Published : 01 Sep 2018 11:16 AM
Last Updated : 01 Sep 2018 11:16 AM

யுவர்ஸ் மியூஸிக்கலி..!

6 வயது சிறுவர் முதல் 60 வயது பெரியவர்வரை அவர்களுக்குள் இருக்கும் நடிப்பு, பாட்டு, நடனம் ஆகிய திறமைகளை வெளிக்கொண்டு வந்த ஸ்மார்ட்போன் செயலி அது. திடீரெனப் பல இளசுகளை ‘செலிபிரிட்டி ஸ்டேட்டஸ்’ அளவுக்கு உயர்த்திய செயலியும் அதுதான். அந்தச் செயலி… மியூஸிக்கலி.!

ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் உங்களுக்குப் பிடித்த பிரபலமான திரைப்பட வசனம் அல்லது பாட்டு. இவைபோதும், நீங்களும் ஆகலாம் ‘இன்ஸ்டன்ட் ஸ்டார்!’. அந்தச் செயலியைத் திறந்து வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கினால், ‘ஜிகாபைட்’ டேட்டா குறைவதும் தெரியாது, நேரம் போவதும் தெரியாது.

உலகம் முழுக்க ‘மியூஸிக்கலி’ பயனாளர்கள், இப்போது சீனாவின் அடிமைகள். ஆம்… இந்தக் கட்டுரையை எழுதும்போது அந்தச் செயலியை சீனாவின் ‘டிக்டாக்’ எனும் நிறுவனம் விலைக்கு வாங்கிவிட்டது. அதனால் தற்போது அந்தச் செயலியின் பெயர் ‘டிக்டாக்!’.

‘டிக்டாக்’கில் என்ன செய்யலாம்?

உலகின் மிகச் சிறந்த படைப்புலகம் எனத் தன்னை அழைத்துக்கொள்கிறது டிக்டாக். அதில் நீங்களே சொந்தமாக ஒரு நொடியில் இருந்து 60 நொடிகள் வரை வீடியோக்களை உருவாக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனே உங்களுக்கான மேடை. சில நொடி வீடியோவைப் பதிவேற்றுவதன் மூலம் நீங்கள் கோடிகணக்கான பார்வையாளர்கள் முன் வலம்வரலாம்.

இது 2014-ம் ஆண்டு வெளிவந்தது. அதற்கு முன் ஜெர்மனி நிறுவனத்தின் ‘டப்ஸ்மாஷ்’ எனும் செயலி பிரபலமாக இருந்தது. ஆனால் ‘மியூஸிக்கலி’ சமூக வலைத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதால், ‘டப்ஸ்மாஷ்’ செயலியைவிட எளிதாகவும், மேம்பட்டதாகவும், பலரைக் கவர்வதாகவும் இருக்கிறது.

செயலி செய்யும் மாயம்

இதில், நீங்கள் பெரிதாக உழைக்க வேண்டிய அவசியமில்லை. இடம் பொருள் ஏவல் என்று சிரமப்பட வேண்டாம். நீங்கள் எங்கிருக்கிறீர்களோ அந்த இடமே போதும். அது படுக்கையறையாக இருந்தாலும் சரி. நான் பார்த்த பல ‘ஹிட்’ வீடியோக்கள் கழிவறையில் எடுக்கப்பட்டவை! மற்றவர்கள் நம்மைப் பாராட்டு கிறார்கள் என்றால் நம் மகிழ்ச்சி அளவில்லாமல் பெருகும். இங்கு லைக், கமெண்ட், ஷேர்தான் அந்தப் பாராட்டுகள்.

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இதர சமூக வலைத்தளங்களுக்கும் இந்தச் செயலிக்குமான முக்கிய வித்தியாசம், இதில் உங்களைப் பின்தொடரும் நபர்களை ‘ஃபாலோயர்ஸ்’ என்று அழைக்காமல், ‘ஃபேன்ஸ்’ (ரசிகர்கள்) என்கிறது. ‘அடடா… அற்புதமாக இருக்கிறதே!’ என்று நீங்களும் அந்தச் செயலியைத் தரவிறக்க அவசரப்பட வேண்டாம். பார்க்கத்தான் இது அற்புதச் செயலி. ஆனால் ஆபத்தான செயலியும்கூட. அதுவும் உங்கள் பிள்ளைகளுக்கு!

பப்ளிக்… பப்ளிக்…!

நீங்கள் உருவாக்கும் ஒரு வீடியோவுக்கு இரண்டே பாதுகாப்புத் தேர்வுகளைத் தான் இந்தச் செயலி கொடுத்திருக்கிறது. ஒன்று ‘பிரைவேட்’, இன்னொன்று ‘பப்ளிக்’. பிரைவேட் தேர்வில் உங்களின் வீடியோ உங்களுக்கு மட்டும்தான் தெரியும். பப்ளிக் என்றால் அனைவருக்கும் பொதுவாகத் தெரியும். இந்தச் செயலியில் உங்கள் வீடியோவை ‘குறிப்பிட்ட நபர்களுக்கு, நண்பர்களுக்கு மட்டும்’ என்று காட்டும் ‘பிரைவேட்’ தேர்வு இல்லை. இது மிகப் பெரிய பாதுகாப்புக் குறைபாடு. யார் வேண்டுமானலும் உங்கள் வீடியோவைப் பார்க்கலாம். தரவிறக்கம் செய்துகொள்ளலாம். அதை எப்படி வேண்டுமானலும் பயன்படுத்த முடியும். இதிலிருந்தே இதன் ஆபத்து உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இந்தச் செயலி மூலம் யார் வேண்டுமானாலும் உங்களுடன் ‘கமெண்ட்ஸ்’ மூலம் நேரடியாகத் தொடர்புகொள்ளும் வசதி உள்ளது. அதிகபட்சமாக நீங்கள் கமெண்ட் பாக்ஸை மூடலாம். அவ்வளவுதான். திறந்து வைத்தால் யார் வேண்டுமானலும் உங்களையோ, உங்கள் பிள்ளைகளையோ தொடர்பு கொள்ள சாத்தியங்கள் உள்ளன.

