Last Updated : 29 Mar, 2019 06:19 PM

 

Published : 29 Mar 2019 06:19 PM
Last Updated : 29 Mar 2019 06:19 PM

காயமே இது மெய்யடா 26: எண்ணெய்க் குளியலால் செழிக்கும் தலைமுடி

தலைமுடி பராமரிப்புக்குக் குளியலே முதன்மையான அம்சம். உடலின் வெப்பத்தைச் சீராக வைத்திருக்க எண்ணெய்க் குளியல் அவசியம். தலை முடியையும் மண்டை ஓட்டுப் பகுதியையும் எண்ணெய் தேய்த்துக் குளிர விடுவதன் மூலம், தலைமுடி வேர்களைப் பாதுகாக்கலாம். சிறுநீரகத்தின் வேலைப்பளுவைக் குறைக்கலாம். இதனால், இதயம், மண்ணீரல், நுரையீரல், வயிறு, கல்லீரல் ஆகியவை புத்துணர்ச்சி பெறும். எண்ணெய்க் குளியல் முடித்த பிறகு கண்கள் மிகுந்த ஒளி பெறும்.

எண்ணெய்க் குளியல்

வாரத்துக்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என நம்முடைய பாரம்பரிய உடலியல் முறை வலியுறுத்துகிறது.  இரண்டு தலைமுறைக்கு முன்னர் வரை வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல் இயல்பான ஒன்றாக இருந்தது. நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்வோர் குறிப்பாக, மீனவர்கள் இன்றளவும் எண்ணெய்க் குளியலை விடாமல் பின்பற்றி வருகின்றனர். வெப்ப மண்டல வாசிகளான நாம் கண்டிப்பாகத் தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிக்க வேண்டும்.

தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் கொண்டுள்ள பெண்கள் காலையில் புறப்படும் அவசரத்தில் உலர்த்துவதற்கு நேரமின்மையால் தலையில் நீர் ஊற்றிக் குளிப்பதைத் தவிர்க்கின்றனர். தலையில் நீர் ஊற்றாமல் உடலுக்கு மட்டும் ஊற்றிக் குளிக்கும்போது உடலைக் குளிர்வித்தல் முழுமை பெறாமல் உடலின் வெப்பம்  மேல்நோக்கி உயர்ந்து தலையைச் சென்றடையத் தலைமுடியின் வேர்கள் தங்கள் பிடிமானத்தை இழக்கின்றன.

உச்சந்தலையில் வெப்பம் ஏறவிட்டு வேர்க்கால்களையும் சுரப்பிகளையும் அழித்துவிட்டால், முடி எவ்வளவு நீளமாக இருந்தாலும் முடியின் நுனி வெடித்து வெகு விரைவிலேயே தலை முடியின் தோற்றப் பொலிவு சிதைந்துவிடும். வெளியில் புறப்படும் பெண்கள் தலை ஈரம் காய்வதற்கு ஏதுவாக முன் கூட்டியே குளித்துவிடுவது நல்லது. இல்லையென்றால் குறிப்பிட்ட காலத்துக்கு  முடியை ஆண்களைப் போல வெட்டிக்கொள்ளலாம்.

தலையில் நீர் ஊற்றிக் குளிக்காதபோது உடலின் வெப்பம் உள்ளுக்குள்ளேயே சுழன்றுகொண்டிருப்பதால் எளிதில் சளிபிடிக்கும் சாத்தியம் உண்டு. அதுபோக அவ்வப்போது வெள்ளிக்கிழமை போன்ற சிறப்பு நாட்களில் மட்டும் தலையில் நீர் ஊற்றிக் குளிக்கும்போது, உள் வெப்பத்தால் தலையில் ஊற்றப்படும் நீர், மண்டை ஓட்டில் நீராவியாகப் படிந்து, தலைப்பாரம், தலைவலி, பிடரி வலி, புருவத்தின் மேற்புறம் வலியாக மாறித் தொல்லை அளிக்கிறது.

முடிக்கு எமனாகும் ஷாம்பு

தலைக்குக் குளிக்கும்போது தலைமுடியைத் தூய்மையாகப் பராமரிக்கச் சீயக்காய் தூள் தேய்த்துக் குளிக்கச் சோம்பல்பட்டு, ஷாம்பு பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துவிட்டது. ஆனால், வீரியமான ரசாயனக் கூறுகள் அடங்கிய ஷாம்பு தலைமுடி வேர்களுக்குக் கேட்டையே விளைவிக்கும். சீயக்காய் பயன்படுத்துவதில் சலிப்பு அடைகிற வர்கள் முட்டையின் வெள்ளைக் கருவைத் தலைமுடியில் தேய்த்து சுமார் 10-20 நிமிடங்கள் ஊறவிட்டு அலசிவிடலாம்.

