Last Updated : 09 Mar, 2019 02:13 PM

 

Published : 09 Mar 2019 02:13 PM
Last Updated : 09 Mar 2019 02:13 PM

எனக்கு ஏன் புற்றுநோய் வரவேண்டும்?

அவருக்கு 43 வயது. அவர் தன் வாழ்க்கையில் ஒரு சிகரெட் கூடப் பிடித்ததில்லை. மது அருந்தியதுமில்லை. தொடர்ந்து உடற்பயிற்சியையும் ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களையும் கடைப்பிடிப்பவர். ஆனால், அவருக்கு வயிற்றுப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டு உயிர்திசுப் பரிசோதனையிலும் அது நிரூபணமானது. புற்றுநோய் மருத்துவரைப் பார்த்து அவர் கேட்ட கேள்வி மருத்துவரையே ஒரு நிமிடம் மௌனமாக்கியது. “எனக்கு ஏன் டாக்டர், புற்றுநோய் வரவேண்டும்?”.

புற்று நோய் மருத்துவர்கள் தினசரி யாராவது ஒரு நோயாளியிடம் எதிர்கொள்ளும் கேள்விதான் இது. கார்சினோஜென்கள் என்றழைக்கப்படும் புற்றுநோய் ஊக்கிகள் புகையிலையில் மட்டுமல்ல நாம் சாப்பிடும் எண்ணற்ற உணவுப்பொருட்கள் வழியாகவும் நமது உடலுக்குள் நுழைகின்றன.

இந்திய உணவுப் பொருட்களில் அதிகமாக கன உலோகங்கள், அங்கீகரிக்கப்படாத சேர்மானப் பொருட்கள், பூச்சிக்கொல்லி எச்சங்கள், விலங்கு மருந்து எச்சங்கள், நுண்ணுயிர் மாசுகள், பூஞ்சை நச்சுகள் காணப்படுவதால், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உணவுகளை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் தவிர்க்கின்றன. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உணவுப்பொருட்களின் தரமே இப்படியானதெனில் உள்நாட்டில் உட்கொள்ளப்படும் உணவுப் பொருட்களின் தரம் எப்படி இருக்கும்.

நீடிக்கும் என்டோசல்பானின் தடங்கள்

கேரளத்தில் என்டோ சல்பானால் ஏற்பட்ட பாதிப்பால் 4 ஆயிரம் பேர் கொல்லப்பட்டது எல்லோருக்கும் தெரியும். ஐக்கிய நாடுகள் சபையால் என்டோசல்பான் பயன்பாடு தடைசெய்யப்பட்ட பிறகும், விளைச்சல் விரைவாகவும் உபரியாகவும் கிடைப்பதற்காக அது இந்தியாவில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுத்தான் வருகிறது. சமீபத்தில்கூட நிறையக் காய்கறிகளில் என்டோ சல்பான் பயன்படுத்தப்பட்டதன் தடயங்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆகாரப் பாதுகாப்புப் பொருட்களாலும் ஆபத்து

உணவுகளை நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்கவும் சுவையாக வைத்திருப்பதற்கும் காலம்காலமாக உப்பு, சர்க்கரை, தாவர எண்ணெய்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த இயற்கையான உணவுப்பேணிகள் உடலுக்குத் தேவையான உணவூட்டத்தையும் சரியான அளவில் அளித்து வந்தன. இவை க்ளாஸ் ஒன் ப்ரிசெர்வேட்டிஸ் என்று அழைக்கப்படுகின்றன.

தொழில்நுட்பமும் ஆய்வுகளும் நவீனமான நிலையில் உணவுகளைப் பாதுகாப்பதற்காகச் செயற்கை வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படத் தொடங்கின. அவை உடலைப் பாதுகாக்காமல் பாதிக்கத் தொடங்கின. செயற்கை வேதிப்பொருட்களான சோடியம் பென்சோயிட், சோடியம் நைட்ரேட் ஆகியவை குழந்தைகளைப் பாதிப்பதுடன் வயிற்றுப்புற்றுநோய்க்கும் காரணமாகின்றன. இந்த உணவுப் பாதுகாப்புப் பொருட்கள் குளிர்பானங்கள், பக்குவப் படுத்தப்பட்ட இறைச்சி, டப்பா உணவுகளில் காணப்படுகின்றன.

