Published : 22 Jun 2019 12:16 PM
Last Updated : 22 Jun 2019 12:16 PM

சிகிச்சை டைரி 10: மகிழ்ச்சியா, மிரட்சியா….

‘பேக்கேஜ் ‘ இந்த வார்த்தையை எங்கே கேட்டிருப்போம்? ஒரு இன்பச் சுற்றுலா செல்லும்போது ‘பேக்கேஜ் டூர்’ என்பார்கள், இதற்கு அர்த்தம் சாப்பாடு, தங்கும் வசதி, எத்தனை நாள் உலா மற்றும் பிற சேவைகள் என்பதே. இதைப் போலவே மருத்துவமனைகளும் 3,5,7,10 என நாட்களுக்கு ஏற்ப பேக்கேஜ் போடுகிறார்கள்.

இதில் மகப்பேறு மருத்துவமனைகள் காட்டில் மழை. சாதாரண சுகப்பிரசவங்கள்கூட அறுவை சிகிச்சையாக இன்று  மாற்றப்படுகின்றன. குழந்தை பிறந்து தாயும் சேயும் நலம் என்று மகிழ்ச்சியடைவதா அல்லது வரவிருக்கும் கட்டணத் தொகையை நினைத்துப் புலம்புவதா என்ற கேள்வியே இன்று தொக்கி நிற்கிறது…

என் பிறப்பு என் அனுபவம்

என் அம்மாவின் வயிற்றில் நான்காவதாகக் கருவுற்று ஏழு மாத சிசுவாக இருக்கும்போது, அம்மாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவரை அணுகியுள்ளார். “அப்பெண்டிசைட்டிஸ் உள்ளது. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்” என்று அவர்கள் சொன்னார்களாம். வயிற்றில் சிசுவும் கட்டியும்.

மருத்துவர்கள் கேட்டது பெரிய உயிர் வேண்டுமா அல்லது சிறிய உயிர் வேண்டுமா? குழம்பிய பெற்றோர் எடுத்த முடிவு பெரிய உயிர்(அம்மா). பல மணி நேரப் போராட்டம், பரபரப்புக்குப் பின் மருத்துவமனையில் சொன்ன செய்தி ‘இருவரும் நலமாக இருக்கின்றனர்”. சில நாட்களில் நானும் நலமாகப் பிறந்தேனாம்.

இப்படியும் சில வ(லி)ழிகள்

சுமார் 23 ஆண்டுகளுக்கு முன் என் அண்ணிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. பிறந்து 18 நாள் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை, அந்தி சாயும் நேரம், அண்ணனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ‘குழந்தைக்கு வயிறு உப்புசமாகி அழுதுகொண்டே இருக்கிறது’ என்று.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்கத்தில் மருத்துவர் எவரும் இல்லை. ஆகவே, ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். பணம் செலுத்தினோம் உடன் ‘ஐசியு’ கொண்டு சென்றனர். பாலூட்ட மட்டுமே தாய்க்கு அனுமதி தந்தனர்.

தினம் மருந்து, படுக்கைச் செலவு, மினரல் வாட்டர் எனப் பணம் தண்ணீராகக் கரைந்தது. வேதனையின் உச்சம் அது. ஒரு வழியாகக் கிட்டத்தட்ட 20,000  ரூபாய் செலவு செய்து ஒரு வாரத்துக்குப் பிறகு வீடு திரும்பினார்கள்.

வந்த மறுநாள் அதே பிரச்சினையுடன் அருகிலிருந்த சாதாரண மருத்துவரிடம் சென்றனர், குழந்தையின் வயிற்றைத் தடவிவிட்டு சிறிது எலெக்ட்ரால் கலந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்கச் செய்தார். வயிறு இளகியது குழந்தை சிரித்தது. ஆனால் மருத்துவமனையில் விரயமான பணம், நேரம், பிஞ்சின் வலி, தாயின் வேதனை அனைத்தையும் நினைக்கையில் ஏற்படுத்திய மிரட்சி சொல்லி மாளாது.

மகனின் பரிதவிப்பு

ஒடி ஆடி விளையாடக்கூடியவன், எப்போதும் துறு துறுவென்றிருப்பான். திடீரென்று லேசான காய்ச்சல் வந்ததும் சோர்ந்து துவண்டுவிட்டான்.  உணவும் உட்கொள்ள மறுத்தான். அருகிலிருந்த மருத்துவமனையில் காட்டினோம், அவர்கள் கொடுத்த மருந்துகளுக்குக் காய்ச்சல் கட்டுப்படவில்லை.