முட்டையின் கவிச்ச வாசம் தலைமுடியில் இருக்கும் என்று கருதுகிறவர்கள் எலுமிச்சம் பழத் தோலைக் குளிக்கும் நீரில் கசக்கி விட்டுக் குளிப்பதன் மூலம் மேற்படி வாசத்தைத் தவிர்க்க முடியும்.

செம்பருத்தி ஷாம்பு

பப்பாளிப் பழத்தைக் கூழாக அரைத்துத் தலையில் தடவி ஊறவிட்டு உலர்ந்த பின்னர் குளிப்பது தலைமுடியின் உறுதிக்கும், வேர்களின் பலத்துக்கும் துணை புரிவதுடன் ஒட்டுமொத்த உடல் நலத்துக்கும் ஏற்றதாக இருக்கும். பத்து செம்பருத்தி இலையை மிக்ஸி சின்ன ஜாரில் இட்டு சிறிதளவு நீர் விட்டு அரைத்தால் வழுவழுப்பாக கூழாக இருக்கும். இதைத் தலை முடியில் தடவி லேசாக உலர்ந்த பின்னர் தேய்த்துக் குளித்தால் ஷாம்பு அளவுக்கே நன்றாக நுரை பொங்கும். இது எண்ணெய்க் குளியல் அளவுக்கே நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும்.

கண்களில் ஒளி பெருக்கும். நெல்லிக்காய் வற்றல், கருவேப்பிலை இரண்டையும் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யில் முறுக்கக் காய்ச்சி தலைக்கு வைக்கும் எண்ணெய்யுடன் கலந்து அன்றாடம் தேய்த்து வந்தால் தலைமுடி தொடர்பான பிரச்சினைகள் ஏதும் தோன்றாது. தேங்காயை அரைத்துப் பாலாக்கி சுதையோடு தலையில் தேய்த்து ஊறவிட்டுக் குளிப்பதும் தலைமுடியைக் குளிர்விக்கத் துணைபுரியும்.

பொடுகைக்களைவோம்

தற்காலத்தில் தலையில் பொடுகு உதிர்தல் பரவலாக இருக்கிறது. இதற்குப் பலரும் ஷாம்புவையே தீர்வாகக் கருதுகின்றனர். மருத்துவர்களும் அதையே பரிந்துரைக்கின்றனர். உடலின் ஒருங்கிணைந்த இயக்கத்தைப் புரிந்துகொள்ளாததன் விளைவே ஷாம்புவை நாடுவதாகும். தலையில் பொடுகு தோன்றுவதற்குப் பெருங்குடலில் ஏற்படும் நீர் வறட்சி, மலச் சிக்கல் ஆகியவையே முதன்மைக் காரணிகள் ஆகும்.

அதுபோல் மூச்சிரைப்புக்காக (wheezing) அல்லது நுரையீரலில் உள்ள சளியை உலர்த்துவதற்காக எடுத்துக்கொள்ளும் (steroid) மருந்து காரணமாக இருக்க முடியும். அளவுக்கு அதிகமாக உள்ளுக்குள் படிந்திருக்கும் சளிக் கழிவும், உலர்ந்த மருந்துகளும் பொடுகுச் செதில்களாக வெளிப்படும். தலைமுடியில் பேன்கள் உலவுவதற்குக் காரணமும் பெருங்குடலில் மலம் தேங்குவது அல்லது உடலில் காற்றுக் கழிவு தேங்குவது காரணமாக இருக்கக் கூடும்.

இந்தக் குறைபாடுகளை நீக்குவதன் மூலமாக மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும். தலை முடிக்குப் போடும் ஷாம்புவோ தைலங்களோ அதற்குத் தீர்வாகாது. பெருங்குடல், மலக்குடல் வறட்சியை நீக்கவும், மலச்சிக்கலைப் போக்கவும் உணவு முறை, வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்தாக வேண்டும்.

தொடர்ந்து சிறுநீரகத்தால் பராமரிக்கப்படும் மற்றொரு வெளி உறுப்பான காது குறித்து தொடரின் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.  

(தொடரும்...)
தொடர்புக்கு: கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x