

2004 டிசம்பர் என்றுதான் நினைவு. திருச்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். இடதுசாரி கலை-இலக்கிய அமைப்பு ஒன்றின் மாவட்ட மாநாடு ஒன்றைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருந்தேன்.
கூட்டத்தில் பேச இருந்தவர்களை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே தனியாகச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நான் சென்றிருந்த நாளில் எனக்கு நன்கு சளிப் பிடித்து. மூக்கிலிருந்து தண்ணீராக வடிந்துகொண்டிருந்தது.
அந்தக் கூட்டத்தில் பேசுவதற்காக தூத்துக்குடியில் இருந்து சமூகவியல் அறிஞரான பேராசிரியர் ஆ. சிவசுப்ரமணியன் வந்திருந்தார். எந்த ஒரு விஷயத்தை விளக்கவும் பொருத்தமாகவும் கச்சிதமாகவம் குறுங்கதைகள், நாட்டார் பாடல் வரிகளை அவர் மேற்கோள் காட்டிப் பேசும்போது, அவர் விளக்க வரும் விஷயம் சட்டென்று புரிந்துவிடும். எழுத்தாளர்கள் ச. தமிழ்ச்செல்வன், சு. வெங்கடேசன் போன்றோரும் வந்திருந்தார்கள்.
பேராசிரியர் சிவசுவை அதற்கு முன்னதாக வேலூரில் ஒரு கூட்டத்தில் பார்த்திருந்தேன். பெரிய பழக்கமெல்லாம் இல்லை. இந்துத்துவ சக்திகள் எப்படித் தங்களுக்கான அரசியலையும் அதற்குரிய பின்னணியையும் புராணங்களை லாகவமாகத் திரித்துக் கட்டமைக்கிறார்கள் என்பது குறித்து விளக்கும் ‘பிள்ளையார் அரசியல்', தமிழகத்தின் பிரபலமாக இருந்த ‘சமபந்தி அரசியல்' பற்றிய அவருடைய குறுநூல்களை முன்பே வாசித்திருந்தேன்.
விளம்பரத் தூதர்
எனக்குச் சளிப் பிடித்திருந்ததைப் பார்த்த பேராசிரியர், "எதுவும் மாத்திரை சாப்பிட்டீர்களா?" என்று கேட்டார். "இல்லை சார்" என்றேன். பிறகு தன் பையில் மாத்திரை இருக்கிறதா என்று தேடி எடுத்து, இரண்டு மாத்திரைகளைக் கொடுத்தார். பிறகு "அது ஓர் எளிய மாத்திரை. சித்த-ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும்" என்றார். அந்த மாத்திரையின் பெயர் தாளிசாதி சூரண மாத்திரை.
நினைவு தெரிந்து நான் உட்கொண்ட முதல் சித்த மருந்து அது. 'இம்காப்ஸ்' நிறுவனத் தயாரிப்பு. உடனடிப் பலன் தெரிந்தது. அன்றிலிருந்து தாளிசாதி சூரணத்தின் மீது மட்டுமில்லாமல் சித்த மருத்துவத் துறை மீதும் நம்பிக்கையும் ஆர்வமும் பிறந்தது.
பின்னால் சித்த மருந்துகளை என் வாழ்க்கையில் பின்பற்றத் தொடங்கினேன் என்றாலும், அந்த முதல் மாத்திரை அளித்த நிவாரணமும் நம்பிக்கையுமே, அந்த முறையைப் பின்பற்ற முக்கியக் காரணமாக அமைந்தன.
பிற்காலத்தில் தாளிசாதி சூரணம் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிப் போனது. என் உறவினர்கள், அலுவலக நண்பர்கள் என யாருக்குச் சளிப் பிடித்தாலும் இருமினாலும், உடனே "தாளிசாதி சூரணம் சாப்பிடலையா, உடனடி நிவாரணம் உத்தரவாதம்" என்று தாளிசாதி சூரணத்துக்குச் சம்பளம் வாங்காத விளம்பரத் தூதராகவே மாறிப் போனேன். அதேநேரம் என் விளம்பரப்படுத்தும் திறனைவிட, அந்த மருந்து தந்த நிவாரணத்தால் சங்கிலித்தொடர்போல, அதுவே தனக்கான அடையாளத்தை அடுத்தடுத்து தேடிக்கொண்டே போனது.
பெயர்க் காரணம்?
'தாளிசாதி' என்றால் ஏதோ விநோதமான பெயராக இருக்கிறதே என்று அஞ்ச வேண்டாம். சித்த மருந்துகள், ஏற்கெனவே எழுதப்பட்ட குறிப்புகள் - சூத்திரங்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுகின்றன. தாளிசபத்திரி (Taxus baccata) என்பது இந்த மருந்தின் முக்கிய உட்பொருள்.
அது காட்டு லவங்க மரம். தாளிசபத்திரி அதிகம் இருப்பதால் இந்த மாத்திரைக்கு தாளிசாதி சூரணம் என்று பெயர். இந்த மாத்திரையில் இருக்கும் முக்கிய உட்பொருள்கள்: சுக்கு, மிளகு, அரிசித் திப்பிலி, லவங்கப்பட்டை, ஏலரிசி, மூங்கில் உப்பு, இன்னும் பல.
அளவோடு உட்கொள்ளலாம்
இந்தச் சித்த மருந்து பொடியாகவும் மாத்திரையாகவும் கிடைக்கிறது. சாதாரணச் சளியாக இருந்தால் ஒன்று, தொண்டையில் சளி கட்டியிருந்தால் சப்பிச் சாப்பிடுவதற்கு வடகம் என மாறுபட்ட வகைகள் உண்டு. இந்த மருந்து செரிமானத்துக்கும் துணைபுரியும். எதிர்க்களித்தல், வாயுப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் இந்த மருந்து நிவாரணமளிக்கும்.
தலைவலிக்கு அடுத்தபடியாகப் பலரையும் அடிக்கடிப் பிடித்தாட்டும் பிரச்சினையாக சளி, இருமலே இருக்கிறது. இந்தச் சளிக்கு தாளிசாதி சூரணம் சிறந்த நிவாரணம் தரும். வேளைக்கு இரண்டு மாத்திரைகள் என்ற வீதத்தில் மூன்று நாட்கள்வரை உட்கொள்ளலாம். 'இம்காப்ஸ்' எனப்படும் இந்திய மருந்து உற்பத்திக் கூட்டமைப்பின் தயாரிப்பு இந்த மருந்து. சித்த-ஆயுர்வேத மருந்தகங்கள், 'இம்காப்ஸ்' கடைகளில் கிடைக்கும்.
எந்த மருந்தையும் நாமே இஷ்டத்துக்கு உட்கொள்வது தவறு. சித்த மருந்துகளும் அப்படியே. அதனால் அளவோடு தாளிசாதி சூரணத்தை உட்கொண்டு, வளமோடு சளியை விரட்டலாம்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in