Published : 23 Mar 2019 10:08 AM
Last Updated : 23 Mar 2019 10:08 AM

மூலிகையே மருந்து 49: சருமம் காக்கும் சிவனார் வேம்பு

நமது அறியாமையால் பயனற்று அழிவுக்கு ஆட்பட்டுக்கொண்டிருக்கும் பல்வேறு அற்புதத் தாவரங்களுள் சிவனார் வேம்பும் ஒன்று. “செவ்விய மேனி (தண்டு)… ஊதா நிறம் பூசிய சிவந்த இதழ்கள் (மலர்கள்)… பசுமையான சிறுசிறு கரங்கள் (இலைகள்)…” எனத் தகதகப்போடு ஒளிவீசும் மூலிகை ‘சிவனார் வேம்பு!’ ‘சிவனான வேம்புதனைச் செப்பக்கேளு செந்தணலின் மேனியாஞ்…’ -சிவனார் வேம்பு தாவரத்துக்கான அடையாளத்தைச் சுட்டிக்காட்டும் பாடல் வரி இது.

பெயர்க்காரணம்: ‘காந்தாரி’, ‘அன்னெரிஞ்சான் பூண்டு’, ‘இறைவன வேம்பு’ ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறது. தாவரத்தைப் பறித்த அன்றே உலர்த்தாமல் எரித்தாலும் புகையைக் கக்கும் மூலிகை இது.

இதன் காரணமாக அன்னெரிஞ்சான் (அன்றே எரிந்தான்) பூண்டு எனும் வழக்குப் பெயர் உருவாகியிருக்கிறது. சிவன் என்றால் ‘நெருப்பு’ என்ற ஆன்மிகத் தத்துவார்த்த அடிப்படையில், எரியும் தன்மையுடையதால் ‘சிவனார்’ வேம்பு எனும் தத்துவப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். வெப்பத்தை உண்டாக்கும் மூலிகையும்கூட!

அடையாளம்: இதன் தண்டில் வெள்ளி தூவியதைப் போன்ற ரோம வளரிகள் காணப்படும். மிகச் சிறிய அளவிலான முட்டை வடிவ இலைகளோடு செம்மண், மணற்பாங்கான இடங்களில் சாதாரணமாக வளரும். பனை மரங்கள் வாழும் பகுதியில் அதிக அளவில் தென்படும்.

இதன் தாவரவியல் பெயர் ‘இண்டிகோஃபெரா அஸ்பலதாய்ட்ஸ்’ (Indigofera aspalathoides). இதன் குடும்பம் ‘ஃபேபேசியே’ (Fabaceae). சிவனார் ‘வேம்பு’ என்ற பெயர் இருப்பினும், வேப்ப மரத்துக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. பீனால்கள் (Phenols), டேனின்கள் (Tannins) போன்ற நோய்களைத் தடுக்கும் வேதிப் பொருட்களைக் கொண்டுள்ளது.

உணவாக: முழுத் தாவரத்தையும் காயவைத்துப் பொடித்து, சம அளவு கற்கண்டு சேர்த்து அரைத் தேக்கரண்டி அளவு பாலில் கலந்து பருக, நாட்பட்ட நோய்கள் நீங்கி ஆயுள் கூடும் என்கிறது சித்த மருத்துவக் குறிப்பு. இதன் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வாய்ப்புண், பல்வலி மறையும். பல்வலிக்கு இதன் வேரைப் பயன்படுத்தும் வழக்கம் மலசர் பழங்குடியினரிடம் இன்றளவும் தொடர்கிறது.

நாயுருவி வேரைப் போலவே இதன் வேரையும் ‘பற்குச்சியாக’ப் பயன்படுத்தலாம். இலைகள், பூக்களை உலர்த்தி, குடிநீராகக் காய்ச்சி வழங்க, சருமத்தில் உண்டாகும் பெரும்பாலான உபாதைகள் நம்மை விட்டு விலகும். இரைப்பு நோயின் (ஆஸ்துமா) வீரியத்தைக் கட்டுப்படுத்த, முழுத் தாவரத்தையும் ஒன்றிரண்டாக இடித்து, தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்துப் பருகலாம்.

மருந்தாக: இதிலிருக்கும் எதிர்-ஆக்ஸிகரணிப் பொருட்கள், புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைத் தடுப்பதற்குக் காரணமாவதாக விலங்குகளில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவு குறிப்பிடுகிறது. கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் அரணாகவும் சிவனார் வேம்பு செயல்படுகிறதாம். காயம் ஏற்பட்ட இடத்தில் நிகழ வேண்டிய நுணுக்கமான மீள் உருவாக்கப் பணிகளைச் சிவனார் வேம்பின் சாரங்கள் விரைவுபடுத்துவதாகக் குறிப்பிடுகிறது ஆய்வு.

