Last Updated : 06 Apr, 2019 12:37 PM

 

Published : 06 Apr 2019 12:37 PM
Last Updated : 06 Apr 2019 12:37 PM

காயமே இது மெய்யடா 27: சத்தம் கேட்காதே

உடலுக்கு வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் சிறு நீரகம் எனக் காதுகளைச் சொல்லலாம்.  அவரை விதையைப் போன்ற தோற்றத்தில் உள்ள இவை ஒரு நீர்மூலக உறுப்பாகும். சிறுநீரகம் முழுத் திறனுடன் இயங்கும்வரை காதுகளுக்கு ஒரு தொல்லையும் இல்லை. சிறுநீரகம் தன் ஆற்றலை இழக்கும்போது காதுகளின் இயல்பும் கெடும்.

உடலில் நீர் வற்றும்போது காதுகள் மந்தமாவது போலவே நீர் மிகுந்து மூக்கு வழி ஒழுகும்போது காதுகளில் வலி ஏற்படும். மூக்குச் சளி, கெட்டித்து பசைத் தன்மையில் வடிவது போலச் சிலருக்குக் காதுகளிலும் சீழ் வடியலாம். காதில் சீழ் வடிவது, உடலில் நீர் வடிவிலான கழிவு அதிகரித்து விட்டதன் வெளிப்பாடே ஆகும்.

தொடர் விளைவுகள்

காதில் சீழ் வடிவதை நிறுத்த முயல்வதற்கு முன்னர், நீண்ட நாள் சளித் தொல்லை அல்லது பீனிசம் எனப்படும் சைனடிஸ் பிரச்சினை உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவற்றைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். மாறாக, காதுச் சீழை அடைக்க முயன்றால் அது வேறுபல விளைவுகளை உருவாக்கிவிடும். காதுவலி, காது இரைச்சல் காது அடைப்பு போன்றவற்றின் தொடர் விளைவாகக் கழுத்து நரம்பிலோ மூளைப் பகுதியிலோ வேறுசில பிரச்சினைகள் உருவாகச் சாத்தியம் உண்டு.

காதில் ஏற்படும் பிரச்சினைகளின் தொடர் விளைவாகவே சிலருக்குத் தலைச்சுற்றல், மயக்கம் போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. மூக்கு, காது, தொண்டையில் ஏற்படும் தொல்லைகள் அனைத்தும் நுரையீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பானது.  பல்லின் வேர் மூலமாகத் தாடை நரம்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பும் காது வலியாகத் தோன்றலாம். வாயில் அசைபோடும்போது காதின் அடிப்பகுதியில் ஏற்படும் வலியை உணர்ந்து சில நாட்களுக்குக் கடினமான பொருட்களை மெல்லுவதை நிறுத்திக்கொள்வதன் மூலமாக வலி தானாகக் குறைவதை உணரலாம்.

உயிரோட்டப் பகுதி

தொண்டை, மூக்கின் அடிப்பாகம், காதின் உட்புறம் மூன்றும் சந்திக்கும் இடம் உயிரோட்டத்தின் மிக முக்கியமான பகுதி. இந்தப் பகுதியில் தோன்றும் நல்லுணர்வே நமது ஆரோக்கியத்தின் அடிப்படை. சிலர் சதா சர்வ காலமும் செருமிக் கொண்டே இருப்பார்கள். சிலர் ஆண்டுக்கணக்காக மூக்கை உள்நோக்கி உறிஞ்சிக்கொண்டே இருப்பார்கள். இதுபோன்ற அறிகுறிகள் உடனடியாகப் பெரும் தொல்லையைக் கொடுக்காவிட்டாலும் அவை உள்ளுறுப்புகளின் குறிப்பாகச் சிறுநீரகத்தின் வெப்பச் சமநிலைக் குலைவைக் குறிக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

உணவுக் கழிவால் உடலெங்கும் தேங்கிவிட்ட வாயுவும்கூடக் காது அடைப்புக்கும் காது இரைச்சலுக்கும் காரணமாக இருக்கக்கூடும். காதுகளில் நீர் வடிவதற்கும் வயிற்றில் தேங்கும் அமிலத்துக்கும் கூடத் தொடர்பு இருக்கச் சாத்தியம் உண்டு. காது மடல்களில் தடிப்பு, அரிப்பு ஏற்படுவதற்கும் செரிமானத்துக்கும் நேரடியாகத் தொடர்பு உண்டு.

