

இ
ந்த உலகம் முன்னோக்கித்தான் செல்லும், பின்னோக்கிச் செல்லாது. நாம் எவ்வளவுதான் ஒதுங்கிப் போனாலும், டிஜிட்டல் தொழில்நுட்பமும் வீடியோ கேமும் நம் வாழ்க்கையில் நுழைந்தே தீரும். டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றி என்னவென்றே தெரியாத ‘டிஜிட்டல் சித்தார்த்தனாக’ நம் குழந்தைகளை வளர்க்க முடியும் என்று வீணாகக் கற்பனை செய்ய வேண்டாம்.
சித்தார்த்தன் தனது அரண்மனையை விட்டு வெளியே வந்து புத்தன் ஆனதுபோல், உங்கள் குழந்தையும், சமூகம், நண்பர்கள் மூலம் வீடியோ கேம்களைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள். உண்மையில், வீடியோ கேம்களின் பலன்களை உங்கள் குழந்தைகள் இழக்க மாட்டார்கள். அளவாக வீடியோ கேம் விளையாடுவதால் நல்ல பலன்கள் இருப்பது பற்றியும் நாம் முன்பே விரிவாகப் பார்த்திருக்கிறோம்.
அதனால், நல்ல வீடியோ கேம்களை விளையாடுவதை ஊக்குவியுங்கள். அது குறித்துக் குழந்தைகளிடம் விரிவாகப் பேசுங்கள். மோசமான வீடியோ கேம்களுக்கு ‘தடா’ போடுவது பெரிய விஷயமல்ல. ஆனால், அதற்கு ‘ஏன் தடா?’ என்பதைப் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் விளக்குங்கள். அதுதான் அவர்களுக்கு நல்லதையும் கெட்டதையும் பிரித்துப் பார்க்க உதவும்.
எப்படி விளையாடும் நேரம், படிக்கும் நேரம் என அட்டவணை இடுகிறீர்களோ, அதேபோல் வீடியோ கேம்களுக்கான நேரத்தையும் அட்டவணை இடுங்கள்.
அமெரிக்கக் குழந்தைகள் நலக் கழகம் கூறுவதுபோல், ‘முதல் இரண்டு வயதுக்குள் எந்த விதமான டிஜிட்டல் ஸ்கிரீனும் குழந்தைக்கு வேண்டாம். ஸ்மார்ட்போன், வீடியோ கேம் அறவே வேண்டாம். பத்து வயதுவரை சுமார் இரண்டு மணி நேரம் வீடியோ கேமிலும், இணையத்திலும் செலவழித்தால் போதும். மேலும் ஒரு மணி நேரம் தொலைக்காட்சிக்குக் கொடுக்கலாம், அவ்வளவுதான். ஒரு வேளை பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பில் இரண்டு மணி நேரம் செலவழித்துவிட்டால், வீட்டில் இரண்டு மணி நேர ஒதுக்கீட்டுக்குத் தடாதான். 18 வயதுக்கு, டிஜிட்டல் நேரம் நான்கு மணி நேரமாக இருக்கலாம். அதைத் தாண்டினால் பிரச்சினைதான்’.
ஆனால், பதின் வயதுக் குழந்தைகளைப் பெற்றோர் கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவது கடினம். அதனால்தான் அவர்களுடன் நண்பர்கள் போன்ற ஒரு இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகிறது. தொழில்நுட்பம் தொடர்பாக உரையாடுவது, அதன் நன்மை-தீமைகளை விளக்குவது, அவர்களின் கருத்துகளைக் கேட்டு மதிப்பது போன்றவை உங்களுக்கு உதவியாக இருக்கும்.
உணவில் ஆரோக்கியமான உணவு, நொறுக்குத் தீனி என்று பிரிக்கப்பட்டுள்ளது. அதில், நம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவைத்தானே அதிகம் கொடுப்போம். நொறுக்குத் தீனிகளைக் குறைப்போம் இல்லையா.
அதேபோலத்தான் வீடியோ கேம்களும். ஸ்மார்ட் வகுப்பிலோ அல்லது வீட்டிலோ, கல்வி தொடர்பான வீடியோ கேம்களை அனுமதிக்கலாம். அதுவும் டிஜிட்டல் நேரத்துக்கு உட்பட்டுத்தான். பொழுதுபோக்குக்காக ஆடும் குப்பை வீடியோ கேம்களைக் குறைக்க வேண்டும். ஏனென்றால், அவற்றை ஜீரணிக்கும் திறன் குழந்தைகளுக்கு இருக்காது!
(அடுத்த வாரம்: டிஜிட்டல் விழிப்புணர்வு வகுப்புகள்)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: digitaldiet2017@gmail.com