Last Updated : 01 Jun, 2019 12:22 PM

 

Published : 01 Jun 2019 12:22 PM
Last Updated : 01 Jun 2019 12:22 PM

கண்களைக் காக்கும் google

பொதுவாகச் சர்க்கரை நோயாளிகள் என்ன நினைக்கிறார்கள்? சர்க்கரை நோயால் ஏற்படுகிற பார்வைப் பிரச்சினையைச் சாதாரணக் கண்ணாடி போட்டுச் சரிசெய்துவிடலாம் அல்லது கண்ணில் சொட்டு மருந்து போடுவதன் மூலம் சரி செய்துவிடலாம் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்.

இந்த எண்ணம், பார்வை பாதிப்பு போன்ற சிக்கலான நிலைக்கு அவர்களைத் தள்ளுகிறது. அதைவிடக் கொடுமை தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பார்வையிழப்புக்குச் சர்க்கரை நோய்தான் காரணம் என்பதைச் சிலர் அறியாமல் இருப்பதுதான்.

பிற நோய்களுக்கு சிகிச்சை செய்வதைப் போல் சர்க்கரை நோயால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பது ஒன்றும் எளிமையானதல்ல. ஒரே நாளில் முடிந்துவிடக் கூடியதுமல்ல.

மேலும், சர்க்கரை நோயால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிவதற்கும் அதற்குரிய சிகிச்சையைச் செய்வதற்கும் விழித்திரை சிறப்பு மருத்துவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை.

இருக்கிற கண்மருத்துவர்களும் நாளொன்றுக்குக் குறைந்தது 500 முதல் 1,000 நோயாளிகளைப் பார்க்க வேண்டி இருக்கிறது. இதற்குத் தான் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தீர்வு காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் கூகுள், புதிய முயற்சியாகக் கண் மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி  ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 

கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த ஆய்வு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகளாவிய இந்த ஆய்வில் தமிழகத்தின் மதுரை அரவிந்த் கண்மருத்துவமனையும் சென்னை சங்கர நேத்ராலயாவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பாதிப்பைத் தடுக்கலாம்

கண்புரையால் ஏற்படும் பார்வைக் குறைவுக்குச் சாதாரண லென்சைக் கண்ணுக்குள் பொருத்தினால் போதும்.  நன்றாகப் பார்க்கலாம்.  இது ஒரு எளிமையான அறுவை சிகிச்சை. ஆனால், அதைப் போலச் சர்க்கரை நோயால் கண்ணில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை உடனே சரி செய்துவிட  முடியாது.

சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை செய்துகொள்வதைக் கஷ்டமாக நினைத்து அலட்சியம் செய்பவர்கள், பின்னாளில்  பார்வை பாதிக்கப்பட்டு அதிகத் துன்பத்துக்கு உள்ளாவது தொடர்கதையாகிறது. இதைக் காலங்கடந்துதான் பலரும் உணருகிறார்கள்; வருந்தவும் செய்கிறார்கள்.

இந்திய மக்கள் தொகையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 கோடிப் பேருக்குமே கண்ணில் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. பாதிப்பு ஏற்பட்ட பிறகு மீண்டும் சரி செய்ய முடியாது.

அதேநேரம்  சர்க்கரை நோய்க்கு முறையாக மருத்துவம் செய்து ஆறு மாத இடைவெளியில் தொடர்ச்சியாகக் கண்களைச் சோதித்துக்கொள்வதன் மூலம் பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

சர்க்கரை நோய் வருவதை நம்மால் தற்போதைக்குத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், சர்க்கரை நோயால் கண்ணில் ஏற்படும் பார்வைப் பாதிப்பை உறுதியாகத் தடுத்துவிட முடியும்.

கூகுளின் ஆய்வு

பாதிப்பில்லாத இயல்பான கண்ணின் விழித்திரையுடன் சர்க்கரை நோய் விழித்திரைப் பாதிப்பின் பல்வேறு நிலை கொண்ட விழித்திரைகளும் பல்வேறு மருத்துவமனைகளில், பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இருந்து படமாக எடுக்கப்பட்டு கூகுளுக்கு அனுப்பப்படுகின்றன.

அவ்வாறு சர்க்கரை நோய் விழித்திரைப் பாதிப்பு உள்ளவர்களிடமிருந்து  இதுவரையிலும் எடுக்கப்பட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள் கூகுள் வசம் உள்ளன.

இவை விழித்திரைப் பாதிப்பின் முக்கியக்கூறுகளான விழித்திரை நரம்பு திசுப் பாதிப்பு, வீக்கம், ரத்தக் கசிவு எனப் படிப்படியாக நிலைகள் குறிக்கப்பட்டுப்  பல்வேறு கண்மருத்துவர்களால் பலமுறை சரிபார்க்கப்பட்டு அவை தரவுகளாக கூகுளின் செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தின் நினைவகத்தில் சேமிக்கப்பட்டு, அவற்றைச் செயற்கை நுண்ணறிவு இயந்திரம்  இனங்காண வழிவகை செய்யப்படுகிறது.

இதன் மூலம் சர்க்கரை நோயால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளின் பல்வேறு நிலைகளைத் தற்போது செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தால்  மிகத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். சர்க்கரை நோயால் பாதிப்புக்குள்ளான 7 கோடிப் பேரின் கண்களையும் இருக்கிற மருத்துவர்களைக் கொண்டு சோதிப்பது என்பது இயலாத செயல். எனவேதான் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தின் ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு செல்பி போதும்

கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தவுடன், மருத்துவர்களின் வேலை மிகவும் எளிமையாகிவிடும். பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக மருத்துவர்கள் இனி அதிக நேரம் செலவழிக்க வேண்டியதில்லை.

பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை செய்வதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். பொது இடங்களில் இருக்கும் எடை பார்க்கும் இயந்திரத்தில் எடையைப் பார்க்கிறோம் அல்லவா? அதைப் போலக் கண்களைப் படம் எடுத்துப் பாதிப்பு இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை கூகுளின் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் சொல்லப்போகும் நாள் வெகு அண்மையில் இருக்கிறது. நாளடைவில்  நீங்களே ஒரு செல்பி எடுத்து அனுப்பியும் உங்கள் கண்ணில் பாதிப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளும் நாளும் வரத்தான் போகிறது.

 

நினைவிருக்கட்டும்கண்களைக்-காக்கும்-google

# சர்க்கரை நோய் விழித்திரைப் பாதிப்பு ஏற்பட்ட பிறகு பார்வை இழப்பை மீண்டும் சரிசெய்ய முடியாது. ஏற்பட்ட பாதிப்பு - பாதிப்புதான்.

# சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருப்ப துடன் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கண்களைச் சோதித்துக் கொள்வதன் மூலம் பார்வையைப் பாது காத்துக்கொள்ள முடியும்.

# சர்க்கரைக் கட்டுப்பாடு மிக மிக முக்கியம்.

# வாழ்நாள் முழுவதற்கும் பார்வையும் அவசியம்.

 

கட்டுரையாளர்,

மதுரை அரசு

கண் மருத்துவ உதவியாளர்

தொடர்புக்கு: veera.opt@gmail.com  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x