Published : 22 Apr 2014 10:34 am

Updated : 22 Apr 2014 10:34 am

 

Published : 22 Apr 2014 10:34 AM
Last Updated : 22 Apr 2014 10:34 AM

மாற்று மருத்துவம்: 108 புள்ளிகளால் உடலைச் சீராக்கும் வர்ம மருத்துவம்

108

விலங்குகளுக்குப் பெரியளவில் நோய்கள் வருவதில்லை. இதற்குக் காரணம் பிரபஞ்சத்தின் விதிகளை அவை பெரிதாக மீறுவதில்லை என்பதுதான். ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் அவை மனிதர்களைவிட புத்திசாலித்தனமானவை. தேவையற்ற எந்தப் பொருளையும் சாப்பிடுவதில்லை. தனக்கான உணவைத் தேர்ந்தெடுத்து, சாப்பிடுவதற்கு முன்பு மோப்பம் பிடித்துத் தன் நுண்ணறிவால் உணர்ந்த பிறகே, அதை உட்கொண்டு நோயின்றி வாழ முயற்சிக்கின்றன.

உலகம் ஐந்து பூதங்களால் ஆனது. நம் உடலிலும் ஐந்து பூதங்கள் உள்ளன. அண்டத்தில் இருக்கிறது பிண்டம். பிண்டத்தில் இருக்கிறது அண்டம். உடல் என்கிற பிரபஞ்சம், வெளியில் இருக்கும் பிரபஞ்சத்தில் உள்ள மருந்தை எடுத்துக்கொள்கிறது.

ஆதாரங்களைச் சீர்படுத்துதல்

மனித உடலின் ஆதாரங்களாக எவையெல்லாம் இயங்குகின்றனவோ, அவற்றைச் சரிப்படுத்தும் மருத்துவம்தான் இந்தியப் பாரம்பரிய மருத்துவம். நாம் வாழும் இடத்தைச் சுற்றியுள்ள பச்சிலைகள், மூலிகைகளைக் கொண்டு மருந்துகளைக் கொடுத்தும் பரிசோதித்தும் வந்தவர்களைச் சித்தர்கள் என்று அழைத்தனர்.

சித்தர்கள் அந்தக் கால விஞ்ஞானிகள். மருத்துவ நடைமுறைகளை அவர்கள் செய்யுளாக எழுதிவைத்துள்ளனர். எல்லா வயதினருக்கு வரும் நோய்களை வகைப்படுத்தி, அவர்கள் சிகிச்சை அளித்தார்கள். கஷாயம், சூரணம், நெய் போன்ற பலவகை மருந்துகள் ஒரு காலகட்டம் வரை நோய்களைத் தீர்ப்பதற்குப் போதுமானதாக இருந்தன. ஆனால், வகைப்பாட்டைத் தாண்டி உடலில் தோன்றிய மர்மமான நோய்களுக்குத் தீர்வு கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

சில வகை உள்காயங்கள், புறக்காயம், மனக்காயங்களுக்கு மருந்து இல்லை. அதனால்தான் அகத்தியர் மர்ம மருத்துவச் சிகிச்சையை உருவாக்கினார்.

ஒரு காலத்தில் அரசர்கள் போருக்குப் போகும்போது, அவர்களுடன் வர்ம மருத்துவர்களும் சென்றார்கள். போரில் ஏற்படும் காயங்களுக்கு, அவசரகாலச் சிகிச்சைகளுக்கு வர்ம மருத்துவம் நன்கு பயன்பட்டிருக்கிறது. உடலில் உள்ள வர்மப் புள்ளிகளில் தாக்குதல் நடத்தப்படும்போது, அதில் உண்டாகும் நோய்க்கு வர்ம மருத்துவம் அவசியப்பட்டது. அதனாலேயே வர்ம மருத்துவம், அவசரகாலச் சிகிச்சை என்பதையும் தாண்டி போர், சண்டையோடு தொடர்புடையது என்று வரலாற்றில் பெயர் பெற்றுவிட்டது.

மனம், உடல் நலம்

வர்ம மருத்துவம் மனம், உடல் இரண்டிலும் உள்ள நோயின் காரணிகளைப் பரிசீலிக்கிறது. அதிக மனஅழுத்தம், வேலைப்பளுவால் அவதிப்படுபவர்களை நோய்கள் எளிதில் தாக்கும். தொடர்ச்சியாக உடல் உறுப்புகளில் மாற்றம் ஏற்பட்டுச் செயலிழக்கத் தொடங்கும். இதையே ஆங்கில மருத்துவம் வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களாகப் பார்க்கிறது. இன்றைய காலகட்டத்தில் சிறுவயதிலேயே நீரிழிவால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் உள்ளனர்.

