Last Updated : 15 Jun, 2019 11:23 AM

 

Published : 15 Jun 2019 11:23 AM
Last Updated : 15 Jun 2019 11:23 AM

காயமே இது மெய்யடா 37: ஓடி விளையாடு பெண்ணே

பெண்களைப் பொறுத்தவரையில் பதின்ம காலத்தில் உதிரப்போக்கு சீராக இருப்பதைப் பொறுத்தே பிள்ளைப் பேறும் குழந்தைக்கான பால் சுரப்பும் பிள்ளை பெற்றதற்குப் பின்பான உடல்நலமும் அமையும்.

வளரும் பெண்கள், மேலோட்ட மான பொது விஷயங்களைக் காட்டிலும் தங்களுக்கே உரிய தனித்துவமான, புதிரான உடலியல் சார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பூப்படைந்ததற்குப் பின்னர் உடலுக்குள் நிகழும் இனம்புரியாத மாற்றங்களைத் தன் பாலினமான தாயிடமிருந்தே பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், இன்றைய  நவீன வாழ்க்கை முறையில், நாகரிகம், பிரைவசி என்ற பெயரில் மகளின் உடல் சார்ந்த கேள்விகள் தாயிடம் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை.

தாய் எனும் தோழி

தாய்மையை ஒரு கருவாக்க மையத்தின் மூலம் மட்டுமே அடைந்துவிட முடியாது. ஒவ்வொரு மாத உதிரப் போக்கும் தன்னியல்பாக நடந்தால்தான் கருக்கொள்வதும் இயல்பாக இருக்கும்.

அதில் இயல்புக்கு மாறான போக்கு நிலவுமானால் அதைக் கவனித்து இயல்புக்குக் கொண்டுவர வேண்டும். ஆரம்ப நிலையில் போக்கு உதிரத்தின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்திராத பெண்கள் அதில் ஏற்படும் மாற்றங்களையும், அது சார்ந்த உடல் வலியையும் இயல்பானதென்றே கருதக்கூடும். அவற்றின் நுட்பமான வேறுபாடுகளைக் கற்றுத்தர வேண்டியது தாயின் கடமை.

முக்கிய சுரப்புகள்

பூப்பெய்தியது தொடங்கிக் கொழுப்புத் தன்மை மிகுந்த அதே நேரத்தில் எளிதில் செரிமானமாகும் பண்டங்கள் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கொழுப்புச் சத்தைத் தனது ஆதார ஆற்றலாகக் கொண்டு இயங்கும் கல்லீரல்தான் சினை முட்டை உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் முதன்மைப் பங்காற்றுகிறது.

கல்லீரல் சுரந்தளிக்கும் progesterone சீரான அளவிலிருந்தால் மட்டுமே மாதாந்திரமாக உதிரப்போக்கு  நின்ற நாள் தொடங்கி ஒரு வாரத்தில் சினை முட்டை உற்பத்தி இயல்பாகத் தொடங்கும்.

சினை முட்டை உற்பத்தியாகி முடிந்த ஒரு வாரத்துக்குப் பிறகு அடுத்த ஒரு வாரத்தில் அதாவது 14-ம் நாள்வரை முழு வளர்ச்சியை அதாவது விந்தணுவை ஏற்கும் பக்குவத்தை அடைகிறது. 

இந்தச் சினை முட்டை வளர்ச்சியையும் கருவாவதற்கான தகுதியையும் தீர்மானிப்பது estrogen சுரப்பு. இந்த இரண்டு சுரப்புகளும் உயிர்த்தன்மை மிக்கதாக இருந்தால் மட்டுமே மாதாந்திர உதிரப் போக்கு சீராக இருக்கும்.

இன்றைய வாழ்க்கை முறையும் உண்ணும் உணவும் உயிர்ப்பண்பைச் சிதைக்கக்கூடியதாகவே இருக்கின்றன. மேலும், உணவு உயிர்ப் பண்பு மிக்கதாக இருந்தால் மட்டும் போதாது. மன உணர்வும் சமநிலையில் இருக்க வேண்டும்.

பெண் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே சினை முட்டை உருவாவதற்குரிய progesterone சுரப்பு சரியாகச் சுரக்கும். மன அழுத்தத்துடன் இருந்தால் சினை முட்டை குறைவான எண்ணிக்கையில் உற்பத்தியாகும்.

