Last Updated : 02 Mar, 2019 11:32 AM

 

Published : 02 Mar 2019 11:32 AM
Last Updated : 02 Mar 2019 11:32 AM

குறைவான இறைச்சி, நிறைவான ஆயுள்

ஆரோக்கியமான உணவு, வளம்குன்றா உணவு உற்பத்தி தொடர்பான ஆய்வுகளை நடத்தி சமீபத்தில் ஈட்-லான்செட் ஆணையம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 19 ஆராய்ச்சியாளர்கள், 16 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் சேர்ந்து தயாரித்த அந்த அறிக்கை சமீபத்தில் லான்செட் ஆய்விதழில் வெளியாகியுள்ளது. சர்க்கரையையும் இறைச்சியையும் உணவில் 50 சதவீதம் தவிர்த்து பழங்கள், காய்கறிகள், விதை உணவுகளை அதிகரித்துக்கொண்டால் ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து அறிவியல் சுற்றுச்சூழல் மையத்தைச் சேர்ந்த சுனிதா நாராயணும் பப்ளிக் ஹெல்த் பவுண்டேஷன் ஆப் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீநாத்தும் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.

அந்த ஆய்வறிக்கையின்படி, ஒரு வளர்ந்த நபருக்குச் சராசரியாக ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 500 கலோரி தேவைப்படுகின்றன. அரிசி, கோதுமை அல்லது சோளம் போன்ற தானியங்களிலிருந்து 800 கலோரியும் பழம்-காய்கறிகளிலிருந்து 204 கலோரியும் நிச்சயமாகக் கிடைக்க வேண்டும்.

மாடு, ஆடு, பன்றி இறைச்சியிலிருந்து 30 கலோரி கிடைத்தால் போதும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. சீனி, கொழுப்பு தனியாகச் சேர்க்கப்பட்ட உணவு எப்போதும் நல்லதல்ல என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. ஆரோக்கியமற்ற உணவைத் தவிர்ப்பதன் மூலமும் ஆரோக்கிய உணவை உட்கொள்வதன் மூலமும் 1.1 கோடி இளம்வயது மரணங்களைத் தவிர்க்க முடியுமாம்.

இறைச்சிக்குப் பதில் பருப்புகள்

ஆரோக்கியமான உணவுப் பட்டியலில் இறைச்சியைச் சேர்ப்பது, உள்ளூர் கலாச்சாரங்களையும் நுண்ணுணர்வுகளையும் கருத்தில் கொள்ளவும் இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது. இறைச்சி சாப்பிடும் வழக்கம் இல்லாத பின்னணியில் புரதச் சத்துக்குப் பருப்புகளையோ பிற உணவையோ சாப்பிடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்க நாடுகளில் உள்ள மக்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட ஆறரை மடங்கு அதிகமாக இறைச்சி உண்கின்றனர். தெற்காசியாவிலோ பரிந்துரைக்கப்பட்ட இறைச்சி உணவு அளவில் பாதிகூடச் சாப்பிடப்படுவதில்லை. உலகம் முழுக்க எல்லா நாட்டு மக்களும் ஸ்டார்ச் உணவான உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கைப் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாகவே உண்கின்றனர். தெற்காசிய நாடுகளில் ஒன்றரை மடங்கு அதிகம் ஸ்டார்ச் உணவு உண்ணப்படுகிறது.

உணவுப் பழக்கம் மாற வேண்டும்

“உலகளாவிய அளவில் உணவுப் பழக்கத்தில் உடனடி மாற்றம் காண வேண்டிய தருணம் இது. 80 கோடிப் பேருக்குப் போதுமான உணவூட்டம் கிடைப்பதில்லை. இன்னும் பெரும்பாலானவர்கள் ஆரோக்கியமற்ற உணவைத் தொடர்ந்து உட்கொள்கின்றனர். இதனால் இளம்வயது மரணங்களும் நோய்களும் ஏற்படுகின்றன” என்கிறார் ஈட்- லான்செட்டின் ஆணையர், ஆய்வாளர் வால்டர் வில்லெட்.

தாவர உணவை அதிகப்படுத்தி இறைச்சி, கொழுப்பு உணவு, தீட்டப்பட்ட தானியங்கள், சர்க்கரை உணவைக் குறைக்க வேண்டுமென்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

சில விளைபொருட்களில் மட்டுமே விவசாயத் துறை கவனம் செலுத்தாமல் உணவூட்டம் தரக்கூடிய பல்வேறு வகை விளைபொருட்களைப் பயிரிடுவதில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x