப்பு நோய் தலைவிரித்து ஆடுவதில்லை.

ஆனால் அலட்சியவாதிகளுக்கு, இனிப்பு அவர்கள் உடலைத் தின்ன  ஆரம்பித்து விடுகிறது. இந்த அலட்சியத்தைத் தடுக்கவே குடும்பக் கட்டமைப்பு அத்தியாவசியமாகிறது. குடும்பத்துக்கு இந்த நோயைப் பற்றிய தெளிவான புரிதல் இருந்தால் மட்டுமே சமாளிக்க இயலும்.

‘இந்தாங்க மணி 5.30… ‘வாக்’ போயிட்டு வாங்க’ என விரட்டும் மனைவியோ மாலை அலுவலகத்திலிருந்து பசியோடு வரும் தன் இனிப்பு மனைவிக்கு, கொஞ்சம் பாசிப்பயறு சுண்டலும் கேழ்வரகு அடை ஒன்றும் சூடாய்ப் பரிமாறும் கணவனோ வாய்க்கப் பெற்றவர்கள், கடந்த பிறவியில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பியவர்கள்.

ஒன்றாய் நடப்பது நல்லது

சர்க்கரை வியாதியைக் கட்டுக்குள் வைப்பதன் முதல் படியான நடைப்பயிற்சியை, குடும்பம் அழகாய் நெறிப்படுத்த இயலும். ‘வா நானும் தொப்பையைக் குறைக்க உன்கூட நடக்கப் போறேன்’ என கிளம்புவது சம்பந்தப்பட்டவரை முதலில் எரிச்சல்படுத்தினாலும், நாளடைவில் அழகாய் நெறிப்படுத்தும்.

கும்பலாய் நாட்டு அரசியல், வீட்டு அரசியல் பேசி நடப்பது நல்லதில்லை என்றாலும், பேச்சு சுவாரசியத்தில், நடையின் வேகத்தைக் குறைக்காது, நடப்போருக்கு நடைத்துணை நல்லதே. அதுவே வாழ்க்கைத் துணையாக இருந்தால் கூடுதல் பலன் கிட்டும்.

கடந்த ஆறேழு ஆண்டாக, நான் நடக்கும் பூங்காவில், சற்று மெதுவாகவே நடக்கும் வயோதிக முதியோர் தம்பதி ஒருவர், கடக்கும் நபர்களை எல்லாம் பொறாமைப்படுத்தும் அன்பைக் காட்டுவார்கள். 3-வது சுற்று முடிகையில் பார்க் பெஞ்சில் அமர்ந்து, இருவரும் தங்கள் பிளாஸ்க்கில் கொண்டுவந்த ஏதோ ஒரு கஷாயத்தை மெல்ல உறிஞ்சிக் குடிப்பார்கள்.

சற்று கைகள் நடுங்கும் அந்த முதியவரின் குவளையை அவரின் மனைவி அவ்வப்போது கையில் வாங்கிக்கொண்டு, ‘கொட்டிடாதீங்க.. கொட்டிடாதீங்க’ எனச் சொல்லுவதும், லேசாக வாயில் வழியும்  சொட்டுக் கஷாயத்தை, தன் கைத்துண்டால் அவர் துடைத்துக்கொண்டு சிரிப்பதும், இனிப்பான கவிதை. அவர்களின் ரத்தச் சர்க்கரை நிச்சயம் கட்டுக்குள் இருக்கும் என ஒவ்வொரு முறையும் எனக்குத் தோன்றும்.

அனைவருக்குமான உணவு எது?

அம்மாவுக்குத் தினைப் பொங்கல், அப்பாவுக்குக் கேழ்வரகு ரொட்டி, மகனுக்கு வெள்ளை தோசை ரோஸ்ட், அக்காவுக்குப் பழத்துண்டு என ஆளுக்கு ஒரு உணவு தயாரிப்பது நகர்ப்புற வாழ்வில், சிக்கலான வேலை.