அல்லது  சினை முட்டை உருவாகாமலும் போகக்கூடும். அதேபோல உடலில் கொழுப்புச் சத்து சரியான அளவிலிருந்தால் மட்டுமே  estrogene போதுமான அளவு சுரந்து சினை முட்டையைச் சரியாக வளர்த்தெடுக்கும். அல்லது விந்தணுவை ஈர்க்கத் தகுதி பெறாததாக வளர்த்தெடுத்துவிடும். இந்த இரண்டு சுரப்புகளின் ஏற்ற இறக்கங்கள் மாதாந்திர உதிரப் போக்கில் பெரும் குளறுபடிகளை ஏற்படுத்துகின்றன.

பேய் பிடித்தல்?

இந்த இரண்டு முக்கிய சுரப்பு களும் சுரப்பதற்கு வாய்ப்பில்லாத சூழலிலும்,  அதாவது பெண் மகிழ்ச்சியோடு இருப்பதற்கும் சத்தான உணவு கிடைக்காத சூழலிலும்தான் நாட்டுப்புறப் பெண்களுக்கு கிராமப் பேய் பிடிக்கிறது. பேய் பிடித்த பெண்ணை, பேயோட்டுகிறேன் என்று உடலை முறுக்கிச் சுற்றித் தளர்ச்சியடையச் செய்வார்கள்.

இந்த வேகமான உடலியக்கத்தின் மூலம் சுரப்புகள் இயல்பு நிலைக்குத் திரும்பலாம். போதிய அளவு மகிழ்வும் உணவும் கிடைக்கப்பெற்ற ஓரளவு வசதியான வீட்டுக் கன்னிப் பெண்களைப் பேய் பிடித்ததில்லை. ஓரளவு வாழ்க்கைப் பாதுகாப்பு கிடைத்துள்ள தற்காலச் சூழலில் கன்னிப் பெண்களுக்குப் பேய் பிடிப்பது வெகுவாகக் குறைந்துள்ளது.

ஆனால், விரைவான வளர்ச்சிக்காகவும் அதிக விளைச்சலுக்காகவும் நமது உணவுப் பயிர்களில் கொட்டப்படும் வீரிய உரங்களும் ஊட்ட உணவுண்ணும் இறைச்சிக் கோழிகளும் பெண்ணுடலில் ஈஸ்ட்ரோஜென்னை அதீதமாகச் சுரக்கச் செய்கின்றன. அதிக ஈஸ்ட்ரோஜென் சுரப்பு, குறிப்பிட்ட வயதுவரை பாலுணர்வுத் தூண்டலுக்குக் காரணமாக இருக்கிறது.

உடல்நலத்தைப் பாதிக்கும் கொழுப்பு

ஆனால், வாழ்க்கைத் தேவைகள் கருவுறுவதற்கான பக்குவத்தை எட்டிய வயதுக்குப் பின்னும் பாலுறவைத் தள்ளிப் போடவே நிர்ப்பந்திக்கின்றன. மறுபுறம் அதீத எச்சரிக்கை உணர்வும் கட்டுப்பாடுகளும் பூப்பெய்தியும் போதிய மனவளர்ச்சியை எட்டாத நிலையில் பெண்ணை உடல் மலர்ச்சிக்கு உரிய  விளையாட்டிலிருந்து ஒதுக்கிவைக்கச்செய்கின்றன.

 அதுபோக நமது கல்வி முறையும் பாடச் சுமையும் உடலை எளிதான அசைவுக்குள்ளாகும் விளையாட்டுக்கு அனுமதிப்பதில்லை. இயல்பான வளைவு நெளிவுக்குச் சாத்தியங்கள் மறுக்கப்படுகிற அதே நேரத்தில் சத்தற்ற உணவுத் திணிப்பு பெண்ணுடலைத் தூல வடிவத்துக்கு மாற்றிக் கொண்டுள்ளது.

இடுப்பு, பின் பகுதிகளில் சேரும் அளவுக்கு மீறிய கொழுப்பு, உடலின் வடிவழகைக் கெடுப்பதோடு அந்த வயதிற்குரிய உதிரப்போக்கிலும்  சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. பூப்பெய்தல் தொடங்கி 21 வயது வரை ஏற்படும் உதிரப் போக்கு சீரின்மை, குழந்தையைக் கருக்கொள்வது தொடங்கி மார்புக் கட்டி, கருப்பைக் கட்டி, பால் சுரப்பு எனப் பல்வேறு தொடர் பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது.

பதின்ம வயதில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை குறித்துப் பார்ப்பதோடு செய்யத் தகுந்தவை குறித்தும் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்...)

கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்

தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x