

சிற்றோடைக்கு அருகில், வயல்வரப்புகளிலும் குளத்துக் கரையிலும் காணப்படும் தாவரமே நீர்முள்ளி. ‘முப்பரிமாணத்தில் நீண்ட கூரிய முட்களையும் ஊதா நிற இதழ்களைப் பிரித்தது போன்ற வடிவமுடைய மலர்களையும் இது கொண்டிருக்கும்.
பெயர்க்காரணம்: இக்குரம், காகண்டம், துரகதமூலம், பாண்டுசமனி, முண்டகம், சுவேதமூலி, நிதகம் போன்ற பல்வேறு பெயர்களுக்குச் சொந்தமான மூலிகை நீர்முள்ளி. நீர் ஆதாரம் உள்ள இடங்களில் வளரும் முட்கள் கொண்ட செடி என்பதால் ‘நீர்முள்ளி’ என்ற பெயர். தாவரத்திலிருக்கும் முட்களைக் குறிக்கும் வகையில் ‘முண்டகம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
அடையாளம்: ஈட்டி வடிவ இலைகளையும் ஊதா நிற மலர்களையும் பழுப்பு நிற விதைகளையும் கொண்ட தாவரம். நீண்டிருக்கும் கூர்மையான முட்கள் இதன் தனித்துவம். ‘ஹைக்ரோஃபில்லா ஆரிகுலேடா’ (Hygrophila auriculata) எனும் தாவரவியல் பெயரால் சுட்டப்படுகிறது. ‘அகாந்தேசியே’ (Acanthaceae) குடும்பத்தைச் சார்ந்த நீர்முள்ளியில், பெடுலின் (Betulin), லுபியோல் (Lupeol), அபிஜெனின் (Apigenin), பால்மிடிக் அமிலம் (Palmitic acid) போன்ற எண்ணற்ற தாவர வேதிப் பொருட்கள் அங்கம் வகிக்கின்றன.
உணவாக: பாதாம், முந்திரி, கசகசா, நீர்முள்ளி விதை போன்றவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து அரைத்துக் கொள்க. இதைப் பாலில் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்கவைத்துச் சுடச்சுடத் தயாரிக்கப்படும் ‘நீர்முள்ளி பால்’ உடலுக்கான உற்சாக பானம்! நீர்முள்ளி இலைகளையும் விதைகளையும் ஆவியில் வேகவைத்து, பூண்டு, மஞ்சள், கடுகு சேர்த்து குழம்புப் பக்குவத்தில் சமைத்துச் சாப்பிட, சிறுநீர்ப்பாதைத் தொற்று, நீரடைப்பு போன்றவை விலகி சீராய் சிறுநீர் கழியும்.
நீர்முள்ளி விதைகளைத் தண்ணீரில் ஊறவைக்க, பசை போல குழகுழப்புத் தன்மையை அடையும். அதில் தேனும் நெய்யும் தனித்தனியே சேர்த்து ‘நீர்முள்ளி விதை அல்வா’ தயார் செய்து திருமணமான ஆண்களுக்குச் சிறப்புச் சிற்றுண்டியாக வழங்கலாம். பல்வேறு காரணங்களால் குறையும் விந்தணுக்களின் எண்ணிக்கை, அவற்றின் நீந்தும் திறனை (Motility) அதிகரிக்க நீர்முள்ளி விதை சிறந்தது. விரைவில் விந்து முந்தும் (Premature ejaculation) அறிகுறிக்கான மருத்துவத் தீர்வையும் வழங்கும்.
நீர்முள்ளி முழுத் தாவரத்தை உலர்த்தி வாழைத் தண்டுச் சாற்றில் நீண்ட நேரம் ஊறவைத்து ஒரு தேக்கரண்டி வீதம் சுவைத்து வர, ரத்த சோகைக் குறிகுணங்கள் குறைந்து, உடல்வீக்கம் வடியும். விதைகளைப் பாலில் ஊறவைத்து, நாட்டுச் சர்க்கரை கலந்து வழங்க, பாறையைப் போல உடல் வலுப்பெறும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதோடு, நலிந்த உடலைப் படிப்படியாய்த் திடமாக்கும் மூலிகை நீர்த்துளிகள் இதன் விதைகள்!