அடல்ட்ஸ் ஒன்லி!

நீங்கள் இந்தச் செயலியைத் திறந்து பொதுவான வீடியோக்களைப் பார்க்கலாம். வீடியோக்கள் வரிசையாக வந்துகொண்டே இருக்கும். அப்படி வரும் வீடியோக்களை, செயலியே தேர்ந்தெடுத்துக் காட்டும். இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது.

ஒரு வீடியோ, 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு உகந்ததா எனப் பதிவேற்றுபவரும் தெரிவுசெய்ய முடியாது, பார்ப்பவரும் தெரிவுசெய்ய முடியாது. இதனால் குழந்தைகள் இந்தச் செயலியைப் பயன்படுத்தும்போது அவர்களுக்குப் பொருந்தாத, அவர்களின் மனத்தைச் சிதைக்கும் காட்சிகள், வசனங்கள் மிக எளிதாக அவர்களைச் சென்று சேர்கின்றன.

musically 2jpg

நீங்களே இந்தச் செயலியை அனைவரின் முன்னும் கேட்க முடியாது. அரைகுறை ஆடையில் ஆபாச அசைவுகளுடன் ஆடும் பெண்கள், பல வசவு வார்த்தைகளை நாகூசாமல் பேசும் ஆடியோக்கள் எனக் குவிந்துள்ளன. எனவே, எந்த நேரம் என்ன மாதிரியான மிக மோசமான வீடியோ வரும் என்று உங்களால் கணிக்க முடியாது. அப்படி வந்துவிட்டால் அனைவரின் முன்னும் நீங்கள் அவமானப்பட வேண்டியதுதான்.

மனநலப் பாதிப்புகள்

சமூக வலைத்தளங்களில் வரும் லைக்குகளுக்கும் கமெண்ட்டுகளுக்கும், நம் மனநலத்துக்கும் நேரடியான தொடர்பிருப்பது பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. பல நேரம் இந்தச் செயலியில் லைக் வராமல் போனாலோ, பார்வையாளர்களின் வரவு குறைந்தாலோ தன் மீதே தனக்கு வெறுப்பு ஏற்படவும், சுயகழிவிரக்கம் கொள்ளுதல், தன்னம்பிக்கையற்றுப் போதல் போன்ற பல பிரச்சினைகள் தலைகாட்ட சாத்தியங்கள் உள்ளன.

குறிப்பாகப் பதின் வயதினர், இந்த மன அழுத்தத்தில் சிக்கி வெளிவர முடியாமல் தவிப்பார்கள். இது நேரடியாக அவர்களின் படிப்பு, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றைப் பாதிக்கும். பல நேரம் தற்கொலை வரை அவர்களைக் கொண்டு செல்லும்.

இதுபோன்ற செயலிகளால் ஏற்படும் இன்னொரு பாதிப்பு, ‘நார்சிஸ’ மனோபாவம் கொள்வது. அதாவது, தன்னைத் தானே சுயமோகித்துக் கொள்வது. இது ஆபத்தான மனநோய். தன் வீடியோக்களில் வரும் எதிர்மறையான கமெண்ட்டுகள், தன் சுயபிம்பத்தைப் பற்றிய கேள்வியை எழுப்பலாம். இதனால் தங்கள் உடலை மேம்படுத்தும் அக்கறையில் உண்ணாமல் இருப்பது அல்லது அதீத மன அழுத்தத்தால் அதிகமாக உணவு உண்பது என உடல்ரீதியான பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளச் சாத்தியமுள்ளது.

என்ன செய்ய வேண்டும்?

என்ன மாதிரியான வீடியோக்களை, நம் பிள்ளைகள் பதிவேற்றுகிறார்கள் அல்லது பார்க்கிறார்கள் என்ற கண்காணிப்பு அவசியம். ஒருவேளை அவர்கள் மன அழுத்தத்தில் சிக்கிக் கொண்டிருந்தால், செயலியைப் பயன்படுத்த அவர்களுக்கு ‘தடா’ போடுங்கள். முறையாகப் பயிற்சி பெற்ற மனநல மருத்துவர்களின் துணையை நாடுவது அவசியம்.

இந்தச் செயலியைப் பற்றிக் குறைகூறுவது நம் நோக்கமல்ல. இதுதான் எதிர்காலம். ஆனால், இன்னும் இந்தச் செயலியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம். முதலில் அந்தச் செயலியில் பல பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த அந்த நிறுவனத்தை நிர்ப்பந்திக்க வேண்டும்.

அடுத்து, அவர்கள் ஆரம்பத்தில் உருவாக்கியதுபோல் பொழுதுபோக்குடன் கூடிய கல்வி தொடர்பான வீடியோக்களை உருவாக்கச் செய்வது. இவை நிறைவேறும்வரை நாம் எப்போதும் உஷார் நிலையிலேயே இருக்க வேண்டும். ஏனென்றால், கற்பதை விடவும் பொழுதுபோக்கு மிகவும் பிரபலமானதாகவும் அவசியமானதாகவும் இன்றைய தலைமுறையினருக்கு இருக்கிறது!

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: thiruvinod4u@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x