

உடலில் நோய்களும் வாழ்வில் சிக்கல்களும் அதிகரித்து வரும் தற்காலத்தில் மலையேற்றப் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. மலையேற்றப் பயிற்சியின் மூலம் நான்கு வயதுக் குழந்தைகள் முதல் எழுபது வயது முதியவர்கள்வரை உடல்நலனில் மேம்பாடு அடைய முடியும். மலையேற்றம் என்பது, எதையாவது காண வேண்டும் என்ற இலக்கை நோக்கிச் செல்வதல்ல; அது உடலின் ஒவ்வொரு செல்லையும் முழு வேகத்துடன் சுருங்கி விரிய வைத்து, அவற்றை முழுமையாகச் சுத்திகரிப்பது.
மலையேற்றத்துக்குப் பின்னான ஆழ்ந்த தூக்கத்துக்குப்பின், வாழ்வில் ஒருபோதும் அனுபவித்திராத புத்துணர்ச்சியை நாம் பெற முடியும்.
ஆற்றல் மிகுந்த புதிய உடல்
மலையேற்றத்தின்போது, நமது உடலின் சுமார் 65 கிலோ எடையை மேல்நோக்கி உந்துவதற்கு அதீத ஆற்றல் தேவைப்படுவதால், தன்னுள் தேங்கியுள்ள கழிவை உடல், அவசர அவசரமாக வெளியேற்றும். கழிவு நீங்கிய வெற்றிடத்தில் மலைப்பகுதியில் நிலவும் மாசில்லாக் காற்றும் மரங்களின் பசுமை நிரம்பிய இலைகள் தாய்மையுடன் அள்ளி வழங்கும் வளி (ஆக்சிஜன்) ஆற்றலும் வெகுவேகமாக நிரப்பப்படும்.
காய்ச்சலின்போது உடலின் பழைய செல்களும் கழிவுகளும் எரிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட புதிய உடலைப் பெறுகிறோம். ஆனால், காய்ச்சலில் இருந்து மீண்டெழுந்த ஓரிரு வாரங்களுக்குப் பின்னரே உடல் பழைய ஆற்றலைக் காட்டிலும் கூடுதலான ஊக்கத்துடன் இயங்கும். ஆனால், மலையேற்றத்தினால், ஆற்றல் நிறைந்த புதிய உடலை ஓரிரு நாட்களிலேயே பெற்றுவிட முடியும்.
எங்கு மலையேறலாம்?
உடல் தயாராக இருந்தால், மலைப் பயிற்சியை நமக்குச் சாத்தியப்படும் நேரத்தில், எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை 150 – 200 கி.மீ. ஆரத்தில் நம்மால் ஓர் அடிவாரத்தைச் சென்றடைய முடியும். சென்னைவாசிகளுக்கு இருக்கவே இருக்கிறது திருக்கழுக்குன்றம். அவரவர் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது மலையேறி வர வேண்டியதுதான்.
கடற்கரையில் மெள்ளோட்டம்
மலையேற்றப் பயிற்சியில் பெறுவதைவிடக் கூடுதலான புத்துணர்ச்சியைக் கடற்காற்றை சுவாசிப்பதில் பெற முடியும். கடற்காற்றுச் சுவாசத்தின் மூலமாக நமது உடலுக்குத் தேவையான ரசாயனக் கூறுகள் உடலினுள் நிரப்பப்படும்போது, உடலின் இயக்கம் விரைவுபடுவதோடு தோலின் நிறமும் புத்தொளி பெறும்.
காலையில் உயிராற்றல் நிரம்பிய நான்கரை, ஐந்து மணி சுமாருக்கு 10 -20 நிமிடங்கள் மூச்சிரைக்க ஒரு மெதுவோட்டம் சென்று உடலைத் தளர்த்தி, பின்னர் கடற்கரை மணற்பரப்பில் உடலைத் தளர்வாகக் கிடத்தி, சுமார் ஒரு மணிநேரம் நிதானமாக மூச்சை வெளிவிட்டு அதே அளவுக்கு நிதானமாக உள்ளிழுக்க வேண்டும்.
மூச்சை நிதானமாக வெளியேற்றும் நேரம் சுமார் 30 நொடிகள் என்றால் எவ்வளவு முயன்றாலும் உள்ளிழுக்கும் நேரத்தை நம்மால் 20 நொடிகளுக்கு மேல் நீட்டிக்க முடியாது. வெளியேற்றுதல் உள்ளிழுத்தல் இரண்டையும் சம அளவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அதற்காக உள்ளிழுக்கும் நேரத்தை விரைவுபடுத்தி விடக் கூடாது.
சிதைவை மட்டுப்படுத்தும் கடற்காற்று
பூமி தன் மடியில் புதைத்துவைத்துள்ள தாதுகளின் ரசாயனக் கூறுகள் அனைத்தையும் கடல் நீர் ஈர்த்து, அலையடித்தல் வாயிலாகக் காற்றில் கலந்து சதா அனுப்பிக்கொண்டே இருக்கிறது. கடற்கரையில் நீண்ட (குறைந்தது ஒரு மணி) நேரம் சுவாசப் பயிற்சி மேற்கொண்டால் நம்முடைய நுரையீரல் நல்ல காற்றால் நிரப்பப்படும். மேலும், செல்லில் ஊடகமாக இருக்கும் அயன், (ion) கடற்காற்றில் நிரம்பியுள்ள ரசாயனக் கூறுகளை ஈர்த்து வைத்துக்கொள்ளும். கடற்காற்றில் எதிர் ஹைட்ரஜன் (negative hydrogen) அதிகமாக இருப்பதால் உடலால் அதிக ஆக்சிஜனைப் பெற முடியும். அதாவது உடலின் சிதைவு வேகம் மட்டுப்படும்.
காற்றே நமது உயிரின் மூலாதாரம் என்பதால், அதைக் குறித்துச் சற்று விரிவாகவே பார்த்தோம். அடுத்து ‘நீர்’ குறித்துப் பார்ப்போம். நம் உடலின் பல உறுப்புக்கள் நீரை ஆதாரமாகக் கொண்டு இயங்குகின்றன. அவற்றில் விளக்கி வைத்தது போலப் ‘பளிச்’சென்று முத்துபோல மின்னுவது எது என்று சொல்லுங்கள்….. ஒருவாரம் அவகாசம் தருகிறேன்.
(தொடரும்...)
தொடர்புக்கு: கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com