

தினமும் காலையில் சுமார் பத்து நிமிடம் நுரைக்க நுரைக்கப் பல் துலக்குகிறோம். ஆனால், காலையில் எழுந்த உடன் அத்தனை வண்ணமயமாகவும், அவ்வளவு வாசத்துடனும் நெழு நெழுப்பாகவும் பிதுக்கி எடுக்கும் பேஸ்ட்டில் என்னென்ன கூறுகள் அடங்கியுள்ளன என்பது குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறோமா? கிட்டத்தட்ட முப்பது முதல் எழுபது வரையிலான ரசாயனக் கூறுகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசையில் கலந்துள்ளன. அவை வாய்ப் பகுதியில் உள்ள நரம்புகளின் நுட்பமான ஏற்கும் திறன் வாயிலாக உடம்பு முழுதும் கடத்தப்படுகின்றன. அவற்றைக் குறித்து இந்த வாரம் பார்ப்போம்.
பாக்டீரியா கொல்லிகள் (Triclosan)
இந்த ரசாயனக் கூறு பல்லில் சேரும் பாக்டீரியாக்களை மட்டும் கொல்வதில்லை. நமது உடலுக்கு நன்மை செய்யும் கிருமிகளையும் அழித்து விடுகிறது. இதனால், உடலின் நோயெதிர்ப்புத் திறன் நாளடைவில் குன்றிவிடும்.
நுரை பெருக்கி (Sodium lauryl sulfate)
நுரையைப் பெருக்குவதற்காக பேஸ்டில் இது கலக்கப்படுகிறது. உடலின் இயல்புக்கு மாறான சுவையால் நாவின் சுவை மொட்டுக்களை சோடியம் லாரில் சல்பேட் சிதைத்துவிடும். அதனால் நாம் ஒவ்வொரு முறை உணவிலும் கூடுதலாகச் சுவையைச் சேர்க்க நேர்கிறது. உடலின் இயல்பான சுவையின் தேவைக்குக் கூடுதலான அளவை நமது உள்ளுறுப்புகள் வெளியேற்றியாக வேண்டும். குறிப்பாக, நீர்த்த வடிவிலான கழிவை வெளியேற்ற வேண்டிய சிறுநீரகம், கூடுதல் பணிச்சுமையால் அதற்குரிய நுட்பமான பணிகளைச் செய்ய முடிவதில்லை.
அஸ்பர்டேம் (aspartame)
இது இனிப்பு சுவைக்காகச் சேர்க்கப்படுவது. உணவில் உள்ள இனிப்புச் சுவையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய தற்காலத்தில், காலையில் எழுந்ததும் கழிவு நீக்கும் முதற் கடமையில் இனிப்பைச் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன?
புளோரைடு
பற்குழிவைத் தடுப்பதற்காகப் பற்பசையில் இது சேர்க்கப்படுகிறது. இதன் செயல்பாடு குறித்து இரு வேறுபட்ட கருத்துகள் ஆய்வாளர்களிடையே நிலவுகின்றன. அமெரிக்காவில் சில பகுதிகளில் நிலத்தாதுவில் புளோரைடு குறைவாக இருந்ததால், அதை ஈடுசெய்யப் பற்பசையில் புளோரைடு சேர்க்கப்பட்டது. ஆனால், அது போதுமான பலனைத் தரவில்லை என்பதே ஆய்வாளர்கள் கருத்து. மிகக் குறைவான அளவில் நீரில் இருந்தாலும் அந்த நீரைக்கொண்டு வாய்க் கொப்புளிக்கும்போது கிடைக்கும் பலன்கூடப் பற்பசை மூலம் கிடைப்பதில்லை என்பதோடு, எதிர் விளைவுகளைக் கொடுக்கும் என்றும் பல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். புளோரைடு உடலின் தேவைக்கு அதிகமாக உள்ளே செல்லும்போது மற்ற தாதுக்களைப் போல எளிதில் உடலை விட்டு நீங்குவதில்லை. மிக எளிதாகத் திசுக்களில் படிந்து விடுகிறது. ஆகையால், நமது சுரப்புகளைக் கூடுதலாக்கவோ குறைக்கவோ செய்வதோடு நரம்புச் செயல்பாடுகளுக்கும் கடுமையான பாதிப்புகளை இது ஏற்படுத்துகிறது. குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதன் தாக்கம் பேரளவு இருக்கும் என்பதால், புளோரைடு கலந்த பற்பசையைப் பல் மருத்துவர்கள் தவிர்க்கவே சொல்கின்றனர்.
புரப்பிலீன் கிளைக்கால் (propylene glycol)
பல் எனாமலின் ஒளிரும் தன்மைக்காக propylene glycol என்ற எண்ணெய்த் தன்மை கொண்ட ரசாயனம் சேர்க்கப்படுகிறது. பெயிண்டுகளின் உறையும் தன்மையைத் தவிர்ப்பதற்காகச் சேர்க்கப்படும் இந்த புரப்பிலீன் கிளைக்கால் நமது தோலிலும் கண்களிலும் அரிப்பை ஏற்படுத்தக் கூடும். நுரையீரல், பல உள்ளுறுப்புகளில் எரிச்சலை உண்டாக்கும்.
இளக்கும் தன்மை கொண்ட ‘புரப்பிலீன் கிளைக்கால்’தான் பல் துலக்கி முடித்தவுடன் உள்ளுக்குள் வினைபுரிந்து சுவாசம் எளிதான உணர்வைத் தருகிறது. ஆனால், ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையில் தோல், நுரையீரல் தொடர்பான பாதிப்புகளை இது உண்டாக்கியே தீரும்.
அளவைக் குறைப்போம்
காலையில் உடல் சோம்பிய நிலையில் நாம் பிரஷை எடுத்து அதில் பேஸ்டைப் பிதுக்குகிறோம். அவர்கள் பரிந்துரைப்பது பட்டாணி அளவுக்குத்தான் என்றாலும், நம் உடல் மீது கொண்ட அதீத அக்கறையில் ஒன்றரை அங்குல நீளத்துக்கும் பேஸ்டைப் பிதுக்குகிறோம். இது வெறுமே விளம்பரங்கள் வழியாக ஊட்டப்பட்ட ‘ப்ளாசிபோ’ தாக்கம் மட்டுமல்ல. பற்பசையில் சேர்க்கப்பட்டுள்ள போதை ஊக்கியின் நரம்புத் தூண்டல் ஆகும். நம்முடைய அன்றாடப் பயன்பாட்டில் உள்ள பற்பசை கொண்டு ஒருநாள் பல் துலக்கா விட்டாலும் எதையோ இழந்து விட்டதைப் போன்ற உணர்வு ஏற்படக் காரணம் மேற்படி ரசாயனக் கூறுகள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பதுதான். ஒரு பட்டாணி அளவுக்கு நாம் பயன்படுத்தும் பற்பசையின் வாழ்நாள் முழுமைக்குமான மொத்த அளவு 57 லிட்டர் என்கின்றனர் பல் நிபுணர்கள். அப்படியானால் பற்பசையின் வாயிலாக மட்டுமே நம் உடலில் சேரும் ரசாயனங்களின் அளவை நீங்களே கணக்கிட்டுகொள்ளுங்கள்.
(தொடரும்…)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர் தொடர்புக்கு: kavipoppu@gmail.com