

ச
மீபத்தில் என் நண்பர்களிடையே உடல் ஆரோக்கியம் சார்ந்து கலந்துரையாடல் நடந்துகொண்டிருந்தது. அப்போது பத்தியம் தொடர்பாகச் சிலர் பேசத் தொடங்கினர். அவர்களில் ஒருவர், சித்த மருத்துவம் குறித்து ‘ஆஹா ஓஹோ’ எனப் புகழ்ந்துவிட்டு, கடைசியில் ‘சித்த மருத்துவத்தில் உள்ள ஒரே பிரச்சினை பத்தியம் இருப்பதுதான்’ என்றார். அதனாலேயே மக்கள் அதை நாடிப் போகத் தயங்குகின்றனர் எனவும் கூறினார். அவர் கூறியது ஒரு விதத்தில் உண்மை என்றே தோன்றியது.
என்றாலும் நம்மிடையே உள்ள அறியாமையின் காரணத்தாலேயே பத்தியம் பற்றிய தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. பத்தியம் என்பது, உடல் ஆரோக்கியம் சார்ந்த எதிலும் அடங்கக்கூடிய ஒன்று. அது நம் நோய்க்கு ஏற்ற உணவைச் சொல்லும் முறை மட்டுமல்ல. அதை வாழ்க்கை முறை சார்ந்த விஷயங்களிலும் பின்பற்றலாம். மேலும், பத்தியம் என்பது ஒரு குறிப்பிட்ட மருத்துவத் துறை சார்ந்தது அல்ல. அது நோய் சார்ந்தது மட்டுமே.
இப்போதெல்லாம் நவீன முறை மருத்துவத்தில் ஒரு நோய்க்கு மருத்துவம் பார்க்கும்போது மருந்துகளைப் பரிந்துரைத்து அதனுடன், அந்த மருத்துவ மையத்திலேயே இருக்கும் ‘நியூட்ரிஷியனிஸ்ட்’ (ஊட்டச்சத்து மற்றும் உணவு நிபுணர்) ஒருவரைப் பார்க்கச் சொல்வார்கள். அவர், நமக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கு ஏற்றவாறு, எந்த உணவை எடுத்துக்கொள்ளலாம், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று உணவு சார்ந்த ‘டைம் டேபிள்’ ஒன்றைப் போட்டுக் கொடுப்பார். ஆங்கிலத்தில், இதை ‘டயட் ரெஜிமென்’ என அழைக்கும்போது, அது ஏதோ புதுவிஷயம்போலத் தோன்றலாம். அந்த ‘டயட் ரெஜிமென்’ வேறு ஒன்றுமல்ல… பத்தியம்தான்!
ஒருவருக்கு ஜூரம் வந்துள்ளது என வைத்துக்கொள்வோம். அவருக்கு, மருந்துகளை வழங்கி அதனுடன் அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு பற்றி மருத்துவர் அறிவுறுத்தும்போது, ‘சுலபமாகச் செரிக்கக்கூடிய ‘கஞ்சி’ போன்ற அல்லது வேக வைத்த உணவையே உட்கொள்ள வேண்டும்’ என்பார். ‘லங்கணம் பரம ஒளடதம்’ எனும் பழமொழியே நம்மிடம் உண்டு. ஜூரம் கண்ட ஒருவர் பட்டினி இருப்பதுவே சிறந்த மருந்து என்பது அதன் பொருள்.
அதேபோல நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், சித்த மருத்துவரையோ அலோபதி மருத்துவரையோ பார்க்கச் செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அங்கு மருந்து வழங்குவதுடன் உணவுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளாக இனிப்புப் பண்டங்களையும், ‘கார்போஹைட்ரேட்’ அதிகம் உள்ள உணவு வகைகளையும் மருத்துவர் குறைக்கச் சொல்வார். மேலும், அவரது வாழக்கை முறையிலும் சில மாற்றங்களைச் செய்யவும் மருத்துவர் அறிவுறுத்துவார்.
உதாரணத்துக்கு, அந்த நபரை நடைப்பயிற்சி மேற்கொள்ளச் சொல்வார். ஏனெனில் நடைப்பயிற்சியும் உடல் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கப் பெரிதும் துணை புரியும். இது எல்லோருக்கும் தெரிந்ததே. இல்லையெனில் நோயும் கட்டுப்படாது, மருந்தின் வீரியமும் செயல்படாமல் போய்விடும்.
இப்படி, ஒவ்வொரு நோய்க்கும் உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோல நோயின் தாக்கத்தைக் குறைக்கக்கூடியதும், உடலுக்கு நன்மை தரக்கூடிய உணவு மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த விஷயங்களும் பத்தியத்தில் அடங்கும்.
எனவே பத்தியம் என்பது ஒருவருக்கு ஏற்பட்டுள்ள நோயைக் குறைக்க வசதியான உணவு முறையையும் வாழ்க்கை முறையையும் பின்பற்றுவது மட்டுமல்ல. நோய் ஏற்படுவதைத் தடுக்கப் பின்பற்றக்கூடிய உணவு, வாழ்க்கை முறையும் பத்தியமே!
சித்த மருத்துவத்தின் சொத்து ‘பத்தியம்’ என்றால், அது மிகையில்லை. அதேநேரம் பத்தியம் என்பது பொதுவாக உணவு சார்ந்தும், வாழ்வியல் சார்ந்தும் இருக்கக்கூடிய ஒன்றே தவிர, குறிப்பிட்ட மருத்துவத் துறை சார்ந்தது அல்ல என்பதையும் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும்.
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: siddhathiru@gmail.com