மருந்தாக: இதன் விதைகள் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு (Induces Spermatogenisis), செமினல் சுரப்புகளின் ஃப்ரக்டோஸ் அளவையும் முறைப்படுத்துகிறது. வலிநிவாரணி, வீக்கமுறுக்கி, புழுக்கொல்லி ஆகிய செய்கைகள் இதன் விதைகளுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. சிறுநீரகங்களுக்குப் பாதுகாப்புக் கவசமாகச் செயல்பட்டு, ரத்தத்தில் அதிகரித்திருக்கும் உப்புக்களின் அளவைக் கணிசமாகக் குறைக்கும் சூட்சுமம் அறிந்தவை நீர்முள்ளி விதைகள்.
வீட்டு மருந்தாக: காமம் பெருக்கும் செய்கையுடைய நீர்முள்ளி விதைகள், உடற் சூட்டைக் குறைத்துக் குளிர்ச்சியைத் தேகமெங்கும் சிலிர்க்கச் செய்யும். நீர்முள்ளி இலைகளோடு பசலைக் கீரையைக் கூட்டணி அமைத்து, ‘கீரை அவியல்’ ரகத்தில் சமைத்துச் சுவைக்க, வெப்ப காலத்தில் நோய்கள் உண்டாவதற்கான சாத்தியம் மிகக் குறைவு. மேக நோய்கள், பெண்களுக்கு ஏற்படும் ‘வெள்ளைப்படுதல்’ நோய்க்கான தீர்வையும் நீர்முள்ளி அளிக்கும். வியர்வையைப் பெருக்கி நச்சுக்களை வெளியேற்றும்.
நீர்முள்ளி, நெருஞ்சில், சிறுபீளை சேர்ந்த ‘மூம்மூர்த்தி களின் கூட்டணி’ சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் உறுதிமிக்கக் கூட்டணி! இலைச் சாற்றுடன் விளக்கெண்ணெய் சேர்த்து அரைத் தேக்கரண்டி வீதம் சாப்பிட, மூலநோய்க் குறிகுணங்கள், மூட்டுகளில் தோன்றும் வலி, கல்லடைப்பு முதலியவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம். இருமல், இரைப்பு, தலைபாரம் அல்லல்படுத்தும்போது, இதன் விதைகளை உலர்த்தி சூரணமாக்கி வெந்நீரில் கலந்து கொடுக்கலாம்.
‘விந்துவுமாம் தாதுவுமாம்… உடலில் ஏறிய நீர்வீக்கம் இறங்கும்…’ நீர்முள்ளி விதைக்கு உரித்தான அகத்தியரின் இந்தப் பாடல், உயிர்தாதுக்களை உற்பத்தி செய்து, உடல் வீக்கத்தை வடிக்கும் அதன் பண்பு பற்றி விளக்கமளிக்கிறது. உடலுக்கு வன்மையைக் கொடுக்கக்கூடிய, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் லேகிய வகைகளில், நீர்முள்ளி விதைகள் சேர்க்கப்படுகின்றன.
நீர்முள்ளி, சுரைக்கொடி, நெருஞ்சில், வெள்ளரி விதை, சோம்பு, கடுக்காய்த் தோல், நெல்லிக்காய், சரக்கொன்றைப் புளி ஆகியவற்றைச் சம அளவு எடுத்துத் தண்ணீரிலிட்டுக் குடிநீர் பானமாகத் தயாரிக்கப்படும் ‘நீர் வடிக்கும்’ மருந்தை முறையாகப் பயன்படுத்த, தடையின்றிச் சிறுநீர் இறங்கி, பெருவயிறு குறிகுணங்கள் மறையும். நீர்முள்ளிச் சாம்பலையும் நாயுருவிச் சாம்பலையும் நீரில் கலந்து இறுத்தித் தயாரிக்கப்படும் மருந்து, சிறுநீரக நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. நீர்முள்ளிச் சாம்பலை வெந்நீரில் கரைத்து வீக்கம் உள்ள இடங்களில் பூச விரைவாக வீக்கம் கரையும்.
சிறுநீரக நோய்களையும் வாத நோய்களையும் எதிர்த்து நிற்கும் நீர்முள்ளி விதைகள், நலம் காக்கும் கூரிய ‘முள்பந்துகள்!’
- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com