செவிப்பறையின் நேர்த்தி

ஒரு தேர்ந்த இசைக் கலைஞன் தனது தோல் கருவியை இழுத்துக் கட்டியது போல, மூன்று மென்னெலும்புகளில் செவிப்பறை இழுத்துக் கட்டப்பட்டுள்ளது. 16-ல் இருந்து 30,000 வரையிலான நுட்பமான ஓசையைப் பிரித்துணரும் ஆற்றல் மிக்கது நம் செவிப்பறை. சுமார் ஒன்றரை செமீ அளவுக்குச் செவிப்பறைக்குப் பின்னுள்ள மெல்லிய நரம்பு இரண்டிலிருந்து மூன்று செமீ நீளத்துக்குள் 30,000 சுருள்களாக மூளை நரம்பைச் சென்றடைகிறது.

 இழுத்துக் கட்டப்பட்டதாகத் திண்ணென்று இருக்கும் செவிப்பறையில் துளை விழுவதற்கும் நேரடியான துளைத்தலுக்கும் வாய்ப்பு இல்லை. தூக்கணங் குருவிக் கூட்டைப் போலப் பல அடுக்குப் பாதுகாப்புடன் அமைந்துள்ள செவிப்பறைக்குள் சத்தம் கூட வடிகட்டியே அனுப்பிவைக்கப்படுகிறது.

ஓசையை மட்டுமல்ல காதுக்குள் எது நுழைந்தாலும் தடுத்து நிறுத்த, சுங்கச் சாவடி போல மெழுகுச் சுரப்பிகளும் 4000-க்கும்

மேற்பட்ட நுண்மையான முடிகளும் உள்ளன. குளிரைத் தடுத்து வெப்ப மூட்டி அனுப்பும் தடுப்பானாகவும் செயல்படும் அவைதாம் நாம் நீரினுள் மூழ்கும்போது காற்றுத் தடுப்பையும் உருவாக்குகின்றன. காது வலிக்கு மருந்து காய்ச்சி ஊற்றுவது, காதைச் சுத்தப்படுத்துகிறேன் என்று எண்ணெய் ஊற்றி ஊறவிடுவது, காதைக் குடைந்து குறும்பி எனும் மெழுகு எடுப்பது எல்லாமே நமது காதுகளின் தடுப்பு அரண்களைச் சிதைப்பதே ஆகும்.

ஒலியின் அடர்த்தி ஆபத்தானது

உச்சமான சத்தத்தைவிடச் சத்தத்தின் அலை அடர்த்திதான் நமது செவிப்பறையை அதிகமாகப் பாதிக்கிறது. அதிக அடர்த்தியான சத்தங்களைக் கேட்கக் கேட்கச் செவிப்பறையின் ஆயுள் குறைந்து கொண்டே போகும். எடுத்துக்காட்டாகக் காதுகளில் கவனத்தைக் குவித்து பாம்பின் ஊர்தல் தொடங்கி யானையின் பிளிறல் வரை கேட்கும் ஒரு வேடனின் செவிப்பறைத் திறன் 90 வயதுவரைகூடக் குறையாமல் தொடர்ந்து நீடிக்கும்.

ஆனால், கச்சேரியில் வாத்தியங்கள் வாசிக்கும் குறிப்பாக ட்ரம்ஸ் வாசிக்கும் கலைஞரின் செவிப்பறை நடுத்தர வயதைக் கடக்கும் முன்னரே அதன் திறனை இழந்துவிடும் சாத்தியம் உண்டு. மனிதனை ஒத்த உடலமைப்பு உடைய எலி, இதுவரை கேட்டுப் பழக்கப்பட்டிராத ஒலியைத் திடீரென்று மிக அடர்த்தியாகக் கேட்க நேர்ந்தால் வெறும் சத்தத்தால்கூட இறந்துவிடும்.

முகத் தோற்றப் பொலிவுக்கும் நுட்ப உணர்வுக்கும் உள்ள உறவையும் உயிர்ப்பைத் தக்கவைப்பதற்கான ரகசியம் குறித்தும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(தொடரும்...)

கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்

தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x