மூலிகையே மருந்து 23: மருதாணி… மருதாணி… 

மூலிகையே மருந்து 23: மருதாணி… மருதாணி… 
Updated on
2 min read

ஆசையாகப் பறித்த மருதாணியை நீர்விட்டு அம்மியில் மைய அரைப்பது, சென்ற தலைமுறையின் நினைவில் அழியாத கவிதை!

அரைத்த மருதாணியை உள்ளங்கைகளிலும்  உள்ளங்கால்களிலும் விரும்பிய வடிவங்களில் விரல்களில் பொதித்து, அது கொடுக்கும் நிறத்துக்காக ஏக்கத்துடன் காத்திருந்து, எதிர்பார்த்த சிவந்த நிறம் மலரும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்காதவர்கள் இருக்க முடியாது.

மருதாணி வழங்கும் செவ்விய நிறத்துக்கு மயங்காத ஜீவன் இல்லை என்பது போல, அதன் குணத்துக்கு அலறாத நோய்கள் இல்லை எனலாம்! மருதாணி, அலங்காரப் பொருள் மட்டுமல்ல… நோய் நீக்கும் மூலிகையும்கூட! திருமண நிகழ்வுகள், திருவிழாக்கள் எனப் பன்னெடுங்காலமாக நம் கலாச்சாரத்தோடு பிண்ணிப் பிணைந்திருக்கும் மருதாணி, நோய்களை அகற்றுவதில் கில்லாடி.

ஆனால், சமீபமாக மருதாணியின் பயன்பாட்டை வேதியல் ஆக்கிரமிப்பு நிறைந்த ‘மெகந்தி’ கலவைகள் குறைத்துவிட்டன.

 பெயர்க் காரணம்:

அழவணம், மருதோன்றி ஆகிய வேறுபெயர்களைப் பெற்றிருக்கிறது மருதாணி. அழகை வழங்குவதால், ‘ஐ’வணம் (ஐ-அழகு) என்ற பெயரும் இதற்கு உண்டு. குளிர்ச்சியைக் கொடுப்பதாலும் இது, ஐவணம் (ஐ-கபம்) என்று அழைக்கப்பட்டிருக்கலாம். பாதங்களுக்குப் பயன்படுவதால், சரணம் (சரணம்-பாதம்) என்ற பெயரும் உள்ளது. அடையாளம்: சிறுமர வகையைச் சார்ந்தது இது. கூர்மையான சிறிய இலைகளை உடையது. மணமுடைய மலர்கள், வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும். மருதாணியின் தாவரவியல் பெயர் ‘லாசோனியா இனெர்மிஸ்’ (Lawsonia inermis). ‘லைத்ரேசியே’ (Lythraceae) குடும்பத்தைச் சார்ந்தது. சாந்தோன்கள் (Xanthones), ஃப்ளேவனாய்டுகள் (Flavonoids), லுடியோலின் (Luteolin), லுபியால் (Lupeol), கொமரைன் (Coumarine) போன்ற வேதிப்பொருட்கள் மருதாணியில் நிறைந்திருக்கின்றன. மருதாணி கொடுக்கும் நிறத்துக்கு அதிலிருக்கும் லாசோன் (Lawsone) எனும் பொருள் காரணமாகிறது.

உணவாக:

இதன் இலைகளோடு, சிறிது பூண்டையும் ஐந்து மிளகுகளையும் சேர்த்து அரைத்து, ஐந்து கிராம் அளவு ஏழு நாட்கள் சாப்பிட்டுவர, புண்கள் குறையும். தோல் நோய்களுக்கு, இதன் இலைகளை நீராகாரத்தில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் குடித்து வந்தால், உடலக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். மருதாணி இலைச் சாற்றைத் தண்ணீரில் கலந்து, பனைவெல்லம் சேர்த்துப் பருகினால் விந்துநீரின் அளவு அதிகரிக்கும் என்கிறது சித்த மருத்துவம். துவர்ப்புச் சுவையுடைய இதன் வேர்ப்பட்டையைக் கஷாயமாக்கிக் கொடுக்க, மாதவிடாய்க் காலத்தில் அதிக அளவில் வெளியாகும் உதிரப் போக்கைக் கட்டுப்படுத்தும்.

மருந்தாக:

‘சூடோமோனாஸ் அருகினோஸா’ (Pseudomonas aeruginosa) எனும் பாக்டீரியாவை அழிக்கும் வன்மை மருதாணி இலைகளுக்கு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. கல்லீரல் செல்களைப் புதுப்பிக்கவும், கல்லீரல் பாதிப்பால் ரத்தத்தில் அதிகரித்திருக்கும் சில நொதிகளைக் குறைப்பதற்கும் இதன் இலைச் சத்துக்கள் பயன்படுவதாக ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது. இதன் விதைகளுக்கு நரம்பு மண்டலத்தைச் சாந்தப்படுத்தும் திறன் இருக்கிறது.

பூஞ்சைகளை அழிக்கும் வன்மையும் (Fungicidal) இதன் பட்டைக்கு இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வீட்டு மருந்தாக:

 பாதங்களில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு போன்ற அறிகுறிகளுக்கு மருதாணி இலைகளை அரைத்து உள்ளங்கால்களில் பூசி வரலாம். விரல்களுக்கு மருதாணி வைப்பது அழகைக் கொடுப்பதோடு, நகத்தின் ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்புக் கவசமாகச் செயல்படும். தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், மருதாணிப் பூக்களைத் துணியில் முடிந்து தலையணைக்கு அடியில் வைத்து உறங்கலாம். மருதாணியோடு சிறிது சுண்ணாம்பு கலந்து பூச, கூடுதல் நிறம் கிடைக்கும். இதன் இலைக் கஷாயத்தைக் கொண்டு வாய் கொப்பளிக்க, வாயில் உண்டாகும் புண்கள் குணமாகும். தோலில் தோன்றும் வெண்படைக்கும் மருதாணியைப் பூசலாம். உடலில் ஏற்படும் தசைப் பிடிப்புகளைச் சரி செய்ய, மருதாணி இலைகளை அரைத்து அந்தப் பகுதியில் கட்டலாம். இளநரையை மறைப்பதற்குச் சிறந்த ஆயுதம் மருதாணி.

மருதாணி, அவுரி, செம்பருத்தி, கரிசாலை ஆகியவற்றைக் கொண்டு பக்கவிளைவு இல்லாத, இயற்கையான சாயம் தயாரித்துத் தலைமுடிக்குத் தடவலாம். இதைவிடுத்து, தரமற்ற, செயற்கையான சாய பவுடர்களை அதிக அளவில் உபயோகிப்பதால், தோலில் கரு நிறத்திலான திட்டுக்கள் தோன்றுவதோடு, கேசத்தின் வலிமையும் குறையும். முற்காலத்தில் தலைமுடிச் சாயமாக மட்டுமல்லாமல், உடலில் ஓவியங்கள் வரைவதற்கும் (டாட்டூ போல) மருதாணி பயன்பட்டிருக்கிறது.

வேனிற்காலத்தில் வாரம் ஒருமுறை மருதாணியை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்க, தலைமுடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதுடன், உடலில் அதிகரித்த வெப்பமும் குறையும். மருதாணியின் நிறம் நன்றாகப் பற்றிக்கொண்டால், மருதாணி வைக்க உதவியவருக்குத் தன்மீது கொள்ளைப் பிரியம் எனக் காதல் இலக்கணத்தை வெளிப்படுத்த உதவிய மருதாணி, மூலிகைகளுள் இனிமை நவிழும் ‘செம்’மொழி!...

கட்டுரையாளர்,
அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in