Published : 18 May 2019 12:07 PM
Last Updated : 18 May 2019 12:07 PM

முதுமையும் சுகமே 05: ‘பக்க’வாதம்... விலகிப் போக...

ஒரு மனிதனின் அடிமனம் எப்போது அதிகமாகக் காயப்படுகிறது தெரியுமா?

தன்னை எதிராளி இகழும்போதோ கசப்பான வார்த்தைகளைக் கூறும்போதோகூட இல்லை. தன்னை ஒரு பொருட்டாகவே ஒருவர் மதிக்காதபோதுதான், மனித மனத்தில் காயம் ஆழமாகிறது. அக்கறையோ பச்சாதாபமோ (Indifferent) சிறிதும் இல்லாமல் இருப்பதுதான் ஒருவர் இன்னொருவருக்குச் செய்யும் மிகப் பெரிய அவமானம்.

யோசித்துப் பாருங்கள்! முதுமை தரும் நோய்கள், வறுமை, தனிமை போன்றவை ஒருபுறம் என்றால், முதியவர்கள் அலட்சியத்தோடு நடத்தப்படுவது மறுபுறம். இதற்கு ஏழை, பணக்காரன் என்ற பாரபட்சம் கிடையாது என்பதை மருத்துவமனைகளில் சாதாரணமாகப் பார்க்க முடிகிறது.

இந்த நிலைமையில் முடக்குவாதம் (Stroke) தாக்கி, அதிலிருந்து ஒருவர் தேறி வந்துவிட்டாலும் மனச்சோர்வு (Depression) நோயால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்.

நரகமாகும் நரம்பு மண்டலம்

நாம் நல்ல மூளைக்காரராக இருக்கிறோமோ இல்லையோ, மூளைக்கு உயிர்வாயு (Oxygen) ஒரு விநாடிகூடத் தங்கு தடையின்றி 95-100% சென்றுகொண்டிருக்க வேண்டும்.

மூளைக்குச் செல்லும் உயிர்வாயு 30-ல் இருந்து 60 விநாடிகள் அளவுக்குத் தடைபட்டாலே நினைவிழப்பு ஏற்படுவதோடு மூளை செல்களான ‘நியூரான்கள்’ (Neurons) இறக்கத் தொடங்கிவிடும்.

அதனால்தான் முடக்குவாதம் பற்றிச் சொல்லும்போது ‘Time is Brain’ என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது கை, கால் செயலிழந்து போகத் தொடங்கியதிலிருந்து தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்த்துவதற்காகத்தான் இப்படிச் சொல்லப்படுகிறது.

ஒருவருக்குப் பக்கவாதம் வருகிறதென்றால் எந்தெந்த அறிகுறிகள் மூலம் அவரே அறிந்துகொள்ளலாம் என்பதைக் கடந்த வாரம் பார்த்திருந்தோம்.

உடனடிச் செயல்பாடு அவசியம்

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி நம்மைப் போன்ற நாடுகளில் பக்கவாதத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உடனே கண்டறிவது குறித்த விழிப்புணர்வு குறைவு. அதற்காக அவசரகால ஊர்திகளை அழைத்தாலும் அவசரத்துக்கு வருவதில்லை, அப்படியே வந்தாலும் வளர்ந்த நாடுகளைப் போல வண்டியிலேயே முதலுதவிசெய்யும் அளவுக்கு வசதியுமில்லை, அனுபவம் வாய்ந்த பணியாளர்களும் இல்லை.

இவற்றைவிட முக்கியமானது ஒருவருக்கு வந்திருக்கும் பக்கவாதம் மூளையின் ரத்தக்குழாய்களில் ஏற்பட்ட அடைப்பால் ஏற்பட்டதா ரத்தக்கசிவால் ஏற்பட்டதா என்பதை அறிந்துகொள்ளச் செய்யவேண்டிய உடனடி சி.டி. ஸ்கேன் வசதி இல்லை… ஏனென்றால், இந்த இரண்டு பாதிப்புகளுக்குமான சிகிச்சை எதிரெதிரானது.

பக்கவாதம் கண்டறியப்பட்ட உடன், உடனடியாகப் பெரிய மருத்துவமனைக்கு நோயாளரைக் கொண்டுசெல்ல வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் தவணைமுறையில் மரணம்.

