Published : 16 Feb 2019 12:03 pm

Updated : 16 Feb 2019 14:32 pm

 

Published : 16 Feb 2019 12:03 PM
Last Updated : 16 Feb 2019 02:32 PM

மூலிகையே மருந்து 44: கபத்தை விரட்டும் சிற்றரத்தை

44

பெரிதும் பேசப்படாத சிற்றரசர்கள், எதிர்பாராத நிலையில் வலிமையான பேரரசனுக்கு நெருக்கடி தந்து வீழ்த்துவதைப் போல, மூலிகைகளில் அவ்வளவாகக் கவனிக்கப்படாத சிற்றரத்தை, வலிமைமிக்க கப நோய்களிடம் கடுமையாகப் போராடி அவற்றை வேரோடு அறுத்துத் தள்ளும். மூலிகைகளின் நோய் அகற்றும் தரத்தை, சிரத்தையுடன் உயர்த்திப் பிடிக்கும் அற்புதமான மூலிகை இது.

‘அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்’ என்ற வழக்கு மொழி, கப நோய்களை வெட்டி வீழ்த்தும் அரத்தையின் வீரத்தைச் சொல்கிறது. ‘அரத்தை இம்பூறல் முசுமுசுக்கை கோவை அதிமதுரம் இளக்கும் கோழை’ எனும் கோழையை வெளியேற்றும் மூலிகைத் தொகுப்பில் அரத்தைக்குச் சிறப்பான இடமுண்டு.

ஆரம்ப காலத்தில் மணமூட்டியாகச் சமையலில் இடம்பிடித்த சிற்றரத்தைக்கு மிகப் பெரிய மருத்துவப் பாரம்பரியம் உண்டு.பெயர்க்காரணம்: அரத்தை எனும் பிரிவில், சிற்றரத்தை, பேரரத்தை ஆகிய வகைகள் உள்ளன. ‘சிறிய அரத்தை’ என்றும் ‘அரத்தை’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் வேர்க் கிழங்கின் செவ்விய நிறத்தை வைத்து அரத்தை எனும் பெயர் உருவானதாகக் கூறுவார்கள்.

அடையாளம்: பார்வைக்கு இஞ்சிச் செடிபோல் தோற்றமளிக்கும். குறுகிய அகலம் கொண்ட ஈட்டி வடிவ இலைகளை உடையது. வாசனைமிக்க இதன் வேர்,

மருத்துவக் குணங்களுக்குக் காரணமாகிறது. ‘ஜிஞ்சிபெரேசியே’ (Zingiberaceae) குடும்ப உறுப்பினரான சிற்றரத்தைக்கு, ‘அல்பீனியா அஃபிசினாரம்’ (Alpinia officinarum) என்பதே தாவரவியல் பெயர். ‘சினியோல்’ (Cineole), ‘அபிஜெனின்’ (Apigenin), கேம்ஃபெரால் (Kaempferol), ‘ஐஸோராமெடின்’ (Isorhamnetin) போன்ற தாவர வேதிப்பொருட்கள் சிற்றரத்தையில் குடியிருக்கின்றன.

உணவாக: ‘சிற்றரத்தை மூலிகைக் காரக் குழம்பு’, கப நோய்களால் அவதிப்படும்போது எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ‘விருந்தாகும் மருந்து’. தனது அடுத்த தலைமுறையினரின் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்ட, பாட்டிகளின் சமையல் மெனுவில் அடிக்கடி இடம்பெறும் ரெசிப்பி இந்தக் காரக் குழம்பு!

பாடகர்களின் குரல் வளத்தைப் பொக்கிஷமாகப் பாதுகாக்க, சிற்றரத்தை சேர்த்த மிளகு ரசத்தை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சுரம், தலைபாரம் உண்டாகும்போது, ‘சிற்றரத்தை கஷாயம்’ முக்கியமான மருந்தாக அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. சிற்றரத்தைத் துண்டைக் கஞ்சி வகைகளில் சேர்த்துக் கொதிக்கவைத்துப் பருக, எலும்பு சார்ந்த ரோகங்களின் தீவிரம் குறையும்.

சளி, இருமல் குறிகுணங்கள் குழந்தைகளைத் தாக்காமல் இருக்க, சிற்றரத்தையை நெருப்பில் சுட்டு, தேனில் குழைத்து வழங்கும் வழக்குமுறை, மருத்துவப் பாரம்பரியம் உள்ள கிராமங்களில் இன்றும் பின்பற்றப்படுகிறது. தொண்டை கரகரப்பா! கவலை வேண்டாம், சிறுதுண்டு சிற்றரத்தையை வாயிலிட்டு மெய்மறந்து சுவைத்துப் பாருங்கள், தொண்டைக் குழி மகிழும்!