ஆபத்து விளைவிக்கும் நிறமூட்டிகள்

இயற்கையான உணவு நிறமூட்டிகளான பீட்ரூட்/மாதுளை சாறு, கேரட் சாறு, கீரைத் தூள், வேர்க்கோசு, மஞ்சள் தூள், நீலநெல்லி, கோக்கோ தூள் போன்றவற்றால் ஆரோக்கியத்துக்குத் தீங்கு ஏதுமில்லை. ஆனால், இவை சேர்க்கப்படும் உணவுப்பொருட்கள் குறைந்த நாட்கள்தாம் நீடிக்கும்.

உணவுத் தொழிலில் செயற்கை நிறமூட்டிகளாகப் பயன்படுத்தப் படும் ரெட் 40, ப்ளூ 1, யெல்லோ 5 ஆகியவை தீவிரமான ஆரோக்கியப் பிரச்சினைகளை உண்டாக்கக் கூடியவை.

பாலில் சுண்ணாம்பும் மிளகாய் வத்தல் பொடியில் மரப்பொடியும் சேர்க்கப்படுவது வழக்கமாக உள்ளது. தேயிலைத்தூளில் நிலக்கரி தாரையும் பச்சை மிளகாய், பட்டாணியில் பச்சை வண்ணத்துக்கு மாலசைட் வேதிப்பொருளையும் பயன்படுத்துவது சாதாரணமாக இந்தியாவில் நடைபெறுகிறது. ஆப்பிள் போன்ற பழங்கள் பளபளப்பாகத் தெரிவதற்கு மெழுகு பயன்படுத்தப்படுகிறது.

உடனடி உணவு உடனடி அபாயம்

தற்போதைய காலகட்டத்தின் மனநிலையை ‘உடனடி, அபரிமிதம், மேலும் அதிகம்’ என்று சொல்லலாம். இன்ஸ்டன்ட் காபி, பீட்சா, பர்கர், உணவு மட்டுமின்றி; உடனடியான வெற்றியும் தேவையாக உள்ள காலம் இது. அபரிமிதமான, ரகம் ரகமான உணவுதான் கவர்ச்சிகரமான, வசதியான உணவாக எல்லோராலும் விரும்பப்படுகிறது. ஒன்று வாங்கினால் மூன்று பொருட்கள் இலவசம் என்ற அறிவிப்புகள் வாடிக்கையாளர்களிடையே பெறும் வரவேற்பிலிருந்தே இதைத் தெரிந்துகொள்ளலாம்.

ஆனால், உணவுப் பாதுகாப்பில் சமரசம் செய்துதான் பெரும்பாலான உணவுகள் சந்தையில் உடனடி உணவுகளாக விற்கப்படுகின்றன. ’இந்திய உணவுத் தரப் பாதுகாப்புச் சட்டம்’ எல்லாப் பாதுகாப்பு அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருந்தாலும் முறைப்படுத்துவதற்கும் அமல்படுத்துவதற்கும் இடையில்பெரும் முரண்பாடுகள் உள்ளன. உரிமங்களை வழங்கி நிர்வகிக்கும் அமைப்புகளாகவே பெரும்பாலும் உள்ளன. மோசமான தரம் காரணமாகத் தடைசெய்யப்பட்ட உணவு பிராண்டுகள் பற்றிய செய்திகளை மிக அரிதாகவே நாம் கடக்கிறோம்.

நமது வருங்காலத் தலைமுறையைப் பாதுகாக்கவும் உணவுப் பாதுகாப்புத் தர நடைமுறைகளைப் பாதுகாக்கவும் இந்திய பூச்சிக்கொல்லிச் சட்டம்-1968-ஐ அமல்படுத்த வேண்டியது அவசியமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x