

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்தும்போது பெற்றோர்களின் அல்லது ஆசிரியர்களின் கண்காணிப்பு அவசியம். அப்படி இல்லை என்றால் அவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ள நிறைய சாத்தியம் இருக்கிறது. இதில் ஆண் பெண் பேதம் இல்லை. யார் வேண்டுமானாலும் சைபர் வெளியில் உலவும் மோசமான மனிதர்களிடம் சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இதில் மிக வேதனையான விஷயம் பல பாலியல்ரீதியான சைபர் குற்றங்களைப் பற்றிப் பெற்றோருக்கு முறையான விழிப்புணர்வு இல்லை என்பதுதான். சைபர் வெளியில் சிறுவர் சிறுமியரைப் பாதுகாக்க நாம் மேலும் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
செக்ஸ்டார்ஷ்ன்:
சைபர் வெளியில் சிறுவர், பதின் வயது நபர்களுடன் நட்பாகப் பழகும் அன்னியர்கள், மெல்ல அவர்களின் அந்தரங்கத் தகவல்கள் அல்லது நிர்வாணப் புகைப்படங்கள் இருப்பதாக மிரட்டி அவர்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது.
செக்ஸ்டிங்:
மெசேஜ்கள் உதவியுடன் பாலியல்ரீதியாகப் பேசுவது. இது முழுக்க முழுக்க வார்த்தை பரிமாற்றமாகவே இருக்கும் என்பதால் இதை செக்ஸ்டிங் என்கிறோம்.
ஸ்வீட்டியின் உதவி
இணையவெளியில் குழந்தைப் பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிப் புரிதல் வர நான் உங்களுக்கு ஸ்வீட்டி எனும் பெண்ணை அறிமுகப் படுத்துகிறேன்.
ஸ்வீட்டிக்குப் பத்து வயதுதான். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இணையத்தில் ஆன்லைனுக்கு வந்து வெப்கேமிராவை ஆன் செய்தால் போதும், இந்தப் பெண்ணின் நிர்வாணத்தைப் பார்க்க உலகம் முழுவதுமிருந்து குழந்தைப் பாலியல் உணர்வாளர்கள் மொய்க்கத் தொடங்குவார்கள்.
இதில் ஒரே ஆறுதல் ஸ்வீட்டி எனும் இந்தப் பெண் பிள்ளை ஒரு அனிமேஷன் வீடியோ என்பதுதான். பிலிப்பைன்ஸ் காவல்துறையும் இன்டர்போலும் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த அனிமேஷன் பெண், உலகம் முழுவதும் சைபர் வெளியில் பாலியல்ரீதியாகக் குழந்தைகளைத் துன்புறுத்தும் நபர்களைப் பிடிக்க உதவுகிறாள். பாலியல்ரீதியாக அணுகும் நபர்களை மெல்ல இணைய வெளியில் கண்காணித்து அந்த நாட்டுக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து அவர்களைக் கைதுசெய்ய வைக்கிறாள். இதுவரை உலகம் முழுவதும் சுமார் 1,000 குற்றவாளிகளைக் கைதுசெய்ய ஸ்வீட்டி உதவி இருக்கிறாள்.
எதைப் பகிரலாம்?
ஏற்கெனவே கூறியது போல் தகவல்களைப் பகிரும்போது அதைக் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் காட்டும்படியான வசதிகளைத் தயவுசெய்து பயன்படுத்துங்கள்.
பகிரும்போது குறிப்பிட்ட பள்ளி, குறிப்பிட்ட இன்ஸ் டிட்யூட் அல்லது அவை இருக்கும் இடங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர வேண்டாம்.
உங்கள் குழந்தைகள் அடம்பிடிப்பதையும் சேட்டைகள் செய்வதையும் வசவு வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் படம்பிடித்துப் பகிர வேண்டாம்.
அவர்களின் வயதுக்கு ஏற்ற திறமை களை வெளிப்படுத்தினால், அதைத் தாராளமாக உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் மாத்திரம் பகிரலாம்.
ஒரு செயலியில் பகிர்வதை நீங்கள் தெரிந்துகொள்வதைப் போல, மிக முக்கியமாகப் பகிரப்பட்ட விஷயங்களை எப்படி நீக்குவது என்பது பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்
(தொடரும்..)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com