

தலைமுடியின் ரகசியம் யாராலும் புரிந்துகொள்ள முடியாததாக உள்ளது. பெண்களுக்கு 28 வயதிலும் ஆண்களுக்கு 32 வயதிலும் தலைமுடியின் வளர்ச்சி உச்சத்தில் இருக்கும். அப்போது பெண்களுக்கு 1,20,000 முதல் 1,60,000வரையிலும், ஆண்களுக்கு 80,000 முதல் 1,20,000வரையிலும் முடிகள் இருக்கும்.
இயல்பான ஆரோக்கியத்துடன் இருக்கும்போதும் ஒருநாளைக்கு சுமார் 60 முதல் 120 முடிகள்வரை கொட்டும். அதுபோலவே புதிதாகத் தோன்றி வளரும்.
தலைமுடியின் வேர்களுக்கு அடியில் உள்ள சுரப்பிகள்தாம் தலைமுடியைப் பாதுகாக்கின்றன. இச்சுரப்பிகளுக்கான ஆதார ஆற்றல் சிறுநீரகமே. உடலில் தைராய்டு சுரப்பு ஒரே சீராக இருக்கும்போது தலைமுடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இதில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்போது அது உடனடியாகத் தலைமுடியைப் பாதிக்கும்.
நமது உடலின் ஆற்றல் செலவினத்துக்கு ஏற்ப சிறுநீரகத்தில் அட்ரீனலின் சுரக்கிறது. ஆண்களுக்குப் பதின்ம வயது தொடங்கி 24 வயதுவரை அட்ரீனல் உட்படச் சுரப்பிகள் முழுவீச்சில் செயல்படும். அந்த நேரத்தில் தலைமுடியின் வளர்ச்சியும் அடர்த்தியும் நிறமும் உச்சத்தில் இருக்கும்.
இளநரை
சிலருக்குப் பதின்ம பருவ மாற்றத்தின்போது தலைமுடி வெளுக்கத் தொடங்கும். நாட்டு வழக்கில் இளநரை என்பார்கள். அதுவே பதின்ம வயதின் முடிவில் ஆரம்பித்து 24-ம் வயதுக்குள் மீண்டும் முழுமையான கறு நிறத்தை அடைந்துவிடும். பெண்களுக்குப் பூப்படையும் காலம்வரை தலைமுடி மிக வேகமாக வளரும். அதற்குப் பின்னர் அவர்கள் உடலின் வெப்பச் சமநிலையைப் பராமரிப்பதைப் பொறுத்து உதிர்வும் வளர்ச்சியும் இருக்கும்.
உதிர்வின் காரணங்கள்
தலைமுடி உதிர்தல் என்பது தோற்றப் பொலிவோடு தொடர்புடைய அம்சம் மட்டுமல்ல; அது சிறுநீரகச் செயல்பாட்டுடன் தொடர்புடையது. நீண்ட நாள் நோயாலும் திடீரென்று தாக்கும் நோயாலும் உடல் பலவீனமடையும்போது கண்டிப்பாக அது தலைமுடியைப் பாதிக்கும். மத்திய வயதைக் கடக்கும் இரு பாலருக்குமே தலைமுடி தலையாய பிரச்சினையாக உள்ளது.
புரதச்சத்துக் குறைவு, உயிர்ச்சத்தான வைட்டமின் ஏ பற்றாக்குறை, காற்று மாசு, நீர் மாசு, அடிக்கடி பதற்றமடைதல் என இதற்கான காரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். முடி உதிர்வதற்கான அடிப்படையான காரணத்தைப் புரிந்துகொண்டால் அவரவருக்குச் சாத்தியமான வழிமுறைகளைப் பின்பற்றி, அதைத் தவிர்க்கலாம்.
சூட்டைத் தவிர்ப்போம்
தற்காலத்தில் தலை சூடேறுவதற்கான வாய்ப்பு மிகப் பரவலாக உள்ளது. அதைக் குறைப்பதற்குரிய வழிகள் யாராலும் எளிதில் பின்பற்றக்கூடியதே. முதலில் தலைமுடியின் வேர்களைத் தாங்கியுள்ள பகுதி வெளியிலிருந்து சூடேறாமல் பாதுகாத்துக்கொள்ளுதல் வேண்டும். ஆண் - பெண் இருபாலருமே தலையில் நீண்டநேரம் வெயில் பட நேருமெனில் தலையை வெள்ளைப் பருத்தித் துணியால் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
அதுபோலவே ஹெல்மெட், பிளாஸ்டிக் தொப்பி அணிய நேர்ந்தால் புற வெப்பம் நேரடியாக முடியில் இறங்காதபடியும், தலையின் வெப்பம் மேல் நோக்கிக் கடத்தப்படும் விதமாகவும் டர்க்கி டவல் போன்ற துணியால் கவசம் தரித்துக்கொள்ளுதல் வேண்டும். அதுபோலவே அதீத குளிரான சூழலிலும் குளிர்ச்சியானது தலையைத் தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அலுவலகத்தின் அல்லது வசிப்பிடத்தின் குளிர்சாதனம் அதீதக் குளிர்ச்சியை ஏற்படுத்தும்போது தலையைக் குளிர்ச்சி தாக்கிவிடக் கூடாது என்பதற்காக உடலின் வெப்பம் முழுதும் தலைக்கு ஏறுவதால் தலைமுடி வேர்கள் பலவீனப்பட்டு விடுகின்றன.
எண்ணெய் தேய்த்தல் நன்று
உள்ளிருந்தும் புறத்திலிருந்தும் முடியின் வேர்களில் சூடேறாமல் குளிர்ச்சியைத் தக்கவைக்க உதவும் எண்ணெய் தேய்த்தல் பழக்கம் வெகு வேகமாக அருகிக்கொண்டு வருகிறது. முடியின் பளபளப்புக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, அதன் வேர்களுக்கும் அளித்தாக வேண்டும். தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊறவிட்டுக் குளித்தல், தலைவெப்பத்தைக் குறைத்து முடியின் வேர்களுக்குப் பிடிமானத்தைக் கொடுப்பதோடு, அது சிறுநீரகத்தின் செயல் திறனையும் மேம்படுத்தும்.
தேங்காய் எண்ணெய்யை வேரில் அதாவது மண்டை ஓட்டில் நேரடியாகப்படும் படிக்கு அன்றாடம் தடவுவது முடியைப் பலப்படுத்தும். எண்ணெய் தடவி வெளியில் செல்ல விரும்பாவிட்டாலும் வீட்டில் இருக்கும்போதாவது தலைக்கு எண்ணெய் வைக்கலாம்.
பெண்ணின் தலைமுடிக்கும் உதிரப்போக்கு, கருத்தரித்தல் ஆகியவற்றுக்குமான தொடர்பு குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்.
(தொடரும்...)
தொடர்புக்கு: கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com