

டிஜிட்டல் உலகத்தில் குழந்தைகள் தாமாகப் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வதைவிடப் பெற்றோர்களால் உந்தப்பட்டு சிக்கிக்கொள்வதே அதிகமாக உள்ளது. இணைய உலகில் என்ன பகிர்கிறோம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு நமக்குத் தேவை. குழந்தைகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்வதில் மிகுந்த கவனத்தைக் கையாள வேண்டும். ‘குட் டச் - பேட் டச்’ போல, குட் ஷேர்- பேட் ஷேர் பற்றிய விழிப்புணர்வு இன்றைய தேதியின் அவசியத் தேவை.
பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சமூக விரோதிகள், நமக்கே தெரியாமல் நம்மிடையே உலவிக் கொண்டிருக்கிறார்கள். சாதாரணமாக உலகில் எளிதில் சிக்காத குழந்தைகள், இணைய உலகில் அவர்களிடம் எளிதில் சிக்கிக் கொள்கிறார்கள். இந்த ஆபத்து தெரிந்தோ தெரியாமலோ தம்முடைய பிள்ளைகளைப் பற்றிப் பெருமைப்படும் பல ஒளிப்படங்களையும் வீடியோக்களையும் பெற்றோர்கள் பகிர்கிறார்கள். ஸ்மார்ட்ஃபோனில் உள்ள சமூக வலைத்தளச் செயலிகளைப் பயன்படுத்தி ஒரு விஷயத்தைப் பகிர்ந்தால், அது தானாகவே, நாம் இருக்கும் இடம் பற்றிய தகவலை ஜிபிஎஸ் உதவியுடன் கண்டறிந்து கொள்ளும். மேலும், நாம் பகிரும் ஒளிப்படங்களில் இருக்கும் மனிதர்களைச் சரியாகக் கண்டுபிடித்து ‘டேக்’ செய்யும் திறனும் அதற்கு உண்டு.
சைபர் சிண்டிகேஷன்
டிஜிட்டல் உலகின் மிகப் பெரும் வரம் சாபம் இரண்டுமே இந்த சைபர் சிண்டிகேஷன்தான். அதாவது, ஒரு நடிகரின் ரசிகர்கள் ஆண்டிப்பட்டியில், கனடாவில், சீனாவில், நியூசிலாந்தில் என உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சாதாரணச் சமூகத்தில் இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு. ஆனால், டிஜிட்டல் உலகில், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற ஏதாவது சமூக வலைத்தளக் குழுக்களின் மூலம் இவர்கள் எல்லாம் எளிதாக ஒன்றாகிவிட முடியும். இதைத்தான் சைபர் சிண்டிகேஷன் என்கிறோம்.
முன்பு பாலியல் வக்கிர மனம்கொண்டவர்கள் தனித்தனியே இருந்தார்கள், இன்று ஃபேஸ்புக், வாட்ஸ் அப் குழுக்களில் இணைந்து ஒரு குழுவாகச் செயல்படுகிறார்கள். சிறுவர் சிறுமியரின் ஒளிப்படங்களையும் வீடியோக்களையும் சேகரித்துத் தங்கள் குழுக்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள். குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, அதை ஒளிப்படமாகவோ வீடியோவாகவோ பகிர்கிறார்கள். தங்கள் குழுக்களில் பகிரப்படும் படங்கள், சிறுவர்களின் இருப்பிடத் தகவல்களை வைத்து அவர்கள் அருகிலிருந்தால், நேரடியாகவோ பின்தொடர்ந்தோ (சைபர் ஸ்டாகிங்) தொந்தரவுசெய்கிறார்கள். சிறுவர் சிறுமியரைப் பேசி மயக்கி சைபர் செக்ஸில் ஈடுபடச் செய்கின்றனர். இணைய உலகின் கறுப்புப் பக்கங்களைப் பற்றிய பிரக்ஞை கொஞ்சமும் இல்லை என்பதால், இந்த கொடூரர்களுக்கு இரை போடுபவர்களாகப் பெற்றோர்களே இருப்பது வேதனையே.
பெற்றோரின் தவறுகள்
டிஜிட்டல் உலகில் பல பெற்றோரின் விபரீதக் கனவுகளில் ஒன்று எப்படியாவது பிரபலமாவது. அடுத்த விபரீதம் தங்கள் தாழ்வு மனப்பான்மையைப், போக்கிக்கொள்ளக் குழந்தைகளைப் பயன்படுத்திக் கொள்வது. இதில் உச்சகட்டம், தங்களுடைய குழந்தைகளின் இயல்பான நடவடிக்கைகளை வைரலாக்கிப் பிரபலமடைய நினைப்பது. ‘குணமா சொல்லணும்’ என்று ஒரு பிஞ்சுக் குழந்தை கெஞ்சும் வீடியோ வைரலானதன் விபரீதம், இன்று நிறையப் பெற்றோர், வெறிகொண்டு தங்களுடைய குழந்தைகளின் வீடியோக்களை எடுத்து வைரலாகப் பகிர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
கவனத்துடன் இருப்போம்
உங்களின் படங்களையோ குழந்தைகளின் படங்களையோ சமூக வலைத்தளங்களில் பகிரும்போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். முடிந்த அளவு சமூக வலைத்தளங்கள் கொடுத்திருக்கும் பிரைவசி வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒளிப்படங்களைப் பகிருங்கள். எந்த இடத்திலிருந்து பகிர்கிறீர்கள் என்பது போன்ற தகவல்களைத் தவிருங்கள். உங்களுடைய குழந்தைகளின் பள்ளி, டியூஷன் முகவரிகள் போன்ற தகவல்களை இணையத்தில் பகிர்வதைத் தவிருங்கள். ஆனால், இணையப் பாதுகாப்புக்கு இது போதுமா என்றால், கண்டிப்பாகப் போதாது. அதைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
(தொடரும்..)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com