உடனே பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். ஒன்றும் புரியவில்லை பலரும் பல மருத்துவமனைகளைக் கூற, நான் ஏற்கெனவே வசித்த இடத்திலிருந்த பிரபலமான மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். உள்ளே சென்றவுடன் பணியிலிருந்த மருத்துவர்கள் பார்த்தனர், காய்ச்சல் அப்போது 105 டிகிரியைத் தொட்டிருந்தது.

எங்களிடத்தில் முதலில் கேட்ட கேள்வியே மருத்துவக்காப்பீடு உள்ளதா? இல்லை என்றேன், எங்கு வேலை பார்க்கிறீர்கள் என்றார்கள், கூறினேன், அடுத்ததாக நீங்கள் இங்கே தங்கி குழந்தைக்கு வைத்தியம் செய்துகொள்ள வேண்டும், மொத்தமாக ரூ.35,000 முதல் ரூ.40,000வரை செலவாகும், 6 முதல் 7 நாட்கள்வரை தங்க வேண்டும் எனவும் அதற்கு, எப்படிப்பட்ட படுக்கையைத் தேர்வு செய்யப்போகிறீர்கள் என்று யோசிக்க நேரம் கொடுக்காமல் கேள்விகளை அடுக்கினார்கள். நிலைகுலைந்து நின்றேன்.

மகனுக்கு வந்திருக்கும் நோய் பற்றி மட்டுமே நான் அவர்களிடம் கேட்டேன். அதற்குப் பெரிய மருத்துவர்கள் வந்துதான் கூறுவார்கள், வேண்டும் என்றால் இருக்கலாம், இல்லையெனில் நாளை வந்து பாருங்கள் என்றனர்.

வாடிக் கிடந்த என் செல்ல மகனைப் பார்த்தேன் வேறு எதுவும் கூறவோ கேட்கவோ மனமில்லை, அனைத்துக்கும் சம்மதித்தேன். அடுத்த நாள் பெரிய மருத்துவர்கள் வந்தனர், பார்த்துவிட்டு தொண்டைப் பகுதியில் புண் வந்திருக்கிறது இது ‘டாண்சிலிடீஸ்' எனவும் அதனால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்கள்.

மருந்து என்றாலே சிதறியோடும் மகனுக்குப் பாதி உணவே மருந்து என மாறியது. ஒரு இட்லி சாப்பிடவே மிகவும் சிரமப்பட்டான், காய்ச்சல் விடவில்லை, மருந்துக்குக் கட்டுப்படவில்லை. ஊசி போட வேண்டும். ஒரு ஊசி 1300/- ரூபாயாகும், ஒரு நாளைக்கு நான்கு ஊசிகள் போட வேண்டும் என்றார்கள், அதற்கும் சம்மதித்தேன்.

கையில் மருந்தேற்ற நரம்பைத் தேடி ஐவி செட் போடுவதற்குள் என் மகன் திமிறி இரண்டு செவிலியர்களுக்கு உதைவிட்டான். ஆனால், அதைப் பொருட்படுத்தாது அவர்கள் கடமையைச் செய்துமுடித்தார்கள். மருந்து ஏற்றப்பட்டும் காய்ச்சல் குறையவில்லை, மருத்துவர்களோ இதற்கும் கட்டுப்படவில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்வதுதான் ஒரே வழி என்றனர்.

அவர்கள் சொன்னதைவிட அதிகமாகச் செலவானது, ஆனாலும் பலனில்லை. என்னவானாலும் சரி அங்கிருந்து கிளம்பிவிடலாம் என்று முடிவு செய்தோம். அதற்குள் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது, உணவு உட்கொள்ள ஆரம்பித்தான். ஒரு நாள் பொறுத்தோம் பரிசோதனையில் சற்று முன்னேற்றம், பட்டதுக்கெல்லாம் பலன் கிடைத்தது, கிளம்பலாம் என்றனர்.

அவனைவிட நாங்கள் இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தோம். பணத்தைக் கட்டினோம், பில்லை பார்க்க மனமில்லை, ரசீது பெற்றோம் நான்கு மணிநேரத்தில். விட்டால் போதும் என்று குடும்பத்துடன் ஓலாவில் ஓட்டம் பிடித்தோம்.

- ராமசாமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x