

கடந்த வாரம், செயலிகளின் மூலம் நமது பழக்கவழக்கங்களை எப்படி மேம்படுத்துவது எனப் பார்த்தோம். இந்த வாரம் செயலிகளின் மூலம் நமது பண வரவை எப்படி அதிகப்படுத்தலாம், நம் கடனை எப்படி அடைக்கலாம் எனப் பார்ப்போம்.
நமது நிதி நிலையை மேம்படுத்தவும் கடனில் இருந்து விடுபடவும் பல நிறுவனங்கள் பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையில் பல நல்ல செயலிகளை உருவாக்கியுள்ளன. இந்தச் செயலிகள், நம்முடைய வரவு செலவுக் கணக்குகளை முறையாக ஆராய்ந்து நமக்குத் தகவல்களை அளிக்கின்றன. மேலும், தேவையான நேரத்தில் நம்மை எச்சரித்து, உகந்த ஆலோசனைகளையும் அவை நமக்கு வழங்குகின்றன.
தேவையற்ற செலவுகளைச் செய்வதும் கடன் வாங்குவதும் சிலருக்கு ஒரு பழக்கமாகவே மாறிப்போயிருக்கும் அவர்களால் இதைக் கட்டுப்படுத்த முடியாது அந்த மாதிரியான நபர்களுக்கு, நிதி மேலாண்மையை மேம்படுத்தவும் கடன் வாங்குவதைக் குறைக்கவும் ஆலோசனை வழங்கி, அதையே ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ளவும் இந்தச் செயலிகள் உதவுகின்றன.
மிண்ட் (Mint)
நிதி மேலாண்மைச் செயலிகளில் மிகவும் புகழ்பெற்றது மிண்ட். கூகுள் ப்ளே ஸ்டோரிலும் ஆப்பிள் ஸ்டோரிலும் இதை இலவசமாகப் பெறலாம். ஒருவேளை உங்களுக்குத் தேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை தேவை என்றால் அதற்கேற்பப் பணம் கட்டி ஆலோசனை பெறலாம்.
உங்களின் அனைத்து விதமான வரவு செலவுகளையும் இந்தச் செயலி கண்காணிக்கும். உங்களின் மாதச் செலவுகளை இது அழகாகப் பிரித்து, பகுப்பாய்வு செய்து வரைபடங்களாகக் காட்டிவிடும். ஒவ்வொரு மாதமும் அவசியச் செலவு எது, தேவையற்ற செலவு எது என்பதைச் சுட்டிக் காட்டுவதன்மூலம், அடுத்த முறை நீங்கள் அந்தச் செலவு செய்யும்போது உங்களை எச்சரிக்கும்.
ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டால், அடுத்த மாதம் அந்தக் குறிப்பிட்ட தொகையைத் தாண்டும்போது இந்தச் செயலி உங்களுக்கு எச்சரிக்கை அளிக்கும். இந்தச் செயலியின் உதவியுடன் உங்கள் முதலீடுகளையும் நீங்கள் எளிதாகக் கண்காணிக்கலாம். நேரடியாக நிபுணர்கள் ஆலோசனை பெற வேண்டும் என்றாலோ மேம்படுத்தப்பட்ட ஆலோசனைகள் பெற வேண்டும் என்றாலோ நீங்கள் பணம் கட்ட வேண்டும். இதேபோல் ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் எங்கு முதலீடு செய்யலாம் என்பது பற்றிய ஆலோசனைகளையும் இந்தச் செயலி இலவசமாக வழங்குகிறது.
டெய்லி பட்ஜெட் (Daily Budget)
முழுக்க முழுக்கச் செயற்கை அறிவுத் திறனாலும் உளவியல் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தச் செயலி, ஆப்பிள் ஸ்டோரில் மட்டுமே கிடைக்கிறது. மிண்ட் போலவே இதுவும் இலவசமாகவே கிடைக்கும். ஒருவேளை உங்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவைகள் வேண்டும் என்றால், நீங்கள் பணம் கட்ட வேண்டும். நீங்கள் சென்ற மாதத்தைவிடக் குறைவாகச் செலவு செய்து, அதிகமாகச் சேமித்தால், இந்தச் செயலி உங்களைப் பாராட்டும்.
செயற்கை அறிவுத் திறன் உதவியுடன் உங்களின் வரவு -செலவுத் தரவுகளை ஆய்வுசெய்து உங்களுக்குப் பொருத்தமான ஆலோசனைகளை வழங்குவதுடன், செலவுகளை நீங்கள் எப்படிக் கட்டுப்படுத்தலாம், எந்த மாதிரியான நிதிப் பழக்க வழக்கங்களை நீங்கள் தொடங்க வேண்டும் என்பது போன்ற ஆலோசனை களையும் அது வழங்கும்.
என்ன வரவு வருகிறது, என்ன செலவு செய்கிறோம் என்பதைப் பற்றிய தெளிவான தகவல்கள் இருந்தால் முடிந்த அளவு செலவைக் குறைத்துச் சேமிப்பை அதிகப்படுத்த முடியும். இந்தச் செயலிகள் நம்மிடம் இருந்தால், அது எளிதில் நமக்குக் கைகூடும்.
(தொடரும்..)
கட்டுரையாளர்,
டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com