இனிப்பு நோயுள்ளோர் இருக்கும் குடும்பம், எல்லோரும் சாப்பிடும்படியான உணவுத் திட்டத்தைப் பற்றிய தெளிவான புரிதலும் மெனக்கெடலும் உள்ளவராய் இருக்க வேண்டும். வெள்ளைச் சர்க்கரை இல்லாத, திடீர் ரத்தச் சர்க்கரை உயர்வைத் (high glycemic) தராத உணவை, அனைவருமே சாப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை.

வீட்டில் உள்ள  எல்லோருமே ஒன்றாக இன்றைக்குக் குதிரைவாலிச் சோறு, ஞவரா (கேரளப் பாரம்பரிய சிவப்பரிசி) அரிசிக் கஞ்சி எனச் சாப்பிடுகையில் சர்க்கரை வியாதிக்காரருக்குத்தான் திடீர் என புழல் சிறைக்குப் போன உணர்வைக் கொடுக்காது. ஏனெனில், சர்க்கரை நோயுள்ளோருக்குக் கொடுக்கப்படும் உணவுக் கட்டுப்பாட்டில், ஒருசிலர் ஒருவித உளவியல் வெறுமையில் தள்ளப்படுகின்றனர். இந்த முயற்சி, அனைவரையும் நலவாழ்வை நோக்கி நகர்த்தும்.

துல்லிய மருந்து முக்கியம்

இனிப்பு நோய் பற்றிய பயத்தை விலக்க, அதன் மீதான கோபத்திலிருந்தும் வெறுப்பிலிருந்தும், நோயரை மீட்டெடுக்க குடும்பத் துணையின் ஒவ்வொரு வார்த்தையும் மருத்துவமே. குறிப்பாக, குழந்தை ஒருவேளை ‘ஜுவனைல் டயாபட்டிக்’காக ஆகியிருப்பின், அதன் குழந்தை மனம் வலித்துவிடாமல், அந்த ஊசியின் பயனை மெல்ல மெல்ல விளையாட்டாய், மகிழ்வாய்ச் சொல்லி, அந்தக் குழந்தை அதை மறுத்துவிடாமல் போட்டுக்கொள்ள, குழந்தையாகவே நாமும் மாறி, கூட மகிழ்ந்து நடிப்பதும் மருத்துவமே.

வேளை தப்பி, மருந்து சாப்பிடுவது, ‘சாப்பாட்டுக்கு முன்னரா? பின்னரா?’ என அறியாமல் விழுங்குவது போன்றவை சர்க்கரைக் கட்டுப்பாட்டைத் தரவே தராது. சில மருந்து சாப்பாட்டுக்கு முன் எனில், சரியாக 15 நிமிடம் முன் சாப்பிட வேண்டும். சில மருந்து சாப்பாட்டுக்குப் பின்னர் எனில், 20 நிமிடம் கழித்துச் சாப்பிட வேண்டும்.

ஒவ்வொரு மாத்திரையிலும் இரண்டு மூன்று கோட்டிங், மாத்திரையைப் பொறுத்து இருக்கும். அது மெல்லக் கரைய வேண்டுமா, நீடித்துக் கரைய வேண்டுமா என, பல அறிவியல் நுட்பங்கள்  திட்டமிடப்பட்டு அவற்றின்  கோட்டிங்குகள் இருக்கும். சாப்பாட்டுக்கு முன் விழுங்கும் மாத்திரை, வேலை செய்யும் விதம் வேறு. சாப்பாட்டுக்குப் பின்னர் விழுங்கும் மாத்திரை, செய்யும் வேலை வேறு.

இவற்றை எல்லாம், நோயருடன்,  குடும்பமும் முழுதாகப் புரிந்துகொள்வது அவசியம். மருந்து எடுக்கும் துல்லியம் குறையக் குறைய, குடும்பத்துக்கும் நாட்டுக்குமான நோயைக் கட்டுப்படுத்தும் செலவு கூடிக்கொண்டே செல்லும்.

இனிப்பு நோயைப் பொறுத்தமட்டில் குடும்ப அரவணைப்பு, ‘அனுபானம்’ எனும் துணை மருந்து மாதிரி. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் மட்டுமல்ல. பரிவான மருத்துவரும்கூட!

(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x