Published : 01 Sep 2018 11:14 am

Updated : 01 Sep 2018 11:14 am

 

Published : 01 Sep 2018 11:14 AM
Last Updated : 01 Sep 2018 11:14 AM

நலம், நலமறிய ஆவல் 50: பார்க்கின்சன்... பொறுமை காப்போம்!

50

என் அப்பாவுக்கு வயது 64. சில மாதங்களாக அவருக்குக் கைகளில் நடுக்கம் இருந்தது. வயதாவதால் அப்படி இருக்கும் என்று கருதி சிகிச்சை எடுக்கவில்லை. இப்போது சில வாரங்களாக உடல் விரைத்துப்போகிறது. முணுமுணுப்பதுபோல் பேசுகிறார். எங்களுக்கு அதைப் புரிந்துகொள்ளச் சிரமமாக இருக்கிறது.

எப்போதும் எதையோ யோசித்துக்கொண்டிருப்பதுபோல் இருக்கிறார். அவர் கிராமத்தில் இருக்கிறார். இன்னும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை. இது என்ன கோளாறாக இருக்கும்? நண்பர்கள் இதை நரம்புத் தளர்ச்சி என்று கூறுகிறார்கள். இதற்கு என்ன மாதிரியான சிகிச்சை எடுப்பது? எந்த டாக்டரிடம் ஆலோசனை பெறுவது?

- கே. சண்முகநாதன், கடலூர்.

நீங்கள் சொல்லும் அறிகுறிகளை வைத்துப் பார்த்தால், உங்கள் அப்பாவுக்கு ‘உதறுவாதம்’ என்ற ‘பார்க்கின்சன் நோய்’ (Parkinson’s disease) இருப்பதுபோல் தெரிகிறது. இந்த நோயின் முதல் அறிகுறியே கைகளில் ஏற்படும் நடுக்கம்தான்.

ஆரம்பத்தில் உள்ளங்கைக்குள் ஏதோ ஒரு பொருளை வைத்துக்கொண்டு எப்போதும் உருட்டிக்கொண்டு இருப்பதுபோல் செய்துகொண்டிருப்பார்கள். விரல்கள் ஆடிக்கொண்டே இருப்பதுபோல் இருக்கும். பொதுவாக, ஒரு கையில் நடுக்கம் அதிகமாகவும், மறு கையில் சற்றுக் குறைவாகவும் இருக்கும்.

இந்த நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் காலுக்கும் தலைக்கும் பரவும். கைகுலுக்குவதும் கையெழுத்துப் போடுவதும் சிரமப்படும். விநோதம் என்னவென்றால், ஓய்வாக இருக்கும்போதுதான் இந்த நடுக்கம் காணப்படும். ஏதாவது ஒரு வேலை செய்யத் தொடங்கினால், இந்த நடுக்கம் நின்றுவிடும். உறக்கத்திலும் இந்த நடுக்கம் இருக்காது. நடுக்கம் நாக்கையும் பாதிக்கும்போது பேச்சிலும் வேறுபாடு தெரியும். நீங்கள் சொல்வதுபோல், இவர்கள் மிகவும் குறைந்த தொனியில்தான் பேசுவார்கள். அது மற்றவர்களுக்குப் புரியவும் செய்யாது.

அடுத்ததாக, உடலில் உள்ள தசைகள் இறுகி மரக்கட்டைபோல் ஆகிவிடும். இதனால், ஓரிடத்தில் உட்கார்ந்தால், மணிக்கணக்கில் எந்தவித அசைவும் இல்லாமல், அப்படியே உட்கார்ந்திருப்பார்கள். நிற்க வைத்தாலும் அதே நிலைமைதான். நின்றுகொண்டே இருப்பார்கள். நடை தள்ளாடும்.

தாம் செய்யும் வேலையைத் திடீரென்று பாதியில் நிறுத்திக்கொள்வார்கள். உண்ணும்போதும், உடை உடுத்தும்போதும், பொத்தான் மாட்டும்போதும் இந்த மாதிரி நடக்கும். முகத்தில் எந்தவிதச் சலனமும் இல்லாமல், எதையாவது உற்றுப்பார்த்துக்கொண்டே இருப்பார்கள். வாயில் எச்சில் ஊறிக்கொண்டே இருக்கும். சருமம் வழுவழுப்பாகிவிடும்.

