

நலம் வாழ' செப்டம்பர் 2 இதழில் ‘கேள்விக்கு அப்பாற்பட்டவர்களா?' என்ற தலைப்பில் மருத்துவர்கள் பற்றி விலாசினி எழுதிய கட்டுரை வெளியாகி இருந்தது. அதற்கு ஒரு வாசகியின் எதிர்வினை:
பதினெட்டு வருடங்களுக்கு முன் என் சின்னஞ்சிறு மகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, விடுமுறை நாள் என்று சிகிச்சை அளிக்க மறுத்த பெண் மருத்துவரின் மேல் இன்றைக்கும் எனக்குக் கோபம் இருக்கிறது. ஆனால், பை பாஸ் சர்ஜரி செய்திருந்த நிலையிலும், எங்கள் குடும்ப மருத்துவர் அப்போது ஓடி வந்து என் குழந்தையைக் காப்பாற்றியது அந்த மருத்துவரை ‘கடவுளாகவே’ பார்க்க வைத்தது. எங்கோ ஒரு சில நேர்மையற்ற மருத்துவர்களும், மனசாட்சி அற்ற மருந்துக் கம்பெனிகளும் செய்யும் போலியான பிரசாரங்களால் ஏமாறும் மக்களின் நிலை கண்டு வேதனை ஏற்படுகிறது.
ஆனாலும், வரும் நோயாளிகளிடம் கனிவாகப் பேசி ஆறுதல் அளித்து, அவர்களின் நிதி நிலைமையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற மருத்துவ ஆலோசனை தரும் உண்மையான மருத்துவர்களைப் பாராட்டத்தானே வேண்டும். அப்படிப்பட்ட மருத்துவர்களும் சிலர் இருக்கிறார்கள். அந்த மருத்துவர்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்களாகவே நோயாளிகளின் கண்களுக்குப் புலப்படுகிறார்கள். அதேநேரம் மருத்துவர் என்றாலே கிரீடம் சுட்டிய ராஜாக்களைப் போல், பாமர மக்களிடமிருந்து விலகி இருப்பவர்கள் நிறைய உண்டு. எங்கள் தெருவில் உள்ள ஒரு மருத்துவர் இறுகிய முகத்துடனே காரில் பயணிப்பார். மெத்தப் படித்துவிட்டதாலேயே அவர் புன்னகையை தொலைத்துவிட்டதாக எனக்குத் தோன்றும்.
முழுமையாக அவர்களை நம்பி நம் உயிரையும் உடலையும் ஒப்படைப்பதால், மருத்துவர்கள் வாழும் கடவுளாகவே தெரிகிறார்கள். ஆனால், அதை ஒவ்வொரு மருத்துவரும் உணர்ந்து தங்களின் நிலையை உயர்த்திக்கொள்ள மறுத்து, பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்தான்.
பெரிய மருத்துவமனை நிர்வாகங்களின் பிடியில் சிக்கிக்கொண்ட மருத்துவர்கள் நியாயங்களிலிருந்து தவறுவது, தவிர்க்க முடியாத நடைமுறையாகிவிட்டது. மருத்துவமனை நிர்வாகங்கள் முறையான கட்டணம் விதித்து மருத்துவத்துக்கும், மருத்துவர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுவதில் இருந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுபா, சேலம்