மூலிகையே மருந்து 20: நலம் கூட்டும் ‘பொன்!’

மூலிகையே மருந்து 20: நலம் கூட்டும் ‘பொன்!’
Updated on
2 min read

பெயரிலேயே தங்கத்தை வைத்திருக்கும் ‘பொன்’னாங்காணி, நலத்தை வாரி வழங்கும் வகையில், தங்கத்தைவிட மதிப்புமிக்கது. நீர்ப்பாங்கான இடங்களில் கொட்டிக்கிடக்கும் ‘மூலிகைத் தங்கம்’ இது. கண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

பெயர்க் காரணம்: கொடுப்பை, சீதை, சீதேவி, பொன்னாங்கண்ணி ஆகிய வேறு பெயர்களைக் கொண்டது பொன்னாங்காணி. இதை உணவாகத் தொடர்ந்து பயன்படுத்த பொன் போன்ற தேகத்தைக் காணலாம் என்ற பொருளில், பொன்னாங்காணி (பொன்+ஆம்+காண்+நீ) என்ற பெயர் உருவானது.

‘தங்கச் சத்து’ மிக்க மூலிகையாக அறியப்பட்டதால் பொன்னாங்காணி என அழைக்கப்படுகிறது. மீனுக்கு நிகராக இதன் இலைகளை உருவகப்படுத்தி, ‘கொடுப்பை’ (ஒரு வகை மீன்) எனும் பெயர் ஏற்பட்டிருக்கலாம். பொன்னாங்காணியில் நிறைய சிற்றின வகைகளும் உள்ளன.

அடையாளம்: சிறிது நீண்ட இலைகளைக் கொண்டதாக, தரையோடு படரும் தாவரம் இது. மலர்கள் வெண்ணிறத்தில் காணப்படும். ஈரப்பாங்கான இடங்களில் அதிக அளவில் பார்க்கலாம். ‘ஆல்டர்னான்திரா ஸெஸ்ஸைலிஸ்’ (Alternanthera sessilis) என்பது இதன் தாவரவியல் பெயர். அமரந்தேசியே (Amaranthaceae) குடும்பத்தைச் சார்ந்தது. லூபியோல் (Lupeol), காம்பஸ்டீரால் (Campesterol), ஸ்டிக்மாஸ்டீரால் (Stigmasterol) ஆகிய வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது.

உணவாக: பொன்னாங்காணி இலைகளோடு, பாசிப்பயறு, வெங்காயம், பூண்டு, மிளகு, கொத்துமல்லித் தூள், தேங்காய் மற்றும் புளி சேர்த்துச் சமைக்கலாம். இது கேழ்வரகுக் களிக்குச் சிறந்த இணையாக கர்நாடகாவின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. பொன்னாங்காணி இலைகளை நெய்யில் வதக்கியபின், மிளகு, உப்பு சேர்த்து, புளிப்பு நீக்கி தொடர்ந்து சாப்பிட்டுவர, பார்வை அதிகரிப்பதோடு, வாழ்நாளும் அதிகரிக்கும் என்கிறது சித்த மருத்துவம்.

இரும்புச் சத்து, சுண்ணச் சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் – சி, வைட்டமின் – பி எனப் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், கர்ப்பிணிகளுக்கான உணவுப் பட்டியலில் பொன்னாங்காணியைச் சேர்க்கப் பரிந்துரைக்கலாம். முகப்பூச்சுகளின் ஆதரவின்றிப் பளபளப்பான தேகம் பெற, இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். வேக வைத்து வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட, மலத்தை இளக்கும். உடலுக்குப் பலத்தைக் கொடுக்க, துவரையோடு பொன்னாங்காணி சேர்த்துக் கடைந்து நெய்விட்டுச் சாப்பிடலாம்.

பொதுவாக, எதிர்-ஆக்ஸிகரணி (ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்) கூறுகள் நிறைந்த தாவரங்களைக் கற்ப மூலிகைகளாக வகைப்படுத்தியுள்ளது சித்த மருத்துவம். அதில் பொன்னாங்காணியும் ஒன்று.

மருந்தாக: கிருமிநாசினி செய்கையுடைய இதன் இலைகள், வயிற்றுப் புண்களை விரைவாகக் குணப்படுத்துவதாக ‘இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் பார்மகக்னோஸி அண்ட் ஃபைட்டோ கெமிக்கல் ரிசர்ச்’ எனும் ஆய்விதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது. ரத்தத்தில் உயர்ந்த சர்க்கரை அளவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றையும் பொன்னாங்காணி குறைக்கிறது.

வீட்டு மருந்தாக: ரத்தக் குறைவு, தலைமுடி வளர்ச்சி, மூலம், கண் பார்வை, நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்த எனப் பல வகைகளில் பொன்னாங்காணியைச் சோளகர் பழங்குடிகள் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். முற்காலத்தில் தென்னிந்தியாவின் பெரும்பாலான இடங்களில் கர்ப்பிணிகளின் உடல் வலிமையை அதிகரிக்க, பொன்னாங்காணிக் கீரையை அன்பளிப்பாக வழங்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

கண்கள் சிவந்து எரிச்சல் ஏற்படும்போது, இதன் இலைகளை அரைத்துக் கண்களில் வைத்துக் கட்டலாம். இலைகளை அரைத்து அடைபோல் செய்து அடிபட்ட வீக்கங்களுக்குப் பற்றுப் போடலாம்.

பொன்னாங்காணி இலைச் சாறோடு பல மூலிகைகள் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘பொன்னாங்காணித் தைலத்தை’ தலைக்குத் தேய்த்துக் குளிக்க கை, கால் எரிச்சல், உடற்சூடு, ஆரம்பநிலை மூலம், வெள்ளைப்படுதல் போன்ற வெப்பம் சார்ந்த நோய்கள் கட்டுப்படும். வேனிற்கால அதிவெப்பத்திலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள இந்தத் தைலம் சிறந்தது.

நம் நாட்டில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டை நீக்க விலையுர்ந்த உணவுப் பொருட்கள் தேவையில்லை. பொன்னாங்காணி போன்ற  கீரை வகைகளே போதும். இதன் தண்டுகளை மண்ணில் புதைத்து வைத்தால், பசுமையான கீரையாக உருப்பெற்றுப் பலன்களை அள்ளிக்கொடுக்கும்.

மொத்தத்தில் செய்கூலி, சேதாரம் இல்லாத தங்கம்… இந்தப் பொன்னாங்காணி!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in