இவற்றைத் தொடர்ந்து, உணவை விழுங்குவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். கழிப்பறை போக, குளிக்க, உடை உடுத்த… இப்படி அன்றாடச் செயல்களுக்கு அடுத்தவர்களின் உதவி தேவைப்படும். சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். அடிக்கடி சிறுநீர் போகத் தோன்றும். இதனால் உறக்கம் குறையும். உணவு குறைவதால் மலச்சிக்கல் ஏற்படும். மனச்சோர்வு தலைதூக்கும். ஞாபக மறதியும் கைகோத்துக்கொள்ளும். பெரும்பாலும் இந்த நோய் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம்தான் காணப்படுகிறது. பெண்களைவிட ஆண்களிடம்தான் இந்தப் பாதிப்பு அதிகம்.

என்ன காரணம்?

இந்த நோய் வருவதற்கான உண்மையான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மரபுப் பண்பும் சுற்றுச்சூழல் கேடுகளும் இணைந்து இந்த நோயை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. மூளையில் உள்ள நரம்பணுக்களில் ‘டோபமைன்’ (Dopamine) எனும் வேதிப்பொருள் ஒன்று சுரக்கிறது. வயதாகும்போது நரம்பணுக்களின் எண்ணிக்கை குறையும். அப்போது ‘டோபமைன்’ சுரப்பும் குறையும்.

இதனால், உடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். இவற்றின் விளைவாக வருவதுதான் ‘பார்க்கின்சன் நோய்’. பெரும்பாலும் ‘டோபமைன்’ சுரப்பு 80 சதவீதம் குறைந்த பிறகே இந்த நோயின் அறிகுறிகள் வெளிப்படும். முதன்முதலில் 1817-ல் லண்டன் மருத்துவர் ஜேம்ஸ் பார்க்கின்சன் இந்த நோயைக் கண்டுபிடித்த காரணத்தால் இந்தப் பெயர் வந்தது.

சிகிச்சை என்ன?

இந்த நோய்க்கு நரம்புநலச் சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். இந்த நோயைக் கண்டறிய குறிப்பிட்ட சோதனை முறைகள் எவையும் இதுவரை உருவாக்கப்படவில்லை. என்றாலும், மருத்துவர்கள் இந்த நோயாளிகளுக்கு மூளையை சி.டி. ஸ்கேன் / எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்கிறார்கள். இவர்களுக்கு ஏற்படும் உடல் நடுக்கத்துக்கு மூளையில் வேறு காரணங்கள் உள்ளனவா எனத் தெரிந்துகொள்வதற்கே இந்தப் பரிசோதனை.

ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோயை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், நோய் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தலாம். இதற்குப் பலவிதமான மருந்துகள் உள்ளன. ஆனால், சமயங்களில் இந்த மருந்துகளின் பக்கவிளைவுகள் நோயைவிட அதிகப் பாதிப்பைத் தரக்கூடும்.

எனவே, மருத்துவரின் சரியான வழிகாட்டுதலுடன், முறையான அளவில் இவற்றைத் தொடர்ந்து எடுத்துவர வேண்டும். நோயோடு இணைந்த மனச்சோர்வு, மலச்சிக்கல், உறக்கமின்மை போன்றவற்றுக்கும் சிகிச்சை தேவை. ஆரம்பத்திலேயே நடைப்பயிற்சி, இயன்முறை சிகிச்சை மூலம் உடல் தசைகளின் இறுக்கத்தைக் குறைக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஒருவருக்குக் குறைந்தது 5 வருடங்களுக்கு மருந்துகள் பலன் தருகின்றனவா என்று கண்காணிக்க வேண்டும். மருந்துகளால் குணமடையாதவர்களுக்கும் மருந்துகளை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கும் ‘பேலிடோட்டமி’ (Pallidotomy) எனும் மூளை அறுவை சிகிச்சை உள்ளது.

ஆனால், அறுவை சிகிச்சை எல்லோருக்கும் பலன் தரும் என்று உறுதி கூற முடியாது. இப்போது புதிதாக இந்த நோய்க்கு ‘ஆழ் மூளைத் தூண்டல் சிகிச்சை’ (Deep brain stimulation - DBS) மேற்கொள்ளப்படுகிறது. இதயத்துக்கு எப்படி பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படுகிறதோ, அதேபோல், மூளைக்குள் பொருத்தப்படும் ஒரு நவீன சிகிச்சை இது. இப்போது இது சென்னையிலும் மேற்கொள்ளப்படுகிறது.

என்றாலும், இது ஒரு முதுமை நோய் என்பதால், சலிக்காமல் செய்யும் சிகிச்சை களோடு, நல்ல உணவு, குடும்பத்தாரின் சகிப்புத் தன்மை, பொறுமையான தொடர் கவனிப்பு, அன்பான அரவணைப்பு ஆகியவையும் இணைய வேண்டியது முக்கியம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x