காயமே இது மெய்யடா 29: படுக்கையில் சிறுநீர் கழிகிறதா?

காயமே இது மெய்யடா 29: படுக்கையில் சிறுநீர் கழிகிறதா?
Updated on
2 min read

சிறுநீர்ப் பையின் மேல்பாகம்வரை நிரம்பியதும் சிறுநீர்க் குழாயில் உள்ள வால்வு “சிறுநீரை வெளியேற்று” என்ற சமிக்ஞையை நமக்குத் தூண்டுகிறது. பையின் கீழ்ப் பகுதியில் உள்ள மற்றொரு வால்வு நமது மூளையின் உத்தரவு கிடைத்த பின்னரே தன்னைத் திறக்கிறது.

அதனால்தான் எத்தனை முட்டிக்கொண்டு நின்றாலும் கழிவறைக்குச் சென்று பொருத்தமான சூழலை உருவாக்கும் நொடிவரை நம்மால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது.

அடிக்கடி சிறுநீரை அடக்கிவைக்க முயன்றால் நம்மை அறியாமலேயே சிறுநீர் கசிந்துவிடும். பிறந்து இரண்டு வயதுவரை சிறுநீர்ப் பையின் முனையில் உள்ள வால்வு மூளையின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.

இதனால்தான் மேல் வால்வு தூண்டலுக்கு உள்ளானதும் குழந்தை சிறுநீர் கழித்து விடுகிறது. உள்ளுறுப்புகள் வளர வளர குழந்தையின் கட்டுப்பாட்டுத் திறன் வளர்ந்துகொண்டே போகிறது.

படுக்கையில் கழிதல்

பலருக்கு இரவில் சிறுநீர் கழித்ததே நினைவில் இருப்பதில்லை. தூக்கம் கலையாத நிலையிலும் கால்கள் தரையில் சரியாகப் பதியாமல் தன்னுணர்வு இன்றியே கழிவறைக் கதவைத் திறந்து சிறுநீர் கழித்துத் திரும்ப வந்து படுத்து விடுகிறார்கள். ஆனால், சிலருக்குப் பதின்மத்தைக் கடக்கிற வயதிலும்கூடப் படுக்கையில் கழிக்கும் பழக்கம் உள்ளது.

இதற்கு மண்ணீரல் தளர்ந்திருப்பது முக்கியமான காரணியாக இருக்கக்கூடும். அதுபோல சிறுநீரகப் பலவீனத்தின் காரணமான பய உணர்வு, அதன் தொடர் விளைவாக நரம்பு மண்டலம் முழு ஆற்றலைப் பெறாமல் இருப்பது போன்ற பல காரணங்கள் இருக்கக் கூடும்.

இதைச் சுட்டிக்காட்டிக் குற்றவுணர்வு கொள்ள வைப்பதன் மூலம் சரிசெய்துவிட முடியாது. மெது மெதுவாகப் பழக்கப்படுத்தல் பயிற்றுவித்தல் மூலமாக மட்டுமே சரி செய்ய இயலும். பதின்ம வயதில் படுக்கையில் கழித்தல் தற்காலத்தில் சுமார் இருபது சதவீதம் பேருக்கு இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

அதற்கு மிக முக்கியமான காரணம் இளம் வயதிலேயே அடிக்கடி கொள்ளும் பதற்ற உணர்வு. பாடச்சுமையின் அழுத்தமும் பதற்றமும் முழுமையான தூக்கமின்மையும் குழந்தைகளின் உள்ளுறுப்புகளின் இயல்பான செயல் பாட்டைப் பாதிப்பதோடு ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கும்.

பள்ளி தரும் அழுத்தம்

அதுபோக பள்ளியில் பாட நேரத்தில் இடையே தோன்றும் சிறுநீர் கழிப்புணர்வுக்குப் போதிய சுதந்திரம் இல்லை. ஆதிக்க மனோபாவத்துடன் அணுகும் ஆசிரியரிடம் மாணவர்கள் கேட்கத் தயங்குவார்கள். அப்படிக் கேட்கும் மாணவர்களை ஆசிரியர்கள் நயமாகக் கையாள்வதில்லை. தாழ்வுணர்வுக்கும் குற்றவுணர்வுக்கும் உள்ளாக்கும் விதமான ஒரு பார்வை அல்லது ஒரு வார்த்தை எந்த மாணவரையும் மீண்டும் அதுபோல் சிறுநீர்க் கழிப்புக்கு அனுமதி கேட்பதைத் தடுத்து விடும்.

