Published : 22 Sep 2018 11:35 AM
Last Updated : 22 Sep 2018 11:35 AM

பெண்களை அதிகம் பாதிக்கும் அல்சைமர்!  

 உலகெங்கும் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், வயதானவர்களுக்கு வரக்கூடிய நோயும் அதிகரிக்கிறது. வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்களில் மூளைத் தேய்மான நோய் அல்லது ஞாபக மறதி நோய் எனப்படும் அல்சைமரும் ஒன்று.

கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் செல்களைச் சிதைக்கும் நோய் இது. இதனால், வயதானவர்கள் ஞாபக சக்தியை இழந்து, ஒரு கட்டத்தில் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மறந்துவிடும் அளவுக்கு விபரீதமான நோய்தான் அல்சைமர். 65 வயது தாண்டியவர்களையே இந்த நோய் அதிகம் பாதிக்கிறது.இந்த நோயைப் பற்றி 1906-ல் ஜெர்மனியைச் சார்ந்த மருத்துவர் அலோஷியஸ் அலாய்ஸ் அல்சைமர்தான் முதன்முதலில் உலகுக்கு எடுத்துரைத்தார். அதனால் அவரது பெயராலேயே இந்த நோய் அழைக்கப்படுகிறது.

இரண்டு வகை அல்சைமர்

உலக அல்சைமர் நோய் விழிப்புணர்வு சங்கத்தின் கணிப்புப்படி உலகில் 65 வயதுக்கு மேற்பட்டோரில் 4 கோடிப் பேர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் 41 லட்சம் பேர் இந்த நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் 12 ஆண்டுகளில் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, 65 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அல்சைமர் நோயின் தாக்கம் தெரிந்தாலும், அதைவிடக் குறைவான வயதுள்ள வர்களிடமும் இந்த நோயைக் காண முடியும்.  30 வயதுகளில் உள்ளவர் களுக்குக்கூட அல்சைமர் நோய் வரும் அபாயமும் உள்ளது.அல்சைமரில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, பரம்பரையாக வரக்கூடியது. இரண்டு, குடும்பம் சாராமல் வருவது. முன்னது பெரும்பாலும் மரபணுக் கோளாறுகளால் வரக்கூடியது.

பெண்களுக்கே அதிகம் பாதிப்பு

பரம்பரையாக வரக்கூடிய அல்சைமர் நோய் என்பது குறைவுதான். இந்த வகையில் 5 சதவீதம் பேர்தான் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

எஞ்சிய 95 சதவீத அல்சைமர் நோயாளிகள், பிற காரணங்களால் அந்தப் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.அல்சைமர் நோய் எப்படி ஏற்படுகிறது என்பதைப் பற்றி மருத்துவ உலகம் இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கவில்லை.

ஆனால்,  மூளைக்குள் ஏற்படும் சிக்கலான மாற்றங்கள் குறித்தும், அது உருவாக்கும் அறிகுறிகளை வைத்தும் நாம் கண்டுகொள்ள முடியும். வயதுதான் இந்த நோய்க்கான முக்கியமான காரணியாக உள்ளது.

பொதுவாக இரு பாலருக்குமே அல்சைமர் நோய் வரும். குறிப்பாக, பெண்களைத்தான் இது அதிகம் பாதிக்கிறது. ஆண்களைவிடப் பெண்கள் அதிக ஆண்டுகள் வாழ்ந்தாலும், இந்த நோயால் ஆண்களைவிடப் பெண்களே அதிகம் இறக்கிறார்கள்.

அறிகுறிகள் என்ன?

அல்சைமர் என்பது ஒரு மோசமான நோய். அல்சைமர் நோயாளிகளால் எதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாது. தாங்கள் பழகிய முகங்களையே மறந்துவிடுவார்கள். அவர்களால் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்க முடியாது. முடிவுகள் எடுக்கத் தடுமாறுவார்கள். தங்களைத் தாங்களே மறக்கத் தொடங்குவார்கள். மற்றவர்களுடைய உதவியில்லாமல் அவர்களால் செயல்பட முடியாது. நாளாக நாளாக இதன் அறிகுறிகள் மோசமாக மாறும்.  எல்லா அல்சைமர் நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்காது. அறிகுறிகளைப் பொறுத்து பிரச்சினைகளின் தீவிரம் இருக்கும். ஆரம்ப கால அல்சைமர் நோய்க்கான அறிகுறி என்பது குறுகிய கால நினைவாற்றல் இழப்புதான்.

இது தவிர, குழப்பம், தினசரி வாழ்வின் செயல்களைச் செய்யக் கஷ்டப்படுவது, குடும்பம் மற்றும் நண்பர்களை அடையாளம் காணச் சிரமப்படுவது, பொருட்களை அடையாளம் காண முடியாமல் தவிப்பது, எடை இழப்பு, சிறுநீர்ப்பை கட்டுப்பாடு இழப்பு, திரும்பத் திரும்ப பேசிய விஷயத்தையே பேசிக்கொண்டிருப்பது, பேசச் சிரமப்படுவது, தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம் என அறிகுறிகள் மாறுபடும்.மூளையில் பிரத்யேகமான செல் மாற்றம், புரத படிமானங்கள்தாம் இந்நோய் ஏற்பட முக்கியக் காரணம். அடிக்கடி தலையில் ஏற்படும் காயங்கள், மன அழுத்தம், அதீதக் கோபம், போதை மருந்துப் பழக்கம், மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுதல் போன்றவற்றால் அல்சைமர் நோய் ஏற்படக்கூடும்.இந்த நோயைக் குணப்படுத்த இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

நோயின் தீவிரத்தைக் குறைக்க மட்டுமே மருந்துகள் உள்ளன.

 

எப்படித் தவிர்ப்பது?

வயதான காலத்தில் கொழுப்பைத் தவிர்க்க வேண்டும். உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம், நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது, மதுப் பழக்கத்தைக் கைவிடுவது, தலையில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது போன்றவற்றின் மூலம் இந்த நோய் வராமல் தடுக்கலாம். உணவுப் பழக்கத்தில் மாற்றம், வாழ்க்கை முறையில் மாற்றம், மூளையின் அறிவைத் தூண்டக்கூடிய புதிய விளையாட்டுகளில் ஈடுபடுவது ஆகியவற்றின் மூலமும் இந்த நோய் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.இந்த நோயால் பாதிக்கப்படும் முதியவர்களைப் பராமரிப்பது மிகப் பெரிய சவால். இதன் காரணமாக இந்நோய் பாதித்த முதியவர்களைப் பிள்ளைகள் கைவிட்டுவிடுகிறார்கள் அல்லது பராமரிப்பதில் அலட்சியத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைத்து அவர்களைப் பாரமரித்துப் பாதுக்காக்க வேண்டும்.

கட்டுரையாளர், தமிழ்நாடு, புதுச்சேரி மூளை நரம்பியல் கழக முன்னாள் தலைவர்

தொடர்புக்கு: drmaaleem@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x