பாக்டீரியாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தும் செயல்பாடும் இதற்கு இருக்கிறது. தோல் நோய்களில் உண்டாகும் தொற்றுகளைத் தடுக்கும் இதன் ஆற்றலும் ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது. இதற்கு இருக்கும் வலிநிவாரணி, வீக்க முறுக்கி செய்கைகள், மூட்டு நோய்களுக்கான மருந்தாகவும் இதைப் பயன்படுத்தலாம் என்பதை அறுதியிடுகின்றன.

வீட்டு மருந்தாக: இதன் வேரோடு வாலுழுவை அரிசி சேர்த்து, கருடன் கிழங்குச் சாற்றில் அரைத்து, வில்லைகளாகச் செய்து குழித்தைல முறைப்படி தயாரிக்கப்படும் ‘சிவனார் வேம்பு குழித்தைலம்’ கரப்பான், தேமல், சொறி, சிரங்கு, காளாஞ்சகப்படை எனப் பல்வேறு வகையான தோல் நோய்களுக்கு அருமருந்து. குழிக்குள் மூலிகைகளை ஏந்திய பானையை வைத்துச் சுற்றி எருவாக்கி, புடம் போட்டு வடித்தெடுக்கப்படும் குழித்தைலத் தயாரிப்பு முறை சித்த மருத்துவத்தின் சிறப்பு.

அதில் சிவனார்வேம்பு குழித்தைலம் தோல் நோய்களுக்கான கோடரி! சிவனார் வேம்பு குழித்தைலத்தில் சிவனார் வேம்பு சூரணத்தை அளவிட்டுக் கொடுக்க மிகப் பெரிய தோல் நோய்களுக்கான தீர்வு கிடைக்கும். மருத்துவர் ஆலோசனைப்படி உள், வெளி மருந்தாகப் பயன்படுத்த உகந்த பலன் கிட்டும்.

‘குட்டஞ் சிரங்கு குறைப்புப் பிசமாந்தை…’ எனும் சிவனார் வேம்பின் மருத்துவக் குணத்தை விளக்கும் சித்த மருத்துவப் பாடல் இரைப்பு, மாந்தம், தோல் நோய்கள் போன்றவற்றுக்குச் சிவனார் வேம்பு தரமான மூலிகை என்பதைத் தெரிவிக்கிறது.

‘சிவனார் வேம்பு சூரணம்’ சித்த மருத்துவத்தின் முக்கியமான கருவிகளுள் ஒன்று. சிவனார் வேம்போடு பரங்கிப்பட்டை எனும் மூலிகையையும் சேர்ந்துகொண்டால் போதும், தோல் நோய்களை அண்ட விடாமல் துரத்தலாம். கைப்புச் சுவையைத் தன்னகத்தே கொண்டிருக்கும் சிவனார் வேம்பு, நோய்களை அகற்றி இனிமையான முடிவுகளைக் கொடுக்கும்.

பெருநோய் எனச் சித்த மருத்துவத்தில் சுட்டப்படும் குஷ்ட நோய்க்கான மருந்துத் தயாரிப்பில் சிவனார் வேம்பு முக்கியப் பங்காற்றுகிறது. சிவனார் வேம்பைப் பால்விட்டு அரைத்து, பாலிலேயே கலந்து பருக, நீண்ட நாட்களாகப் படுத்தும் பாதவெடிப்பு, நீர்க் கசியும் கரப்பான் மறையும். மூட்டுகளில் குத்தும் வாத நோய்களுக்கும் சிறப்பாகச் செயல்படும்.

இதன் வேரை வெண்ணெய் சேர்த்து அரைத்து, வீக்கங்களுக்குப் பூசலாம். நல்லெண்ணெய்யோடு சிவனார் வேம்பு வேர், அறுகம்புல் சாறு சேர்த்துக் காய்ச்சி, அரிப்பையும் அவஸ்தையும் கொடுக்கும் சிரங்கு நோய்க்குப் பூச, தேகத்தில் புது விடியல் பிறக்கும். தாவரத்தின் சாம்பலை எரித்து நல்லெண்ணெய்யில் இட்டு காய்ச்சி, பொடுகைப் போக்கும் எண்ணெய்யாகப் பயன்படுத்தலாம்.

இதே சாம்பலைத் தேங்காய் எண்ணெய்யில் குழைத்துக் காணக்கடி, சொறி, தேமல் போன்ற தோல் நோய்களுக்குத் தடவலாம். சிவனார் வேம்பு, நெல்லி வற்றல்… ஆகியவற்றை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, வாய்க் கொப்பளிக்க ஈறு, நாவில் ஏற்படும் புண்கள் மறையும். சிவனார் வேம்பு… சரும நோய்களை விரட்டும் மூலிகை அம்பு!…

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x