வந்திருப்பது பக்கவாதம் என்பதைத் தெரிந்துகொண்டவுடன் முதல் ஒரு மணிநேரத்தில் (Golden Hour) மூளையை சி.டி. ஸ்கேன் எடுத்து, அதன் அடிப்படையில் கொடுக்கப்படும் சிகிச்சையால் 100% குணப்படுத்துவதற்கான சாத்தியம் அதிகம். அதிகபட்சமாகப் பக்கவாதம் வந்த நேரத்தில் இருந்து 3 மணிநேரத்தில் சி.டி. ஸ்கேன் உடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டால் அதிகபட்ச நலம் பெற முடியும்.

கவனம் கோரும் அம்சங்கள்

பக்கவாதத்தில் இருந்து தப்பிப் பிழைத்த பலருக்குத் தொண்டைப் பகுதிகளின் தசைகளும் செயலிழக்கக்கூடும் என்பதால், அவர்களால் உணவைச் சரிவர விழுங்க முடியாது. அத்துடன் உணவைக் கொடுக்கும்போது கூடுதல் கவனத்துடன் இல்லாவிட்டால், உணவு நுரையீரலுக்குள் சென்றுவிடும். குறிப்பாக, திரவ உணவு. இதனால் Aspiration Pneumonia தொற்று ஏற்பட்டு உயிருக்கும் உலைவைத்துவிடும். ஒருபோதும் படுத்திருக்கும்போது ஒருவருக்கு உணவை ஊட்டவே கூடாது.

அடுத்து படுக்கைப் புண் வராமல், சிறுநீரக நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவர் ஆலோசனையுடன் எவ்வளவு விரைவாக பிசியோதெரபி பயிற்சியைத் தொடங்குகிறோமோ, அவ்வளவு விரைவில் குணம் கிடைக்கும். அத்துடன் பேச்சு தடைபட்டிருந்தால், பேச்சுப் பயிற்சி (Speech therapy) கொடுக்க வேண்டும்.

மலச்சிக்கலும் இவர்களுக்குப் பெரும் சிக்கலாக இருப்பதால் அதற்கேற்ற உணவு, மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூளை செல்களைப் புதுப்பிக்கத் தொடர்ந்து மூளை தூண்டலுக்கான எளிய பயிற்சிகளைக் (Occupational Therapy) கொடுக்க வேண்டியிருக்கும்.

குத்தல் பேச்சு வேண்டாம்

இதையும் தாண்டி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் கடுமையான மன உளைச்சலிலும் மனச்சோர்விலும் இருக்கக்கூடும் என்பதால், அவர்களுடைய மனத்தை உற்சாகப்படுத்தவும், தன்னம்பிக்கை ஊட்டவும் வேண்டும். இளம் வயதில் செய்த களியாட்டங்களைப் பற்றிப் பேசுவதோ குத்தல் பேச்சோ இந்த நேரத்தில் கூடாது. உடனடி சிகிச்சை பூரண நலம் பெற உதவும் என்பதை மறக்க வேண்டாம். முறையான, திட்டமிட்ட வாழ்க்கையை வாழ்ந்தால் பக்கவாதத்தையும் தடுக்கலாம், வெல்லலாம்.
 

வாதம் எப்படி அறிவது?

ஒருவருக்கு முடக்குவாதம் (Stroke) அல்லது பக்கவாதம் வந்துவிட்டது என்பதை யார் வேண்டுமானாலும்  கண்டறிந்துவிட முடியும்.

அப்படி முதலில் கண்டறிந்துவிட முடிந்தால் தக்கநேரத்தில் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இப்படிக் கண்டறிபவர்களை ‘மக்கள் மருத்துவர்கள்’ (Social Doctors) என்று வெளிநாடுகளில் அழைக்கிறார்கள். இந்த நடைமுறை வளர்ந்த நாடுகளில் அதிக அளவில் பயிற்றுவிக்கப்படுகிறது.

ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுகிறார் என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்வது? அதற்கு BE FAST என்ற ஆங்கில வார்த்தைகள் உதவும்.

mudhumai-2jpg100 

 

- (தொடர்ந்து பேசுவோம் )
கட்டுரையாளர், குடும்ப நல - முதியோர் மருத்துவ ஆலோசகர்
தொடர்புக்கு: drashokshpl@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x