மேலும், பெரும்பாலான பள்ளிகளில் கழிவறைப் பராமரிப்பு படுமோசமான நிலையில் இருப்பதால், கழிவறை நாற்றமே ஆழ் மனத்தில் பதிந்து மாணவர்களின் சிறுநீர் கழிக்கும் எண்ணத்தை இறுக்கிவிடுகிறது. திசுக்கள் முழுக் கட்டுப்பாட்டுக்கு வராத பிஞ்சு வயதில் கழிப்பதற்கான தூண்டலை மீறி (அடக்கி) சிறுநீர் கழிக்காமல் இருக்கும்போது திசுக்கள் தமது கட்டுப்பாட்டு உணர்வை முற்றாக இழந்துவிடுகின்றன. எனவே, படுக்கையில் கழித்தல் பரவலான ஒன்றாகிவிட்டது.

அடக்குவதால் நேரும் பாதிப்புகள்

சிறுநீர்ப் பையில் இயல்புக்கு மாறாகத் தேக்கிவைப்பது கட்டுப்பாட்டு இழப்பு போகச் சிறுநீர்ப்பையில் கல் உருவாகும் நிலை ஏற்படுகிறது. இளம் வயதிலேயே ஏற்படும் சிறுநீர் கழித்தல் தொடர்பான பிரச்சினை உரிய வயதில் (ஆண் – பெண் இருபாலருக்கும்) கரு உருவாக்கப் பிரச்சினையாக மாறவும் கூடும். மாணவர்களில் பலர், குறிப்பாக மாணவிகள் சிறுநீர் கழிக்கப் பள்ளிக் கழிவறைக்குப் போகக் கூடாது என்பதற்காகவே நீர் அருந்துவதைத் தாகத்தை மீறி அடக்கிக்கொள்வார்கள்.

இதுவும் பலருக்குச் சிறுநீர்ப் பையில் உப்புகள் படிந்து கற்கள் உருவாகச் சாத்தியமாகிறது. சிறுநீர்ப் பையில் தொடர்ந்து உப்புகள் படியப் படிய ரவை போன்று சிறிய அளவிலிருந்து கிலோ அளவுக்கும்கூட மாறும் சாத்தியம் உண்டு என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நீர் அருந்துவதைக் கட்டுப்படுத்தி சிறுநீர்ப் பையில் உப்புப் படியும் தொல்லை ஏற்படுவது போலவே அதீத எச்சரிக்கை உணர்வில் அடிக்கடி தேவைக்கு அதிகமாக நீர் குடிப்பதாலும் சிறுநீர்ப் பை பலவீனமடையும்.

சிறுநீர்ப் பையின் கொள்ளளவு 250 மில்லி லிட்டரிலிருந்து 750 மி.லிட்டர்வரைதான். பொதுவாக 500 மி.லி வரை இருக்கலாம். ஆனால், இது நபருக்கு நபர் உள்ளுறுப்புகளின் தன்மையிலிருந்து உடலின் எடை மற்றும் சுரப்புகளின் அளவைப் பொருத்தும் மாறுபடும்.

வெப்பச் சமநிலையைப் பராமரிப்போம்

புறச் சூழலில் நிலவும் குளிர்வு – வெப்ப தன்மைக்கு ஏற்பவும் வெளியேறும் சிறுநீரின் அளவு மாறுபடும். எடுத்துக்காட்டாகப் புறத்தில் இருக்கும் வெப்பத்துக்கு மாறாக அறையில் மிதமான ஏசி குளிரில் நாம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நமக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்படலாம். மாறாக, அறைக்குள் ஏசி மூலமாக அதீத குளிர்ச்சி உண்டாக்கப்படுமானால் இப்போது உடல் சிறுநீரை வெளியேற்றத் தூண்டுதல் தராது.

சிறுநீர் வழியாக வெளியேறும் வெப்பத்தைக்கூட இருத்தி வைத்து உடலின் வெப்பத்தைத் தக்கவைக்கும் முயற்சியை உடல் மேற்கொள்ளும். எனவே, உடலின் வெப்பச் சமநிலையைப் பராமரிப்பதில் எப்போதும் கவனத்துடன் இயங்க வேண்டி உள்ளது. நீர்மூலக உறுப்பு குறித்துத் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்...)

கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்

தொடர்புக்கு: kavipoppu@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in