மூலிகையே மருந்து 42: முழு ஆரோக்கியம் தரும் அமுக்கரா

மூலிகையே மருந்து 42: முழு ஆரோக்கியம் தரும் அமுக்கரா
Updated on
2 min read

உடலுக்கு வலிமை தரக்கூடிய மூலிகை அமுக்கரா! உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்கும் ‘ஆரோக்கிய மீட்பாளர்’ இது! ‘பெண்களுக்குத் துணை சதாவேரிக் கிழங்கு; ஆண்களுக்குத் துணை அமுக்கரா கிழங்கு’ எனும் மூலிகை மொழி, இதன் மருத்துவப் பெருமையைப் பறைசாற்றுகிறது.

பெயர்க்காரணம்:  அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், அசுவகந்தம், இருளிச்செவி, வராககர்ணி, கிடிச்செவி ஆகிய மாற்றுப் பெயர்களைக் கொண்டது அமுக்கரா. ‘கந்தம்’ என்றால் கிழங்கு என்ற ரீதியில் அசுவ‘கந்தம்’ என்றழைக்கப்படுகிறது. குதிரை (அசுவம்-குதிரை) பலத்தை வழங்கும் என்பதால் ‘அசுவ’கந்தா என்ற பெயர்.

அடையாளம்: இரண்டு முதல் மூன்றடிவரை வளரும் செடி வகை. முட்டை வடிவம் கொண்ட இலைகளின் மேற்பரப்பில் மெல்லிய ரோம வளரிகள் காணப்படும். சிவப்பு நிறத்தில் சிறிய அளவிலான காய்களைத் தாங்கியிருக்கும். ‘விதானியா சோம்னிஃபெரா’ (Withania somnifera)  எனும் தாவரவியல் பெயர் கொண்ட அமுக்கரா, ‘சொலானேசியே’ (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்தது.

‘விதானோலைட்’ (Withanolide), ‘விதாஃபெரின்’ (Withaferin),  ‘சைடோஇண்டோசைட்ஸ்’ (Sitoindosides), ‘சோம்னிஃபெரைன்’ (Somniferine) போன்ற நலம் பயக்கும் வேதிப்பொருட்கள் இதில் உள்ளன.

உணவாக: பாலில் வேகவைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட அமுக்கரா சூரணத்தை, பாலில் கலந்து பருக, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அவற்றின் தரமும் அதிகரிக்கும். மனத்தைச் சாந்தப்படுத்தி ஆழ்ந்த உறக்கத்தை வரவழைக்கும் பானமாகவும் இந்த ‘அமுக்கரா-பால்’ பயன்படும்.

தூக்க மாத்திரைகளை நாடுவதற்கு முன்னர், அமுக்கரா எனும் இயற்கை உறக்கம் உண்டாக்கியை முயலலாம். சந்தையில் கிடைக்கும் ஊட்டச்சத்துப் பொடிகளுக்கு மாற்றாக, அமுக்கரா பொடியோடு பாதாம், பனங்கற்கண்டு சேர்த்து, உடல் நலிவுற்றவர்களுக்கு ஊட்டமாக வழங்கலாம்.

அமுக்கரா பொடி இரண்டு பங்குடன், கற்கண்டு பொடி ஆறு பங்கு சேர்த்து, அரைக் கரண்டியளவு தேனில் குழைத்து அல்லது பாலில் கலந்து சாப்பிட்டு வர, பலவீனத்தால் ஏற்படும் நடுக்கம் மறையும். வாதம், கபம் பிறழ்வதால் ஏற்படும் நோய்களுக்கான அற்புதமான மருந்து அமுக்கரா. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சினைக்கு அமுக்கரா சார்ந்த மருந்துகள் பலன் தரக்கூடியவை.  

மருந்தாக: அமுக்கராவை நவீன அறிவியல் பல கோணங்களில் ஆராய்ச்சிசெய்து, அதன் நோய் எதிர்ப்பு ஆற்றலை அறிந்து வியப்பு கொள்கிறது. எயிட்ஸ் நோயாளிகளிடையே நடத்தப்பட்ட சித்த மருத்துவ ஆய்வில், அமுக்கரா சூரணத்தின் பங்கு சிறப்பு வாய்ந்தது. இதன் எதிர்-ஆக்ஸிகரணி தன்மை குறித்தும், மூளையின் நரம்புகளைப் பாதுகாக்கும் ஆற்றல் குறித்தும் நிறைய ஆய்வுகள் விவரிக்கின்றன.

