லிச்சிப் பழத்தால் மூளைக்காய்ச்சலா?

லிச்சிப் பழத்தால் மூளைக்காய்ச்சலா?
Updated on
1 min read

பிஹாரின் முஸாபர்பூரிலும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் கடுமையான மூளையழற்சி நோய் அல்லது மூளைக் காய்ச்சல் நோய் அறிகுறிகளால் (Acute Encephalitis Syndrome) நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றனர்.

400-க்கும் மேற்பேட்டோர் அந்நோயின் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது மூளைக்காய்ச்சல் அல்ல, மூளைவீக்கம் (Encephalopathy) என்று முஸாபர்பூரில் ஆராய்ச்சி மேற்கொண்ட டி.ஜேக்கப் ஜான், முகுல் தாஸ் ஆகியோரும் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நோய் பெரும்பாலும் 2-10 வயதிலுள்ள ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளையே பாதித்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் பெரும்பாலும் லிச்சி அறுவடைப் பணிகளில் ஈடுபட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்தக் குடும்பங்களில், இரவில் எதுவும் சாப்பிடாமல் உறங்கிப்போகும் குழந்தைகள், காலையில், பெற்றோருடன் அறுவடைக்குச் செல்லும்போது கீழே விழுந்திருக்கும் லிச்சிப் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுகின்றனர். அப்போது, லிச்சிப் பழங்களில் இருக்கும் இரண்டு நச்சுகள் (MCPA & MCPG), ரத்தச் சர்க்கரையைக் குறைத்து மூளை வீக்கத்தை (hypoglycaemic encephalopathy) உருவாக்குகின்றன.

சர்க்கரைக் குறைவால் ஏற்படும் மூளைவீக்கம் மூளை, செயல்படுவதற்கான ஆற்றலை அளிக்க குளுகோஸ் தேவைப்படுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் கல்லீரலில் கிளைகோஜன் குறைவாக இருக்கும். அதனால், அவர்களின் கல்லீரலால் குளுகோஸைத் திரட்ட முடியாமல் போய்விடுகிறது. 

மேலும், லிச்சிப் பழத்தில் இருக்கும் நச்சுப்பொருளான மெத்திலின் சைக்ளோபுரோபைல் கிளைஸின், குளுகோஸ் அளவை உடலில் பராமரிக்க முடியாமல் தடுக்கிறது. இது குளுகோனியோஜெனிஸிஸைத் தடுத்து அமினோஅசிடிமியாவை உருவாக்கி, மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது.

இறுதியில், குறைந்துபோகும் ரத்தச் சர்க்கரை நிலை, மூளை வீக்கத்தை உருவாக்குகிறது. இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 10% குளுகோஸை நான்கு மணி நேரத்துக்குள் கொடுத்தால், விரைவில் குணமாவதற்கு வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கூடுதல் ஆய்வு தேவை

பிரபல மருத்துவ இதழான லான்செட், 2017-ல் வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘வெறும் வயிற்றில் லிச்சிப் பழங்களைச் சாப்பிடுவதற்கும் இந்த மூளை வீக்கத்துக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிந்தாலும் அதுவே ஆதாரமான காரணம் என்ற தீர்மானத்துக்கு வர முடியவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வறிக்கையை முஸாபர்பூர் தேசிய லிச்சி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நிராகரித்திருக்கின்றனர். இது தொடர்பாக, மேலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய தேவையை முஸாபர்பூர் நிகழ்வு உருவாக்கியிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in