போதுமான உடற்பயிற்சி, அமைதியான வாழ்க்கை சூழல், சமச்சீரான சுற்றுச்சூழல் போன்றவை இல்லாமல் போனதே இதற்குக் காரணம்.

வர்ம மருத்துவத்திற்கென்றே பிரதானமானதும் பிரத்யேகமான சிறப்பு மருந்துகள் பல உள்ளன. வர்ம சிகிச்சைக்குப் பயன்படுத்தும் மருந்துகளில் பெரும்பாலும் உலோகமும், தாதுகளும் சேர்க்கப்படுவதில்லை. தாவர இலை, பூ, மரப்பட்டை, வேர், பிஞ்சு, காய் ஆகியவற்றில் இருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. அத்துடன் இஞ்சி, திப்பிலி, மிளகு, சித்தரத்தை, அதிமதுரம், கருஞ்சீரகம் போன்றவற்றையும் சேர்க்கிறார்கள். உடலுக்குப் புறம்பான எந்தப் பொரு ளையும் சேர்ப்பதில்லை. இதுவே வர்ம மருந்துகளின் அடிப்படை.

வர்ம மருத்துவத்தில் பரம்பரை அனுபவம் கொண்ட, திருவிதாங்கூர் அகிலச் சித்த மருத்துவக் கல்லூரியில் இந்திய மருத்துவத்தைப் படித்தவர் மருத்துவர் வி. தர்மலிங்கம். தமிழக அரசு பாரம்பரிய மருத்துவத்தைப் பரவலாக்குவதற்காகவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவும் அமைத்துள்ள டாக்ட் அமைப்பின் தலைவராகவும் இவர் இருக்கிறார். வர்ம மருத்துவத்தின் சிறப்பம்சங்கள் பற்றி அவர் கூறுவது:

வர்ம மருத்துவமே பிரதானம்

சித்த மருத்துவத்தின் பிரதானப் பிரிவாக மர்ம மருத்துவச் சிகிச்சையே இருந்துவந்தது. அதுதான் தமிழில் வர்ம மருத்துவம் என்று அழைக்கப்படுகிறது. உடலின் உயிர்நிலை ஓட்டத்துடன் தொடர்புடைய சிகிச்சை முறை வர்ம மருத்துவம். உடலில் 108 பாகங் களாக ஒடுங்கியிருக்கும் வர்மப் புள்ளிகளை முழுவதும் அறிந்த மருத்துவர்கள்தான், இந்த முறையில் சிகிச்சை அளிக்க முடியும். அதற்கு அனுபவமும், நோய் அறிதிறனும் அவசியம்.

1926-ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் அகிலச் சித்த மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அதுதான் இந்தியாவிலேயே பாரம்பரிய மருத்துவத்தைக் கற்றுத்தர ஆரம்பிக்கப்பட்ட முதல் கல்லூரி. வர்ம அறிவு பிரத்யேக அறிவுத்துறையாக, வெளியில் ஒதுங்கிப் போய்விட்டது சித்த மருத்துவத்துக்குப் பெரிய இழப்புதான். இந்திய மருத்துவக் கல்வியில் வர்ம மருத்துவத்தை முழுமையாகப் புகுத்தாததும், கற்றுத் தராததும் தவறு. வர்ம மருத்துவம் தெரிந்த சித்த மருத்துவர்கள், நோய் பற்றிய முழுமையான அறிவைப் பெற்றிருப்பார். ஏனென்றால், வர்ம மருத்துவம் உடலிலுள்ள 4,448 நரம்புகளில் உள்ள நோய்களையும் தீர்க்கக்கூடியது.

108 புள்ளிகள்

சித்த மருத்துவத்துக்கும், ஆயுர்வேத மருத்துவத்துக்கும் ஆதாரம் ஒன்றுதான். இரண்டுக்கும் மருந்துகள் ஒன்றுதான். சூழலும், அனுபவப் புரிதலும், கலாச்சார வேறுபாடுகளும் பயிற்சியில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

ஆயுர்வேத, சித்த மருந்துகளில் நாட்பட்ட நோய்களுக்கும், பெரு மருந்துகளுக்காவும் சில உலோகம், தாதுப்பொருட்களை சேர்க்கிறார்கள். உயிர்நிலை ஓட்டத்துடன் தொடர்புடைய மருத்துவம் வர்மம். மனிதன் சுவாசிக்கும் காற்று, உடலின் 108 வர்மப் புள்ளிகளில் தங்கித்தான் வெளியேறுகிறது. இந்த 108 புள்ளிகளும் சுவாசிக்கின்றன. எல்லா மனிதர்களும் 108 புள்ளிகள் வழியாகச் சுவாசிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு யோகிதான், சரநிலை தெரிந்தவர்தான், மூச்சுக் காற்றை சரியாக இழுத்து 108 புள்ளிகளுக்கும் செலுத்த முடியும்.