சிற்றரத்தையை நீரில் ஊறவைத்து வாய் கொப்பளிக்க, வாய், நாக்கில் உண்டாகும் புண்கள் மறைவதோடு சுகாதாரச் சீர்கேட்டால் ஏற்படும் வாய் நாற்றத்துக்கும் தீர்வு கிடைக்கும். கப நோய்களைப் போக்க ‘சிற்றரத்தை மணப்பாகு’ நல்ல பலனைக் கொடுக்கும்.

மருந்தாக: வாந்தியைக் கட்டுப்படுத்தும் வேதிப்பொருட்கள், சிற்றரத்தையில் நிறையவே இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. பாக்டீரியாவுக்குள் நுழைந்து உறையைச் சிதைத்து, அவற்றைச் செயலிழக்க வைக்கும் ஆற்றல் இதன் சாரங்களுக்கு இருப்பதாக ஆய்வு பதிவிடுகிறது.

புற்று செல்களின் பரவும் வீரியத்தை இதிலிருக்கும் நுண்கூறுகள் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. எதிர்-ஆக்ஸிகரணி தன்மையுடன் இருப்பதால், பல நோய்களை எதிர்க்கும் ஆற்றலை உடலுக்கு வழங்கும்.

வீட்டு மருந்தாக: அரத்தையைப் பொடி செய்து மூன்று கிராம் அளவு தேனில் குழப்பிக் கொடுக்க, இருமல், சுரம், நுரையீரலில் சேர்ந்திருக்கும் கபம் போன்றவை மாயமாய் மறையும். அரத்தையைத் தண்ணீரில் ஊறவைத்துத் தயாரிக்கப்படும் ஊறல்-பானம், கப நோய்கள் தாக்காமல் பாதுகாக்கும் அரண் போன்றது. பித்த சேர்க்கையுடன் கோழை இறுகும்போது, சிற்றரத்தையுடன் சிறிது கற்கண்டையும் சேர்த்து வழங்கலாம். மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பற்பொடிகளில் சிற்றரத்தை வேர், நீக்கமற இடம்பிடிக்கிறது.

கார்ப்புச் சுவையுடன் உடலுக்குத் தேவைப்படும் வெப்பத்தைக் கொடுக்கும் சிற்றரத்தை, கபத்தைக் குறைக்கும் பேராயுதம்! குழந்தைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் ‘உறை மாத்திரை’, சுர வகைகளுக்கான ‘சன்னிவாத சுரக் குடிநீர்’ போன்ற சித்த மருந்துகளின் செயல்பாடுகளுக்குத் துணை நிற்பது சிற்றரத்தை. கோழையகற்றி, பசித்தூண்டி செய்கைகளைக் கொண்டது.

காய்ச்சல், விடாத இருமல், தலைபாரம் போன்ற குறிகுணங்களுக்கு, சிற்றரத்தை, அதிமதுரம், திப்பிலி, மிளகு ஆகியவற்றை நன்றாக அரைத்து, தண்ணீரிலிட்டு நுரைபொங்கக் கொதிக்கவைத்து, தேனும் பனைவெல்லமும் கலந்து குடிக்க, மாற்றத்தை விரைவில் உணரலாம். சிற்றரத்தை, சுட்ட வசம்பு, சுக்குத் தூள் ஆகியவற்றை வெற்றிலையில் வைத்து, சுண்ணம் தடவுவதுபோல் தேன் தடவிச் சாப்பிட, இறுகிய கோழை குழைந்து வெளியாகும்.

அரிப்பு, நீர்க்கசிவோடு துன்பப்படுத்தும் கரப்பான் நோயின் குறிகுணங்களைக் குறைக்கவும் சிற்றரத்தை சிறந்த மருந்து. ‘கபமுத்தோடஞ் சீதமொடு நேர்ந்தசுரம்… இருமலுந்தீரும் சிற்றரத்தை வன்மருந்தால் தேர்…’ எனும் தேரன் குணவாகடப் பாடல், கபம் தொடர்பான நோய்களுக்கு இதன் பங்கு குறித்து விவரிக்கிறது.

சிற்றரத்தையைப் போல, பேரரத்தைக்கும் (Alpinia galanga) அனைத்து மருத்துவக் குணங்களும் உண்டு. ‘அட்டவகை’ எனும் எட்டு மூலிகைகள் அடங்கிய மூலிகைத் தொகுப்பில் சிற்றரத்தையும் பேரரத்தையும் முதன்மையானவை.

சிற்றரத்தை… அறிந்தவர்களுக்கு அள்ளித்தரும் ஆரோக்கிய வரத்தை!

- கட்டுரையாளர்,
அரசு சித்த மருத்துவர் தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

மூலிகையே மருந்து மூலிகை அறிமுகம் மூலிகை மருத்துவம் சித்த மருத்துவம்இயற்கை மருத்துவம் சிற்றரத்தை சிற்றரத்தை பலன்கள் சிற்றரத்தை நன்மைகள்

You May Like

More From This Category

More From this Author