வயோதிகத்தில் ஏற்படக்கூடிய மறதியைத் தள்ளிப் போடும் ஆற்றல் இதற்கு இருக்கிறது. இதிலிருக்கும் ‘விதனலாய்டிற்கு’ மனப் பதற்றத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. புற்று நோய்க் கட்டிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது அமுக்கரா கிழங்கின் பேராற்றல்!

வீட்டு மருந்தாக: நீர்முள்ளி விதை, குறுந்தொட்டிவேர், வெள்ளரி வேர், அமுக்கரா கிழங்குப் பொடி ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட்டுவர, விந்தணுக்கள் சார்ந்த குறைபாடுகள் நீங்கும். இதன் இலைகளுடன் மிளகு சேர்த்து தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து வழங்க, காய்ச்சலின் தீவிரம் தணியும்.

‘பாலும்  பழமும்’ எனும் பதத்தை, இளம் தம்பதியினருக்கான வாக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அவ்வகையில் ‘பாலும் அமுக்கரா பொடியும்’ என்பதை நாற்பதைக் கடந்தவர்களுக்கான மூலிகை மந்திரமாகச் சொல்லலாம். அதே நேரத்தில், ஆண்களுக்கு உண்டாகும் பாலியல் பிரச்சினைகளுக்கான ‘மூலிகை வயாகராவாக’ மட்டுமே அமுக்கரா பார்க்கப்படுகிறது.

ஆனால் அது மட்டுமல்லாமல், உடல் பலவீனம், பசியின்மை, இருமல், ரத்தக் குறைவு, வாயுக் கோளாறுகள், வாத நோய்கள் எனப் பல்வேறு பரிமாணங்களில் பயன்படக்கூடியது அமுக்கரா!

அமுக்கரா கிழங்கு, பாதாம் பருப்பு, பிஸ்தா, சுக்கு, பனங்கற்கண்டு சேர்த்து பாலிலிட்டுக் கொதிக்க வைத்துப் பருக, உடலுக்கு உடனடியாக ஊட்டம் கிடைக்கும். நீரிழிவு போன்ற தொற்றா நோய்களின் பிடியில் நீண்ட நாட்களாகச் சிக்கித் தவிப்பவர்களின் உள்ளுறுப்புகள் சோர்ந்துவிடாமல் பாதுகாக்கும் தன்மை அமுக்கராவுக்கு உண்டு. நாட்பட்ட தோல் நோய்களுக்கு இதன் கிழங்கை வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தும் மருத்துவ நுணுக்கமும் சித்த மருத்துவத்தில் இருக்கிறது.

அமுக்கரா கிழங்கு, ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, சிறுநாவற் பூ ஆகியவற்றுடன் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் ‘அமுக்கரா சூரணம்’ எனும் சித்த மருந்து, பல நோய்களுக்கான எதிரி! மற்ற மருந்துகளின் ஆற்றலை அதிகரிக்கவும், சில மருந்துகளைச் சுமந்து செல்லும் வாகனமாகவும் அமுக்கரா சூரணம் பயன்படுகிறது.

இதன் கிழங்குடன் சில மூலிகைகள் சேர்த்து நல்லெண்ணெய்யை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் தலை முழுகும் எண்ணெய் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதில் மாயங்கள் நிகழ்த்தும்.

அமுக்கரா கிழங்கு பொடி, கேழ்வரகு மாவு, சுக்குத் தூள், கஸ்தூரி மஞ்சள் இணைந்த கலவையை, சாதம் வடித்த தண்ணீரில் குழைத்து வீக்கங்களின் மீது தடவி வர விரைவில் குணம் கிடைக்கும். அமுக்கரா, சிற்றாமுட்டி தாவரத்தின் உதவியுடன் தயாரிக்கப்படும் ‘அசுவகந்தாதி எண்ணெய்’, வெளிப்பிரயோகமாகப் பயன்படும் சிறந்த உடல்பிடி மருந்து.

அமுக்கரா!...  ஆரோக்கியத்துக்கான பலமான அஸ்திவாரம்…

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in