நாம் எல்லோரும் 60 சதவீதமே சுவாசிக்கிறோம். 108 வர்மப் புள்ளிகளில் ஏதாவது ஒன்றின் இயக்கம் பாதிக்கப்பட்டால், மனிதன் நோயைப் பெறுகிறான். சரநிலை பாதிக்கப்படும்போது, உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.

மனிதனின் உறுப்புகளிலேயே, கல்லீரல் மிக முக்கியமானது. அது தான் பிரம்மம். பகுதியை வெட்டிய பிறகும், அது வளரும். கல்லீரல் எளிதில் பலவீனமடைவதில்லை. வர்ம மருத்துவத்தில் கல்லீரலை வலுப்படுத்தும் சிகிச்சை முக்கியமானது.

ஆன்மிகத் தொடர்பு

வர்ம மருத்துவத்தைப் பொருத்தவரை ஒரு மனிதரின் நெற்றி புருவமத்தி எனப்படும் திலர்த காலத்தைப் பார்த்தவுடன், அவரது நோய்கள் என்னவென்பதை 80 சதவீதம் சொல்லிவிட முடியும். சாதாரணமாக ஒருவருடைய திலர்த காலத்தை இன்னொருவர் உற்றுப் பார்க்கக் கூடாது என்று சொல்கிறார்கள். அதனால்தான் குங்குமம், விபூதி வைத்து அது மறைக்கப்படுகிறது.

அருகிலிருக்கும் மருந்து

கடலாடி எனப்படும் நாயுருவிச் செடியை உலரவைத்துப் பொடியாகச் சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது. நாயுருவி போன்ற செடிகள் நமது குப்பைமேடுகளிலேயே எளிதாகக் கிடைக்கக்கூடியது. உடல் வேகமும், மன நிதானமின்மையும் புற்றுநோய் போன்றவற்றுக்குக் காரணமாக உள்ளன. அதனால் அமைதி தேவை என்று அந்தக் காலத்திலேயே எழுதி வைத்துள்ளனர். காயசித்தி எனப்படும் ஆரோக்கியத்தை ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அன்றைக்கு அனுபவித்தனர்.

குணப்படுத்தும் நோய்கள்

பல நரம்பியல் நோய்களை வர்ம மருத்துவம் மூலம் குணப்படுத்து கிறோம். முதியவர்களுக்கு வரும் இடுப்பு வாதம், தோள்பட்டை வாதத்தைச் சரிசெய்கிறோம். முதுகெலும்பு, மூட்டு உலர்வு ஆகியவற்றுக்கு அலோபதியில் அறுவை சிகிச்சையே செய்யப் படுகிறது. உடைந்த எலும்புகளை, தைலங்கள் வழியாகவே ஒட்டவைக்கிறோம். நீரிழிவு தொடர்பாக உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கும், மஞ்சள் காமாலைக்கும்கூட வர்ம மருத்து வத்தில் நல்ல தீர்வு இருக்கிறது.

ஆய்வு, மேம்பாடு

ஆயுர்வேதம், சித்தா, யுனானி சிகிச்சை மற்றும் மருந்துகளின் ஆராய்ச்சிக்காக மத்திய அரசின் AYUSH துறை நிதி ஒதுக்கிப் பல்வேறு பணிகளைச் செய்துவருகிறது. ஆய்வகம், தகவல் தொழில்நுட்ப வசதிகள், மருந்துகளைச் சந்தைப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தின் பலன்களும், மருந்துகளும் அதிகப் பயனாளிகளைச் சென்றடையும் என்று நம்புகிறோம்.

அறுவை சிகிச்சை நம்முடையது

- மருத்துவர் வி.தர்மலிங்கம்

ஆதிகாலத்திலேயே அறுவை சிகிச்சை செய்தவர்கள் சித்த மருத்துவர்கள். இதற்கு வரலாற்று ஆவணங்கள் உண்டு. இந்தியாவிலிருந்துதான் அறுவை சிகிச்சை வெளியே சென்றது. ஆனால், ஒருகட்டத்தில் சித்தர்கள் ஆன்மிகம், ஐதிகத்தில் நாட்டத்தைச் செலுத்த, அறுவை சிகிச்சை அறிவியலாக வளர்த்தெடுக்கப்படாத நிலை ஏற்பட்டுவிட்டது.

அறுவை சிகிச்சை குறித்து எழுதப்பட்ட பல ஏடுகளும் இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. நவீன மருத்துவம் அந்த ஏடுகளைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையை மேம்படுத்திக் கொண்டது. ஆனால் நம் அரசாங்கம் இந்தியப் பாரம்பரிய மருத்துவர்களை ஒருங்கிணைத்து, இந்த அறிவியலை வளர்க்கவில்லை.


உடல்மனம்சித்த மருத்துவம்108 புள்ளிகள்அறுவை சிகிச்சை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author